சென்னையில் மயிலாப்பூரில் உள்ள பழமையான பேயாழ்வார் கோயில் வக்ஃபு வாரிய சொத்தில் உள்ளது என்று, தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் அப்துல் ரகுமான் கூறியுள்ளார். மயிலாப்பூரில் கச்சேரி சாலை மசூதிக்கு சொந்தமான நிலத்தில் பேயாழ்வார் கோயில் உட்பட பல இந்து கோயில்கள் வக்பு சொத்துக்களில் இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். ஆனால் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த பேயாழ்வார் அவதார திருத்தலத்தை ஆவணப்படி வக்பு வாரியம் உரிமை கொண்டாட முடியாது என கோவில் சம்பந்தப்பட்டவர்கள் ஆதாரத்துடன் மறுத்துள்ளனர்.
11 ஆகஸ்ட் 2024 அன்று நாகப்பட்டினத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “ஆங்கிலேயர் காலத்தில், தர்காக்கள் மற்றும் மசூதிகளைப் பராமரிக்க செல்வந்தர்கள் தானாக முன்வந்து நன்கொடையாக வழங்கிய நிலங்களை நிர்வகிக்க வக்ஃபு வாரியம் நிறுவப்பட்டது. வக்பு சொத்துக்களில் அமைந்துள்ள இந்து கோயில்களை வாரியம் ஒருபோதும் எதிர்க்கவில்லை, அத்தகைய கோயில்களை பெருமையாக கருதுகிறோம்.
144 கிரவுண்டு பரப்பளவு கொண்ட மயிலாப்பூர் கச்சேரி சாலை மசூதியின் இடத்தில், பேயாழ்வார் கோயில் அமைந்துள்ள 4 கிரவுண்டு நிலமும் வக்பு வாரியத்துக்குள் அடங்கும். இந்த நிலத்தை வக்பு வாரியம் எப்போதாவது உரிமை கோரியுள்ளதா? கச்சேரி ரோடு மசூதிக்கு சொந்தமாக 144 ஏக்கர் நிலம் உள்ளது. இது வக்ஃபு சொத்தில் உள்ளது. எப்போதாவது அதைப் பற்றி பேசியிருக்கிறோமா? இந்துக்கள் அங்கு வழிபடுகிறார்கள், எனவே நாங்கள் அதை அப்படியே வைத்திருக்கிறோம்.“ என்று அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார். இருப்பினும், பண்டைய சொத்துக்கள் எவ்வாறு வக்ஃபு வாரிய கட்டுப்பாட்டின் கீழ் வந்தன என்பதை அவர் குறிப்பிடவில்லை.
இந்நிலையில், வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரகுமான் குறிப்பிட்ட பேயாழ்வார் கோவில், அதாவது பேயாழ்வார் அவதாரத் திருத்தலம் சென்னையில் மயிலாப்பூர் கச்சேரி சாலையை ஒட்டிய அருண்டேல் தெருவில் உள்ளது. இங்கு பேயாழ்வாருக்கு சிறிய கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த இடம் கேசவபெருமாள் கோவிலுக்கு சொந்தமானது என்றும், மாதவ பெருமாள் கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடமும் உள்ளது எனவும் வைணவப் பெரியர்கள் கூறுகிறார்கள்.
அடையாளத்தை மறைத்துப் பேசிய அவர்கள், அதற்கான அரசு ஆவண நகல்களையும் வேல்ஸ் மீடியாவிடம் கையளித்தார்கள். இதன்படி, பேயாழ்வார் அவதார திருத்தலம் 2066, 2067 ஆகிய சர்வே எண்களில் அமைந்துள்ளது. மொத்த பரப்பளவு 3 கிரவுண்டு 18 சதுர அடியாகும். இத்திருத்தலத்தை ஆதிகேசவ பெருமாள் கோவிலைச் சேர்ந்த நாட்டு கேசவ முதலியார் அறக்கட்டளை இப்போதைக்கு நிர்வகிக்க வேண்டியது என பட்டாவில் கூறப்பட்டுள்ளது.
பட்டா நகலில், மானியம் அல்லது வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கும் ஆணை என்ற அம்சத்தில், G.O. No. Dt. 24.11.1829 enclosed in Board’s Letter Dt. 14.01.1830 என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவரம் நமக்கு கிடைக்கவில்லை. திரு. சுப்பாராவ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த நகலை பெற்றுள்ளார்.
1876 மார்ச் மாதம் 1ம் தேதி பதிக்கப்பிக்கப்பட்ட ஸ்ரீ குருபரம்பரா ப்ராபவம் எனும் நூலில், மாதவப்பெருமாள் சந்நதிக் கிணற்றில் செவ்வல்லிப்பூவில் பேயாழ்வார் அவதரித்தார் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி, நாம் ஏற்கனவே கூறியதுபோல கேசவபெருமாள் கோவில் மற்றும் மாதவ பெருமாள் கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடமாக பேயாழ்வார் திருத்தலம் இருக்கிறது. இங்குள்ள பெரிய கிணற்றில் செவ்வல்லிப்பூவில் பேயாழ்வார் அவதரித்தார் என்பதுதான் வரலாறு.
மேலும் பேசிய வைணவப் பெரியவர்கள், பேயாழ்வார் அவதார திருத்தலத்துக்கான பட்டா இருக்கிறது. பேயாழ்வார் ஏழாம் நூற்றாண்டில், ஐப்பசி வளர்பிறை தசமி திதி, சதயம் நட்சத்திரத்தில் அவதரித்தார். மொகலாயர்கள் 1500களில் தான் இந்தியாவுக்கு வந்தனர். மொகலாயர்கள் வருகைக்கு பல நூற்றாண்டுக்கு முன்னர் பேயாழ்வார் அவதரித்த இடத்தை வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று எந்த அடிப்படையில் சொந்தம் கொண்டாட முடியும். வக்பு வாரியம் அமைக்கப்பட்டதே 1954ல் தான். எனவே சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம் என்கின்றனர்.
பேயாழ்வார் அவதார திருத்தல வெளிப்புற சுவற்றில் 1915ம் ஆண்டு வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில், திருமயிலாப்பூர் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் சன்னதியைச் சேர்ந்த ஸ்ரீபேயாழ்வார் அவதரித்த துவாபரயுகம், சித்தாத்திரி வருஷம், சுக்கிலபட்சம், தசமி, சதய நட்சத்திரம், குருவாரம் சுபதினத்தில் செவ்வல்லி ஓடையில் பெரிய கிணற்றில் நெய்தல் புஷ்பத்தில் அவதரித்தார் என கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு சிதலமடைந்துள்ளதால் வார்த்தைகளை சரியாக படிக்க இயலவில்லை.
ஆழ்வார்கள் என்றால் வேதத்தாலும் அளவிட்டு அறிய இயலாத பெருமாளின் எல்லா குணங்களையும் அவனருளாலே அறிந்து அனுபவிக்கும் ஞானம் பெற்றவர்கள் என்று கூறலாம். மொத்தம் பன்னிரெண்டு ஆழ்வார்கள். இந்த ஆழ்வார்கள் திருமாலின் அம்சமாகவே அவதரித்தனர். பெருமானைப் போற்றுவதும், மங்களாசாஸனம் செய்வதுமே அவர்களின் வாழ்க்கை முறையாக அமைந்தது. அனைத்து மக்களும் புரிந்து ஓத, தமிழ் மறையாம் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை இயற்றியவர்கள் ஆழ்வார்கள்.
12 ஆழ்வார்களில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் பேயாழ்வார். சதய நட்சத்திரத்தில் பெருமாளின் வாளின் அம்சமாய் மயிலாப்பூரில் உள்ள கிணற்றில் செவ்வல்லி மலரில் பேயாழ்வார் அவதரித்தார். இவருடைய பக்தி வைராக்கியத்தால் இவர் செய்த செயல்கள் சராசரி மனிதனை விட வேறு படுத்திக்காட்டியது. தம்மை மறந்த நிலையில், பேய் பிடித்தவர் போல, கண்கள் சுழலும்படி விழுந்து, சிரித்து, தொழுது, குதித்து ஆடினார், பாடினார். இதனால் இவரைப் பேயாழ்வார் என்று யாவரும் கூப்பிட்டனர். முன்றாம் திருவந்ததி என்று அழைக்கப்படும் நூறு பாடல்களை இவர் இயற்றியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry