சற்றுமுன்

கண்ணதாசனின் மாங்கனி

கண்ணதாசனின் மாங்கனி

கல்லக்குடிப் போராட்டம் காரணமாகத் திருச்சி மத்திய சிறையில் இருந்தபோது, (1954-இல்) மாங்கனி எழுப்பட்டது. வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு குறுங்காவிய நாடகம் போன்றது தான் மாங்கனி. கவிஞர் எழுதிய காவியங்களில் மாபெரும் பாராட்டுப்பெற்றது இதுவெனலாம்.

மோரிய மன்னன் அறுகையோடு மோகூர்க் குறுநில மன்னன் பாண்டியன் பழையன் என்பவன் பகைமை கொண்டதாகவும், அறுகைக்கு உதவியாகச் சேரன் செங்குட்டுவன் பழையன் மீது போர் தொடுத்ததாகவும் காணப்பட்ட ஒரு குறிப்பை வைத்து மாங்கனியைப் புனைந்ததாகக் கவிஞர் கண்ணதாசன் தம் நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். மேலும் இக்காவியத்தில் அமைச்சராக வரும் அழும்பில் வேளுக்கு ஒரு மகன் இருந்ததாக வரலாற்றில் குறிக்கப்படவில்லை; ஆனால், கவிஞர் படைத்துள்ளார். அதேபோல, சேரன் செங்குட்டுவன் படையெடுத்துச் செல்லும் இடங்களுக்கெல்லாம் கணிகையர் சிலரும் அழைத்துச் செல்லப்படுவதுண்டு எனும் வரலாற்றுக் குறிப்பினைக் கொண்டு, அதிலே ஒருத்தியாகக் கவிஞரின் கற்பனையில் பிறந்தவள் தான் இக்காவிய நாயகி மாங்கனி.

தென்னரசி, பொன்னரசி கவிஞர் படைத்த கற்பனைப் பாத்திரங்கள், காதல் சம்பவங்களை, காவியத்தைச் சுவையாக அமைக்கப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. மாங்கனியில் அகப்பொருள், புறப்பொருள் எனும் இரண்டு பொருள்கள் பற்றியும் கவிதை புனைந்திருப்பதைக் காணலாம். இலக்கண வரம்பை மீறி உணர்ச்சி நிரம்பிய நடையுடன் எழுதப்பட்டுள்ள இந்தக் காவியத்தின் ஒரு பகுதி, கவிஞர் நடத்திய தென்றல் எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. பின்னர் முழுமையாக நூல்வடிவம் பெற்றது. ‘கண்ணதாசன் கவிதைகள்’ முதல் தொகுதியில் மாங்கனி’ இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரான கவியரசு கண்ணதாசன், 24-06-1927-இல் சிறுகூடல்பட்டியில் பிறந்தார். தந்தை சாத்தப்பன், தாய் விசாலாட்சி என்பவர். கண்ணதாசன் இளமையிலேயே கவிபுனையும் ஆற்றல் பெற்றவர். 1944-இல் ஏப்ரல் 14-இல் இவரது முதல் கவிதை அச்சாகியது. 1948இல் சேலம் மாடர்ன் தியேட்டரில் பணி செய்தார். அறிஞர் அண்ணாவின் பேச்சுகளால் கவரப்பட்டு 1949-இல் தி.மு.க-வில் நுழைந்தார். சுமார் பத்து ஆண்டுகள் தி.மு.க-வின் கருத்துகளைத் தம் எழுத்துகளில் வடித்தார். பின்னர்த் தமிழ்த் தேசியக் கட்சியின் மூலமாக இந்தியத் தேசியக் காங்கிரசில் நுழைந்து, அதன் கொள்கைகளைத் தமது கவிதைகளில் வெளியிட்டார். தமது 17-ஆம் வயதில் ‘திருமகள்’ இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று நடத்தினார்.

தென்றல், திரை ஒளி, மேதாவி, கண்ணதாசன், சண்டமாருதம், கடிதம் முதலான இதழ்களில் எழுதி வந்தார். பாரதியார், பாரதிதாசன் ஆகியவர்களைப் பின்பற்றி எழுதியவர்; அதே போல, அருணகிரிநாதர், பட்டினத்தார் முதலியவர்களின் பக்திப் பாதையையும் பின்பற்றி எழுதியவர். 1970இல் அனைத்திந்திய சிறந்த கவிஞர் பட்டம் பெற்றவர். 1977இல் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தவர். இவ்வாறு பக்திக் கவிஞர்களைப் போலவும் சமூகக் கவிஞர்களைப் போலவும் சித்தர்களைப் போலவும் தம் கவிதைகளில் கருத்துகளை வெளிப்படுத்தியவர் கண்ணதாசன்.

கண்ணதாசன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்) மனம் போல் வாழ்வு, வனவாசம், அதைவிட ரகசியம், தெய்வ தரிசனம், இலக்கியத்தில் காதல், அர்த்தமுள்ள இந்து மதம், ஆட்டனத்தி ஆதிமந்தி, ஞானமாலிகா, ராகமாலிகா, இயேசுகாவியம், மாங்கனி, தைப்பாவை, வேலாங்குடித் திருவிழா என இவரது படைப்புகள் நீண்டு கொண்டே செல்லும். இது தவிர, ‘முத்தையா’ எனும் இயற்பெயரில் பல கடிதங்களையும் எழுதியுள்ளார். இவ்வாறு, திராவிட இயக்கக் கவிஞராக அறிமுகமாகி, திரை இசைக் கவிஞராக உலா வந்து, பின்னர், மதநம்பிக்கையாளராக மாறி, மானுடச் சாதியின் மகத்துவத்தை உலகறியச் செய்த ஒப்பற்ற கவிஞராகத் திகழ்ந்தவர் தான் கவியரசு கண்ணதாசன். 1981-அக்டோபர் 17-இல் கவிஞர் அமரரானார். ஆனாலும், அவரது கவிதைகள் நம் இதயங்களில் நீங்கா இடம் பெற்ற கவிதைகளாக உலா வருகின்றன என்பதே உண்மை .

CATEGORIES
error: Content is protected !!