
வெற்றி என்பது நாம் அனைவரும் அனுபவிக்க ஆசைப்படும் ஒன்று. சிறு விஷயங்களில் இருந்து பெரும் நிகழ்வுகள் வரை அனைத்திலும் அனைவரும் வெற்றி பெறவே விரும்புவோம். ஆனால், வெற்றி அவ்வளவு எளிதாக ஒருவருக்கு கிடைப்பதில்லை. ஆனால், வெற்றி ஒருவருக்கு எட்டாக் கனி இல்லை.
வெற்றி என்பது ஒரு விபத்தல்ல, திடீரென யாருக்கும் அது கிடைத்துவிடாது. இடைவிடாத முயற்சி, தொடர்ந்த தளராத உழைப்பு மற்றும் உள்ளார்ந்த ஈடுபாடு இவை அனைத்தும் வெற்றிக்கு மிக அவசியம். வெற்றி பெற்ற மனிதர்கள் தங்கள் நாளை சரியாகத் தொடங்க, தங்கள் அன்றாட காலை நேர வழக்கங்களை நன்கு திட்டமிட்டே செய்வார்கள். அதற்கென அவர்கள் சில பழக்க வழக்கங்களை வகுத்து வைத்திருப்பார்கள்.
அவர்களின் வாழ்க்கை அனுபவம், நாம் நம் நாளை சரியாக திட்டமிட கண்டிப்பாக உதவியாக இருக்கும். குறிப்பாக அவர்களைப் போன்று காலை நேர பழக்க வழக்கங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். வெற்றி பெற்ற மனிதர்கள் தினமும் காலை நேரத்தில் வழக்கமாக செய்யக் கூடிய சில வெற்றிக்கான வித்திடும் செயல்களை தெரிந்துகொள்வோம்.
1. இயற்கை கடிகாரம்
பொதுவாக நாம் அனைவரும் காலையில் எழுந்திருக்க அலாரம் வைப்பது வழக்கம். அலாரம் அடித்தாலும், அதனை ஆஃப் செய்துவிட்டு தூங்கி விடவும் கூடும். ஆனால், வெற்றி பெற்றவர்கள் காலையில் சரியான நேரத்தில் தாங்களாகவே எழுந்திருக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டு இருப்பார்கள். அது மட்டும் அல்ல, அவர்கள் தினமும் குறைந்தது 8 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்வார்கள்.
2. மௌனமாக சில நிமிடங்கள்
நல்ல ஆழ்ந்த இரவு தூக்கத்திற்குப் பிறகு விழித்தெழுந்ததும் மனமும் உடலும் புத்துணர்ச்சியோடு இருக்கும். அந்த நேரத்தில் பத்திலிருந்து 20 நிமிடங்கள் மௌனமாக எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக அன்றைய நாளை திட்டமிட வேண்டும். அமைதியாக சிந்திக்கும்போது அதில் தெளிவு கிடைக்கும்.
3. நன்றியுணர்வு
ஒரு நாளை தொடங்கும்போது நன்றி உணர்வோடு தொடங்குதல் நல்லது. நல்ல விதமாக கண்விழித்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்லலாம். காலை நேர கமகமக்கும் காபிக்கும், அதை தயாரித்தவருக்கும் நன்றி சொல்லலாம். நேற்றைய நாளில் யாரெல்லாம் உதவி செய்தார்கள், நேற்றைய பொழுதை யாரெல்லாம் அழகாக்கினார்கள் என்று சிந்தித்து அவர்களுக்கு மனதார நன்றி சொல்லலாம். நன்றியுணர்வு பயிற்சி மனதை ஆரோக்கியமாக வைப்பதோடு, இலக்குகளை நோக்கி கடுமையாக உழைக்க ஒரு உந்து சக்தியாக அமைகிறது.

4. உடற்பயிற்சி
உடலையும் மனதையும் உறுதியாக வைக்கும் உடற்பயிற்சிக்காக 20 நிமிடங்கள் ஒதுக்கவேண்டும். அன்றைய நாள் முழுவதும் செய்ய வேண்டிய வேலைகளுக்கான உற்சாகத்தை அது தரும். உடல், எண்டார்ஃபின்கள் என்கிற ஹார்மோனை வெளியிட்டு, நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
5. கவனத்துடன் உண்ணுதல்
செய்யும் எல்லாவற்றிலும் மிகுந்த கவனம் செலுத்தி, அந்த தருணத்தில் வாழ்தல் மிக முக்கியமானது. உண்ணுவதைக் கூட கவனமாக பிரார்த்தனைபோல செய்வதால், பிற வேலைகளில் மனமொன்றி ஈடுபட முடியும். ரசித்து ருசித்து மனதை முழுக்க முழுக்க சாப்பிடுவதில் மட்டும் செலுத்தி உண்ணவேண்டும்.
6. திட்டமிடல்
நேர மேலாண்மையை மிகச்சரியாக கையாள்வதற்கு திட்டமிடல் மிகவும் அவசியம். அன்றைய நாளில் செய்யவேண்டிய வேலைகளை திட்டமிட்டு அவற்றை ஒரு நோட்டில் குறித்துக்கொள்ள வேண்டும். அவசியமற்றதை விலக்கிவிட்டு தேவையானவற்றில் கவனம் செலுத்தலாம். வெற்றியை நோக்கிய பயணத்தில் இருப்பவர்களுக்கு திட்டமிடல் மிகவும் உதவியாக இருக்கும்.
7. செல்போனைத் தவிர்த்தல்
பெரும்பான்மையானோர் காலையில் எழுந்ததும் சோஷியல் மீடியாவில் நேரம் போவது தெரியாமல் மூழ்கிக்கிடப்பார்கள். செல்போனை உபயோகித்து நேரத்தை வீணடிக்காமல், இலக்கை அடைவதற்கான திட்டமிடல், வழிமுறைகள் போன்றவற்றை செயல்படுத்த வேண்டிய யோசனையில் மூழ்கலாம். அன்றைய நாளை மிகவும் வெற்றிகரமாக எதிர்கொள்ள இது உதவும்.
8. ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள்
காலை நேரத்தில் எழுதுவது, ஓவியம் வரைவது, இசைக்கருவி வாசிப்பது, சத்தான உணவை சமைப்பது என்று அந்த நாளை ஆக்கப்பூர்வமாக தொடங்குவது பல நன்மைகளை தரும். இது மூளையை கிக்ஸ்டார்ட் செய்து ஆக்கப்பூர்வமான சிந்தனையைத் தூண்டுகிறது. படைப்பாற்றலை எத்தனை அதிகமாக பயன்படுத்துகிறோமோ அந்தளவுக்கு அது வலிமையாக மாறுகிறது.
9. நீர் அருந்துதல்
காலையில் கண்விழித்ததும் பிரஷ் செய்துவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் உடலில் நீரேற்றம் சரியாக இருக்கும். தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற உதவும். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து அருந்தினால் செரிமான அமைப்பு மேம்படும். மேலும், ஆற்றல் நிலை மற்றும் மூளை செயல்பாடுகளையும் அதிகரிக்கும்.
10. சுய உறுதிமொழிகள்
சுய உறுதிமொழிகள் என்பது எதிர்மறை எண்ணங்களை சமாளிக்க உதவும். அவை சுயமரியாதையை அதிகரித்து, ஒருவரை இலக்கை நோக்கி பயணப்பட உந்துதலாக அமையும். தாம் திறமையானவர், தகுதியானவர் என தனக்குத்தானே ஒருவர் சொல்லிக் கொள்ளும்பொழுது அன்றைய நாள் வெற்றிகரமான நாளாக அமையும்.
நீங்கள் இது போன்ற பழக்க வழக்கங்களை பின்பற்றினால், அது கண்டிப்பாக வெற்றிக்கு ஒரு பாலமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, இத்தகைய பழக்க வழக்கங்களை உங்கள் காலை நேர வழக்கத்தில் புகுத்தி வெற்றிக்கான உங்கள் பயணத்தின் முதல் படியை இனிதே தொடங்குங்கள்.
Image Source : Getty Image
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry