Monday, January 24, 2022

திமுக-வுக்கு எதிராக மகா கூட்டணி! கைமாறாக ராஜ்யசபா எம்.பி. பதவி! பாண்டே திரைமறைவு பேச்சுவார்த்தை

பிரபல ஊடகவியலாளரும், நடிகரும், சாணக்யா இணைய டி.வி. நிறுவனருமான ரங்கராஜ் பாண்டே, பா.ஜ.க.விடம் ராஜ்யசபா எம்.பி. பதவி கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரங்கராஜ் பாண்டே பா.ஜ.க. ஆதரவாளராகவே பெரும்பாலும் அறியப்படுகிறார். தந்தி டிவி-யில் அனைத்து கட்சியினரையும் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்த அவரது பாணி, தற்போது மாறியுள்ளது.

சாணக்யா டி.வி.-யில் அவர் முன்வைக்கும் கருத்துகள் அனைத்தும் பா.ஜ.க., மற்றும் மத்திய அரசு ஆதரவு கருத்தாகவே உள்ளது. அதேபோல், தமிழக அரசை சில நேரங்களில், சிறிதளவு விமர்சித்தாலும், பெரும்பாலும் எதிர்ப்பு போக்கை கையிலெடுப்பதில்லை. அதேநேரம் ரஜினி ஆதரவு போக்கும் அவரிடம் பெருமளவு தென்படுவதை மறுக்க முடியாது.

இந்நிலையில், தமிழகத்தில் தி.மு.க.வுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என பா.ஜ.க. தீர்மானித்துள்ளது. பிரசாந்த் கிஷோர், சபரீசன், பழனிவேல் தியாகராஜன் போன்றோரது அரசியல் வியூகம் தமிழகத்தில் சுத்தமாக எடுபடாது என பா.ஜ.க. தலைமை திடமாக நம்புகிறது. ஏனெனில் இவர்களுக்கு தமிழக அரசியல் களத்தை பற்றி ஏதும் தெரியாது என அக்கட்சி கருதுகிறது.

எனவேதான் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், ரங்கராஜ் பாண்டேவிடம் பா.ஜ.க. தலைமையும், ஒரு முக்கிய இந்துத்துவ அமைப்பும் சில வேலைகளை ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக, பா.ஜ.க., ரஜினி ஆகியோரை ஓரணியில் திரட்ட வேண்டும் என்பதே அவருக்கான பணிகளில் முக்கியமானது.

இதில் அதிமுக-வுக்கு சற்று தயக்கம் இருக்கவே செய்கிறது. கூட்டணியில் பா.ஜ.க. இருந்தாலும், இந்து வாக்குகளை பெருமளவு அறுவடை செய்ய இயலாது என அதிமுக நினைக்கிறது. பா.ஜ.க. கூட்டணியில் இல்லாவிட்டால், சிறுபான்மை சமூக வாக்குகளை அள்ளலாம் என அதிமுக கணக்குப்போடுகிறது. ஆனால், பா.ஜ.க. ஆதரவு கட்சி என்ற பிம்பம் ஏற்பட்டுவிட்ட நிலையில், அதிமுக-வுக்கு, சிறுபான்மை சமூக வாக்குகள் கிடைக்காது என்று புள்ளி விவரங்களோடு, பாண்டே மூலம், அதிமுக தலைமைக்கு பா.ஜ.க. புரியவைத்துள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.

அதேபோல், அதிமுக-வுடன் கூட்டணி வைக்க ரஜினிகாந்த்துக்கு மிகவும் தயக்கம் உள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கும் அதிமுக மீதான எதிர்மறை விமர்சனங்கள், தங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் நம்புகிறார். ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாத நிலையில், திடமான தலைமை கட்சிக்கு இல்லையே என்பதும் அவரது தயக்கத்துக்கான காரணமாக சொல்லப்படுகிறது.

எனவே, அதிமுக, ரஜினி ஆகியோரிடையே இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது பாண்டேவுக்கான முதல் பணி. அடுத்ததாக அவர்களை பா.ஜ.க. கூட்டணியில் இணைப்பது. கூட்டணிக்கு அதிமுக தலைமை ஏற்க வேண்டும் எனவும் பா.ஜ.க. விரும்புகிறது. இந்தக் கூட்டணியில் பா.ம.க. போன்ற கட்சிகளை தக்க வைப்பதுடன், மேலும் சில கட்சிகளை இணைக்கவும் பா.ஜ.க. திட்டமிடுகிறது. இந்தக் கூட்டணி வெற்றி பெற்றால் அதிமுக-வுக்கு முதலமைச்சர் பொறுப்பும், பா.ஜ.க. மற்றும் ரஜினி கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பும் பெற வேண்டும் என்பதும் பா.ஜ.க.வின் எண்ணம்.

இதுபோன்ற மிக முக்கியமான கூட்டணி கட்டமைப்பு வேலைகள் பாண்டேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க.வில் இணையுமாறு விடுத்த அழைப்பை நிராகரித்துவிட்ட பாண்டே, தான் பா.ஜ.க. அனுதாபியாக அறியப்படுவதையே விரும்புகிறார். எனவே கட்சி, பொறுப்பு என்பதெல்லாம் தாண்டி, தனக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி தருமாறு பா.ஜ.க.விடம் அவர் கோரியிருப்பதாக தெரிகிறது. டெல்லி தலைமையுடனான அவரது நெருக்கத்தை உணர்ந்துள்ள தமிழக பா.ஜ.க. இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர், மறைந்த துக்ளக் ‘சோ’ போன்று, பாண்டேவை, மோடி நம்புவதாக தெரிவிக்கின்றனர். அதனாலேயே, அவரிடம் கூட்டணிப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!