Wednesday, December 7, 2022

ஸ்டாலின் பொம்மை முதல்வர்! குடும்பத்தினர்தான் எல்லாம்! எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி!

சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதுடன், கட்டண உயர்வை திரும்பப் பெறுமாறு வலியுறுத்துகின்றன. மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது.

செங்கல்பட்டில் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் பொம்மை முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் இருந்து வருகிறார். இப்போது தமிழ்நாட்டிற்கு நான்கு முதலமைச்சர்கள் இருக்கின்றனர்.

Also Read : ஆ.ராசா கூறியது திமுக தலைவர் குடும்பத்துக்கும் பொருந்துமா? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

நமது முதலமைச்சர் ஸ்டாலின் வசூல் மன்னராக இருக்கிறார். தமிழ்நாட்டின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. 15 மாத சர்வாதிகார ஆட்சியில் தமிழக மக்களுக்கு துளியளவு கூட நன்மையில்லை. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் ஆகியவைதான் இந்த ஆட்சியில் இருந்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் குடிமராமத்து பணி மூலம் 6000 ஏரிகள் தூர்வாரப்பட்டன. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த உடன் முதல் போனஸ் ஆக சொத்துவரி உயர்த்தப்பட்டது.

இப்போது, மக்களுக்கு இரண்டாவது போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது, அதுதான் மின்கட்டண உயர்வு. பொங்கல் என்றாலே திராவிட மாடல் ஆட்சி தான் நினைவுக்கு வருகிறது. திமுக பொங்கலுக்கு கொடுக்கப்பட்ட வெல்லம் தரமற்ற முறையில் இருந்தது. கடுகுக்கு பதில் இலவம் பஞ்சு விதைகள் கொடுத்திருந்தார்கள். அரிசியில் வண்டு இருந்தது. பொங்கல் தொகுப்பில் முறைகேடு செய்திருந்தனர்.

சமீபத்தில் செய்தியாளரை சந்தித்திருந்த சுகாதாரத் துறை அமைச்சர், நீட் தற்கொலைக்கு அதிமுக அரசுதான் காரணம் என கூறியிருந்தார். இது முற்றிலும் தவறு. காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சி செய்த 2010ஆம் ஆண்டில்தான் நீட் குறித்த அறிவிப்பு வெளியிட்டது. அப்போது, திமுக எதிர்க்காமல் இருந்தது. அப்போது, அதிமுகவின் பொது செயலாளராக இருந்த ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆரம்ப முதலே நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக இருந்து வருகிறது.

Also Read : தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்! சாப்பாட்டிலேயே கைகழுவிய முதலமைச்சர்!

தற்போது, போதைப்பொருட்கள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து தான் கஞ்சா தமிழ்நாட்டுக்கு வருவதாக அமைச்சர் ஒருவர் தெரிவிக்கிறார். காவல்துறை மற்றும் உளவுத்துறையை கையில் வைத்திருக்கும் திமுக அரசுதான் இதை தடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் மத்திய அரசின் மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்கிறார்கள் என அரசே தெரிவிக்கிறது. அதில் 146 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு உள்ளனர். கஞ்சாவை விற்பதே அவர்கள்தான். வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது. காவல்துறைக்கு கஞ்சா விற்பவர்கள் யார் என தெரிகிறது, ஆனால் அவர்களை கைது செய்ய முடியவில்லை.

Also Read : கடலில் பேனா நினைவுச் சின்னம்! மத்திய அரசு முதல் கட்ட அனுமதி! பொதுமக்கள் கருத்து கேட்க அறிவுறுத்தல்!

அதிமுக ஆட்சியில் இருந்தபோது, ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டது. ஆனால் ஆன்லைன் ரம்மி வியாபாரிகள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அப்போது திமுக ஆட்சி அமைந்தது. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பதற்கு முறையான ஆவணங்கள் மற்றும் காரணங்களை முன்வைக்காத காரணத்தினாலே ஆன்லைன் ரம்மி தடையை நீதிமன்றம் ரத்து செய்தது.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவையே விமர்சித்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அதன்பிறகு பாட்டாளி மக்கள் கட்சிக்கு சென்று சட்டமன்ற உறுப்பினராகி யானையின் மீது சென்றார். அதன்பிறகு தேமுதிகவிற்கு சென்றார். உங்களது அறிவுரை எங்களுக்கு தேவையில்லை. தயவு செய்து குறை கூறாமல் இருங்கள், இல்லையென்றால் சென்றுவிடுங்கள். நீங்கள் கட்சியின் கிளை செயலாளராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர்.” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles