அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு புலனப் பதிவு மூலம் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “தேர்தல் கால வாக்குறுதியினை நிறைவேற்றுவது முதலமைச்சரின் அதிகார எல்லைக்கு உட்பட்டதாகும். ஆனால் 12.10.2023 அன்று டிட்டோஜாக் உயர்மட்டக் குழு தலைவர்களை அழைத்துப்பேசி 12 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, நிதியாதாரம் இல்லாத கோரிக்கைகளை நவம்பர் 1 முதல் அறிவிப்பது என்றும், நிதி ஆதாரமுடைய கோரிக்கைகளை ஜனவரி தொடங்கி அமல்படுத்துவது எனவும் உறுதியளித்தீர்கள்.
13ஆம் தேதி டிட்டோஜாக் அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 8000-க்கும் மேற்பட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு வாகனங்களில் நாலாபக்கங்களில் இருந்தும் எழுச்சியுடன் புறப்படத் தயாராக இருந்தார்கள். சில மாவட்டங்களில் புறப்பட்டும் வந்து கொண்டிருந்தார்கள். பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான தாங்கள் அளித்த உறுதிமொழியின் மீது நம்பிக்கை வைத்து டிட்டோஜாக் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் போராட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார்கள்.
ஊடகங்களில், தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் போராட்டத்தை ரத்து செய்துவிட்டதாக அறிவித்து அதிர்ச்சியினை ஏற்படுத்தினார்கள். 13 ஆம் தேதி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் விளக்கக் கூட்டமாக மாற்றி நடத்தினார்கள். பள்ளிக்கல்வி இயக்குனரும், தொடக்கக் கல்வி இயக்குனரும் கூட்டத்தில் பங்கேற்றார்கள். உறுதியான அறிவிப்புகள் ஆணைகளாக வெளிவரும் என்று அவர்களாலும் சொல்ல முடியவில்லை. விளக்கக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஆசிரியர்களின் பதற்றம் தணியவில்லை. அவர்களின் கோபமும் கொந்தளிப்பும் டிட்டோஜாக் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் பக்கம் திரும்பியதை காண முடிந்தது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக சொன்ன கோரிக்கைகள், அரசாணைகளாக வெளிவருவதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்று வேதனையுறுகிறோம். அதற்கு மாறாக எண்ணும் எழுத்தும் திட்டம் 1-5 வகுப்புகளுக்கான Assessment அக்டோபர், நவம்பர் மாதம் வரை தேதிகள் குறிப்பிட்டு பட்டியலிடப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறோம்.
பி.லிட் முடித்து நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்கள் அதன் பின்னர் பி.எட். படித்தால் வழங்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுக்கான தணிக்கைத் தடைகளை நீக்க நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட்டினால் போதும் என்று சொன்னீர்கள்! ஆனால் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் மாதம் தோறும் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதைப் பற்றி இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
பள்ளி ஆசிரியர்களை கருத்தாளர்களாகவோ, ஏதுவாளர்களாகவோ பயிற்சிகளுக்கு அனுப்பமாட்டோம் என்று தெரிவித்தீர்கள். அதுகுறித்தும் இதுவரை எந்த உத்தரவாதமும் வெளிவரவில்லை. அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றதற்காக பின்னேற்பு அனுமதி ஆணை வழங்கும் கோரிக்கையினை ஏறெடுத்து பார்த்ததாகவும் தெரியவில்லை. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தர ஊதியம் ரூ 5400/- தணிக்கைத் தடை நீக்கப்பட்டு விடும் என்ற அறிவிப்புக்கும் உத்தரவாதம் இல்லை.
10.03.2020க்கு முன்னர் உயர்கல்வித் தகுதி முடித்த ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையுடன் ஊக்க ஊதியம் வழங்குவதற்கு பள்ளிக் கல்வித்துறையால் கருத்துருக்கள் அனுப்பப்பட்டு விட்டது. அறிஞர் அண்ணா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஊக்க ஊதிய உயர்வு, கருணாநிதியால் தொடர்ந்து கொடுக்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வு… போராட்டம் நடைபெறும் இந்த நேரத்தில் கூட ரத்து செய்யப்பட்டு, அரசாணை எண்:- 95 நாள்: 26.10.2023 இல் ஒரே தவணையாக (lumsum amount) அறிவித்து இருப்பது ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பினை பீறிட்டு எழச் செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லத் தொடங்கியுள்ளார்கள்.
அதேபோல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்திய SEAS தேர்வினை, நீட் தேர்வினை விட அதிகமான கெடுபிடிகளுடன் நடத்த வேண்டுமா? மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையே தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமல்படுத்துகிறது என்று சொன்னால் ஏற்கத்தான் வேண்டும். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களே..! சொன்னது என்னாச்சி? என்று ஆசிரியர்கள் கோரிக்கை முழக்கமிட்டு வருகிறார்கள். ஏற்கனவே ஆசிரியர் மனசுப் பெட்டியினை ஆங்காங்கே அலுவலகங்களில் வைத்திருக்கிறார்கள். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆசிரியர்களின் கோரிக்கைகளை பதிவு செய்வதற்காக இப்போது இணையதளத்தை தொடங்கி வைத்துள்ளீர்கள்.
பள்ளிக்கல்வித்துறையில் உள்ள 2,25,905 ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத 29909 அரசுப்பணியாளர்களும் இந்த குறை தீர்க்கும் புலம் Staff Grievance Redressal Cell Portal and App செயலி மூலம் விண்ணப்பித்தால் போதும் என்று தெரிவித்திருக்கிறீர்கள். இவை எல்லாம் விளம்பரத்திற்கு பயன்படும். ஆசிரியர்களும், அரசுப் பணியாளர்களும் இந்தத் திட்டத்தின் மீதெல்லாம் முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதை வெளிப்படைத் தன்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வரும் மே மாதத்திற்குள் 1892 இடைநிலை ஆசிரியர்கள் பணி நிறைவு பெறுகிறார்கள் என தொடக்கக்கல்வி இயக்குனர் புள்ளிவிவரமாக தெரிவித்துள்ளார்கள். 1000 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. 15 மாவட்டங்களில் 12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் அறவே இல்லாமல் உள்ளது. சுமார் 15,000 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது.
நீட் விலக்கினை வலியுறுத்தி மத்திய அரசுக்கு அன்றாடம் நமது தமிழ்நாடு அரசு சார்பாகவும், அனைத்து அரசியல் கட்சிகள் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் கையொப்பம் பெற்று வருகிறோம். முழுமனதாக வரவேற்கிறோம். அதே நேரத்தில் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்பினை நடத்துவதற்கு அட்டவணையினை வெளியிட்டு அறிவித்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் குழப்பத்திலும், கலக்கத்திலும் தான் இருக்கிறார்கள். மத்திய அரசின் நீட் தேர்வினை எதிர்க்கிறோம், ஆனால் மத்திய அரசின் நியமனத் தேர்வினை அமல்படுத்துகிறோம்.
Also Read : விழாக்கால தள்ளுபடியில் டி.வி., செல்ஃபோன், ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் வாங்கலாமா? கடைகளா, ஆன் லைனா, எது சிறந்தது?
பீகார் மாநிலத்தில் ஒரு லட்சத்து இருபதாயிரத்து முன்னூற்று முப்பத்து ஆறு ஆசிரியர்களை நியமனம் செய்ய அந்த மாநிலத்தின் முதலமைச்சர் நிதீஷ்குமார் அறிவித்துள்ளார்கள். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறக்கூடிய சாதனை அறிவிப்பாக இந்த அறிவிப்பு உள்ளது. முந்தைய ஆட்சியாளர்கள் காலத்தில் 50,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்தார்கள். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 52,500 ஆசிரியர்களையும் ஒரே தேதியில் காலமுறை ஊதியத்தில் கொண்டு வந்து ஆணை வழங்கிய வரலாற்றுச் சாதனை இந்திய அளவில் பதிவாகியுள்ளது.
ஆனால், தற்போது 2222 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்கிற போது ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளோம். இந்த அறிவிப்பு மூலம் மத்திய அரசின் கொள்கையினை அடிபிறழாமல் அல்லவா அமல்படுத்துகிறோம். நீதிமன்றம் வலியுறுத்தினாலும் கொள்கை முடிவு எடுக்க முன்வராதது ஏன்? முந்தைய ஆட்சியாளர்கள்தான் எந்த அறிவிப்பிலும் எண்ணிக்கையில் ராசியைப் பார்ப்பார்கள். திராவிட மாடல் அரசில் 2222 என்பது எவருடைய ராசி எண் என்று தெரியவில்லை?
பள்ளிக் கல்வித்துறை அமைச்சரே..!
- கோரிக்கைகளுக்காக ஆசிரியர்களுக்கு மனசு பெட்டியினை வைப்பதை காட்டிலும், கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டு ஆசிரியர் மனசில் இடம்பெற வேண்டுகிறோம்.
- 12ஆம் தேதி ஆசிரியர் சங்கத் தலைவர்களை சந்திப்பதற்காக என்னுடைய இல்லக் கதவுகள் திறந்தே இருக்கும் என்று உருக்கமாக சொன்னீர்கள். அந்த மனம் திறந்த பேச்சால்தான் டிட்டோஜாக் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் 11 பேரும் தங்களின் மீது நம்பிக்கை வைத்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்ததாலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததாலும், சங்கத் தலைவர்கள் மீது ஆசிரியர்கள் நம்பிக்கை இழந்த நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.
- ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள நான்கு கட்டப் போராட்டத்திலும் தீவிரமாக களத்தில் இறங்கி போராடுவதற்கு தயாராகி வருகிறார்கள். அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல; இழந்த உரிமைகளை மீட்டெடுக்கிற போராட்டமாக நடத்திட உள்ளார்கள். ஆசிரியர் இயக்கங்கள் மத்தியில் அளித்த உறுதிமொழியினை ஆணையாக வெளியிட வேணுமாய் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் சார்பில் உரிமை உறவுடன் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
கோவில்பட்டியில் தாங்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆசிரியர்கள் முன்வைத்த 32 கோரிக்கைகளில் 29 கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டு விட்டோம். இன்னும் மூன்று கோரிக்கைகள் தான் தீர்வு காண வேண்டியுள்ளது என்று கூறியுள்ளீர்கள். நாளேடுகளிலும் இந்த செய்தி வெளியானது.
தீர்வு கண்டிருக்கிற கோரிக்கைகள் என்னவென்றும் எங்களுக்குத் தெரியவில்லை. இன்னும் தீர்வு காணாமல் மீதி இருக்கக்கூடிய மூன்று கோரிக்கைகள் என்னவென்றும் எங்களுக்குத் தெரியவில்லை.
செய்ததைச் சொல்லுவோம்! செய்ததை மட்டுமே சொல்லுவோம்! செய்யாததை அறிவிப்பில் வெளியிடுவதை தவிர்த்துக் கொள்வோம். திருச்சியில் ஒரு அறிவிப்பு… சென்னையில் ஒரு அறிவிப்பு… ஒவ்வொரு அறிவிப்பிலும் ஒவ்வொரு கருத்தினை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்வோம்..!
இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார்கள். ஓய்வறியாத அவருடைய பணியினைத் தொடர வேண்டுமென தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பெரிதும் விரும்புகிறோம்..! வாழ்த்துகிறோம்…!” இவ்வாறு கடிதத்தில் வா. அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry