இந்தியாவில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கின்றது. இந்த வரவேற்பை தங்களுக்குச் சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் முன்னணி பிராண்டுகள் தொடங்கி புதுமுக பிராண்டுகள் வரை இந்தியாவை நோக்கி தங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையிலேயே விரைவில் பிஎம்டபிள்யூ மோட்டாராட் (BMW Motorrad) நிறுவனம் அதன் உலக புகழ்பெற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
சிஇ 04 (BMW CE 04) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையே பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது ஓர் பிரீமியம் தர அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இதை வருகின்ற 24 ஆம் தேதி அன்றே இந்தியாவில் பிஎம்டபிள்யூ மோட்டாராட் அறிமுகம் செய்ய இருக்கின்றது. பிஎம்டபிள்யூ நிறுவனம் சிஇ 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங் பணிகளை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை பிஎம்டபிள்யூ நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கின்றது. இதுவே இந்தியாவில் பிஎம்டபிள்யூ மோட்டாராட் விற்பனைக்குக் கொண்டு வரும் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும்.
இதன் விலை 9 முதல் 11 லட்சம் வரை இருக்கலாம் எனத் தெரிகிறது. அறிமுக நாளின்போது மேலும் பிற முக்கிய விபரங்களை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முற்றிலும் தனித்துவமான தோற்றம் கொண்ட வாகனமாகவே பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்து இருக்கின்றது. குறிப்பாக, ஓர் படகைப் போல நீளமானதாக இது உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த உருவத்தில் இந்தியாவில் வேறு எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் பார்க்க முடியாது. அந்த அளவிற்கே தனித்துவமான தோற்றத்தை சிஇ 04 கொண்டுள்ளது. குறிப்பாக, இதன் தோற்றம் ஸ்கேட் போர்டுடனும் ஒத்துப்போகின்றது.
இத்துடன், ஸ்கூட்டருக்கு மிகவும் முரட்டுத் தனமான தோற்றத்தை வழங்கும் விதமாக மிகவும் கட்டுமஸ்தான பேனல்களால் அது அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. பிஎம்டபிள்யூ சிஇ 04 ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். இதில் 10.25 அங்குல டிஎஃப்டி வகை திரை, இணைப்பு மற்றும் நேவிகேஷன் தகவலை வழங்கும் வசதியுடன் வழங்கப்பட்டு உள்ளது.
அதுதவிர, ஸ்மார்ட்போன்களை வைத்துக் கொள்வதற்கு என தனி அறையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கிறது. அந்த அறை மிகவும் பாதுகாப்பானது. காற்றைகூட அது உள்ளே நுழைய விடாது. குறிப்பாக, நீர் புகாத பெட்டகமாகவும் அது செயல்படும். ஆகையால், அதில் வைக்கப்படும் மின்சாதனம் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பா இருக்கும்.
Also Read : சாப்பிட்ட பிறகு சிறிது நேர நடை! தெர்மல் வாக்..! சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் தொடங்கி ஏராளமான பயன்கள்!
மேலும், ‘சி’ டைப் யுஎஸ்பி செல்போன் சார்ஜர், மூன்று விதமான ரைடிங் மோட்கள் (ஈகோ, ரெயின் மற்றும் ரோடு), டைனமிக் டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் ப்ரோ போன்ற அம்சங்களும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த அம்சங்கள் தவிர, தானியங்கி ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் செய்யும் வசதியும் வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓர் முழு சார்ஜில் 130 கிமீ வரை பயணிக்க முடியும். மேலும், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகபட்சமாக மணிக்கு 121 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும்.
இத்தகைய அதீத வேகத்தில் பயணிப்பதற்காக சிஇ 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 15kW மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதேபோல், இதன் அதிகபட்ச ரேஞ்ஜ் திறனுக்காக 8.9 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை வெறும் 1 மணி 40 நிமிடத்திலேயே 100 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும். இதற்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான விற்பனை வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry