போராடினால்தான் கவனிப்பீங்களா? டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம்!

0
54

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் அறிவித்ததால், விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

எனினும், வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாததைக் கண்டித்தும், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் போராட்டம் நடத்தப்படும் என 40 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக் கிசான் மோர்ச்சா அமைப்பு அழைப்பு விடுத்தனர்.

Also Read : இலவசங்கள் இலவசமாக வழங்கப்படவில்லை! இலவசங்களுக்கும் விலை இருக்கிறது! ஆர்பிஐ உறுப்பினர் கருத்து!

இதனையடுத்து உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லி நோக்கி படையெடுத்தனர். போராட்ட அறிவிப்பை அடுத்து, டெல்லி – ஹரியானா எல்லையான திக்ரி, டெல்லி – மீரட் சாலை, சிங்கு எல்லை, காசிப்பூர் ஆகிய இடங்களில் டெல்லி போலீசார் சிமென்ட் தடுப்புகளை ஏற்படுத்தி, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், காசிப்பூரில் பாரதிய கிஸான் சங்க செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத்தை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

தடுப்புகளை மீறி டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டத்தைத் துவங்கியுள்ளனர். போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் நடத்துவதால் பல இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும்” என்று சம்யுக்தா கிசான் மோர்சா சங்க தலைவர் பல்தேவ் சிங் சிர்ஸா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டுள்ளனர். போராடினால் மட்டுமே எப்போதுமே எங்கள் கோரிக்கைகள் கவனிக்கப்படுகிறது. அது ஏன்? அரசாங்கம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால் போராட்டங்களை தீவிரப்படுத்துவோம். இங்கு போராடத் திரண்டிருப்பவர்கள் அனைவருமே அரசியல் சார்பற்றவர்கள்.

கடந்த நவம்பரில் மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்பட்டன. அதன் பின்னர் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க ஒரு குழு அமைக்கப்படும். அது அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்று கூறினார்கள். ஆனால் அப்படியேதும் இதுவரை நடைபெறவில்லை. அந்த அமைப்பே கேலிக்கூத்தாக இருக்கிறது.

Also Read : மாநில அரசுகளுடன் மோதல் போக்கு! நாடு எப்படி முன்னேறும் என கெஜ்ரிவால் கேள்வி?

டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும் என்றனர். அதுவும் இன்னும் வாபஸ் பெறப்படவில்லை. லக்கிம்பூர் கேரி சம்பவத்திற்கு நீதி கோரி வருகிறோம். அது நிலைநாட்டப்பட வேண்டும். எம்எஸ்பி என்ற விவசாய உற்பத்திகளுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை எம்.எஸ்.ஸ்வாமிநாதன் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின்படி நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry