திருமணங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என நம்முடைய சாஸ்திரங்கள் சில முறைகளை வைத்துள்ளது. திருமணங்களில் கடைப்பிடிக்கப்படும் ஒவ்வொரு சம்பிரதாய சடங்குகளுக்கும் ஆன்மிக மற்றும் அறிவியல் காரணங்கள் உள்ளன. அதேபோல் கோவில்களில் திருமணங்கள் நடத்துவதற்கும், யாரெல்லாம் கண்டிப்பாக கோவில்களில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
Also Read : ஆஞ்சநேயருக்கு வெண்ணெய், வெற்றிலைமாலை சாற்றி வழிபடுவது ஏன் தெரியுமா?
முந்தைய காலத்தில் வீடுகளிலும், கோவில்களிலும் தான் திருமணங்கள் நடத்தப்பட்டன. ஆனால் இன்று பெரும்பாலான திருமணங்கள், திருமண மண்டபங்களில் தான் நடத்தப்படுகிறது. இருந்தாலும் சிலர் பாரம்பரியம் மாறாமல் திருமாங்கல்ய தாரணத்தை கோவிலிலும், மற்ற வைபவங்களை திருமண மண்டபங்களிலும் வைக்கும் பழக்கத்தை பின்பற்றுகின்றனர். திருமண மண்டபங்களில் நடத்துவதற்கு வசதி இல்லாதவர்கள் தான் கோவில்களில் திருமணம் நடத்துகிறார்கள் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கு பின்னால் பல ஆன்மிக காரணங்கள் உள்ளன.
பொதுவாகவே கோவில்களில் திருமணங்களை வைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையை ஆலயத்தில் ஏற்றுக் கொள்வதே சிறப்பானதாகும். அதற்காகத் தான் பண்டைய காலங்களில் கோவில்களை எழுப்பிய மன்னர்கள், பல நூற்றுக்கணக்கானோர் அமரும் வகையில் ஆயிரம்கால் மண்டபங்களையும் கட்டி வைத்தனர். மன்னர்கள் காலத்தில் கணவன், மனைவி பிரிவு என்பது மிகவும் அபூர்வமான நிகழ்வாக இருந்தது. தலைமுறைகள் மாற்றத்தினால் பிரிவு அதிகரித்துள்ளது என்று சிலர் கூறினாலும், அந்தக் காலத்தில் இறைவனை சாட்சியாக கொண்டு வாழ்க்கைத் துணை ஏற்று கொண்டவர்கள் பிரிவதற்கு யோசிப்பர்.
திருமணம் கடவுளின் முன்னிலையில் நடைபெறுவதால், தம்பதிகள் அதற்குப் பின் இறைவனின் ஆசீர்வாதத்துடன் வாழ்க்கையை தொடங்குகிறார்கள். இது மண வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்தும். அதற்கு காரணம் இறைவன் மீதுள்ள பக்தி, பயம். மேலும், கோவில்களில் எப்போதும் மந்திரங்கள் ஜபித்தல், ஸ்லோகங்கள் ஓதுதல், இறைவனை பற்றிய பாடல்கள், தெய்வீக நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால் எப்போதும் நேர்மறை கதிர்கள் அங்கு இருக்கும். எனவே, அங்கு மாங்கல்யம் சூட்டிக் கொள்வது சிறப்பான பலன்களை தரும்.
கோவில்களில் திருமணம் செய்வது, மணமக்கள் இருவரின் மனதிற்கும் அமைதியை தரும். இது திருமணத்தின் போது ஏற்படும் பதற்றங்களை குறைத்து தெய்வீகமான முறையில் அவர்களின் நம்பிக்கைகளை ஊட்டுகிறது. ஒரு சில ஜாதகங்களுக்கு திருமணமே கேள்விக்குறியாக இருக்கும். அதையும் தாண்டி வரன் அமைந்து திருமணம் நிச்சயிக்கப்பட்டால், அவர்கள் எத்தனை ஆண்டுகள் இணைந்து வாழ்வார்கள் என்பதும் கேள்விக் குறியாகவே இருக்கும். எனவே, அதுபோன்ற ஜாதக அமைப்பை உடையவர்கள், கடுமையான தோஷங்கள் உடையவர்கள், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் ஜாதகதாரர்கள் கோவிலில் திருமணம் செய்து கொள்வது நல்லது.
கோவில்களில் மாங்கல்யம் சூட்டி கொள்வதால் சில பயன்களும் உண்டு. கோவிலில் தாலி கட்டி கொண்ட தம்பதிகள், முதலில் அக்கோவிலில் உள்ள மூலவரிடம் ஆசீர்வாதம் பெறும் பாக்கியத்தை பெறுகிறார்கள். இது மிகப்பெரிய நல்ல நிகழ்வு. தனியார் மண்டபங்களில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, கோவில்களில் மாங்கல்யம் சூட்டிக்கொள்வதே சிறந்தது.
அதே போல் ஏதாவது ஒரு காரணத்தால் முதல் வாழ்க்கையில் தோல்வியை சந்தித்து மறுமணம் செய்து கொள்பவர்கள், மிக தாமதமாக திருமணம் செய்து கொள்பவர்கள் ஆகியோரும் கோவிலில் திருமணம் செய்து கொள்வது மிக சிறப்பானதாக சொல்லப்படுகிறது. பணம் இருந்தால் எங்கு வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம், பாக்கியமும், இறைவனின் பூரண ஆசியும் இருந்தால் மட்டுமே கோவில்களில் திருமணம் செய்து கொள்ள முடியும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry