
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோவிலில் நடந்த அஜித்குமார் மரணம், தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. வெறும் ஒரு நகைத் திருட்டுப் புகார், ஒரு அப்பாவி இளைஞரின் கொடூரமான சித்திரவதைக்கும், இறுதியாக உயிர்ப்பலிக்கும் வழிவகுத்தது என்பது தமிழக காவல்துறையின் அராஜகத்தையும், திமுக அரசின் கண்மூடித்தனமான அலட்சியத்தையும் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது. இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல; மாறாக, திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் ‘அரச பயங்கரவாதத்தின்’ உச்சகட்ட வெளிப்பாடு!
மதுரையைச் சேர்ந்த நிகிதா என்ற பெண் கொடுத்த நகைத் திருட்டுப் புகாரின் பேரில், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் காவலாளி அஜித்குமார் மற்றும் அவரது நண்பர் விசாரிக்கப்பட்டு அனுப்பப்பட்ட நிலையில், மறுநாள் நடந்தேறிய கொடூரம் தமிழக மக்களின் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை சப்-டிவிஷன் டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை காவலர்கள், எவ்வித முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யாமல், அஜித்குமார் உள்ளிட்ட ஐவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல், கோ சாலை, ஏரிக்கரை என பல இடங்களுக்கு அழைத்துச் சென்று மிருகத்தனமாகத் தாக்கியுள்ளனர்.
Also Read : 25வது லாக்அப் மரணம் – திமுக அரசின் வெற்றிக் குறியீடா? கோவில் காவலாளியின் கொடூர மரணம், நீதிக்கு சவாலா?
குறிப்பாக, அஜித்குமாரின் கைகளைக் கட்டி, குடிக்க தண்ணீர் கேட்டு கதறியபோது மிளகாய்ப்பொடியை தண்ணீரில் கலந்து வலுக்கட்டாயமாக குடிக்க வைத்து, அவரது பிறப்புறுப்பிலும் மிளகாய்ப்பொடியைத் தூவி, அராஜகத்தின் உச்சத்தை எட்டியுள்ளனர். சித்திரவதையைத் தாங்க முடியாமல் அஜித்குமார் மயக்கமடைந்து சிறுநீர் மற்றும் மலம் கழித்த நிலையில், மனிதத்தன்மையற்ற அந்தக் காவலர்கள் அவரை அங்கேயே கைவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர், அருகில் இருந்தவர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அஜித்குமார், துரதிர்ஷ்டவசமாக உயிர் நீத்தான்.
இதைவிட வெட்கக்கேடானது, அஜித்குமார் வலிப்பு வந்து இறந்ததாக காவல் துறையினர் இட்டுக்கட்டிய கட்டுக்கதை. ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கை, 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ரத்தக் காயங்களும், உள்காயங்களும் இருந்ததை உறுதிப்படுத்திய பிறகுதான், கொடூரமான உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதன் விளைவாக, ஐந்து காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்ட எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்; மானாமதுரை டிஎஸ்பி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த பெயரளவிலான நடவடிக்கைகளும், அதிமுகவின் அழுத்தத்தின் விளைவே என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
திமுக ஆட்சியில் 25க்கும் மேற்பட்ட காவல் மரணங்கள்!
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், காவல் நிலைய மரணங்கள் சர்வ சாதாரணமாகிவிட்டன. இதுவரை 25-க்கும் மேற்பட்ட காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இது ஒரு சாதாரண புள்ளிவிவரம் அல்ல; இது தமிழகத்தில் சட்டவிரோத படுகொலைகள் தொடர்ந்து அரங்கேறுவதன் அப்பட்டமான அடையாளம்.
சென்னை தலைமைச் செயலக காலனியை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டபோது, அது லாக்அப் டெத் இல்லை, வலிப்பு வந்து இறந்தார் என சட்டமன்றத்திலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் கூறியது, இந்த அரசின் பொறுப்பற்றதனத்தையும், உண்மைகளை மறைக்கும் போக்கையும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது.
Also Read : சிவகங்கை காவல் கொலை: முதல்வர் பதில் அளிக்க EPS வலியுறுத்தல்!
பிரேதப் பரிசோதனை அறிக்கை உண்மையை வெளிப்படுத்திய பிறகுதான், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறினார். சட்டமன்றத்திலேயே பொய் சொன்னதற்கு வருத்தம் கூட தெரிவிக்காத முதலமைச்சர், அஜித்குமார் மரணத்தில் மன்னிப்பு கேட்டது, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இடைவிடாத, தொடர்ச்சியான அழுத்தத்தினால்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.
அஜித்குமார் மரணத்தை ஒரு சாதாரண மரணமாகப் பார்க்க முடியாது; இது ஒரு திட்டமிட்ட கடத்தல் மற்றும் படுகொலை. ஏனெனில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாமல், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படாமல், தனிப்படை காவலர்களால் அவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். முதல் நாள் விசாரித்து அனுப்பிய நிலையில், அடுத்த நாள் யாருடைய அழுத்தத்தின் பேரில் அஜித்குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கு திமுக அரசு உடனடியாகவும், வெளிப்படையாகவும் பதில் சொல்லியாக வேண்டும்.
திமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியே, அஜித்குமார் மரணத்தை “அரச பயங்கரவாதம்” என்று பகிரங்கமாகக் கண்டித்துள்ளது. இது ஆளும்கட்சியின் கூட்டணியிலேயே நிலவும் அதிருப்தியையும், இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது. கூட்டணியின் குரல்கூட இவ்வளவு ஓங்கி ஒலிக்கிறது என்றால், சாமானிய மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
அதிமுகவின் தீவிர சட்ட மற்றும் களப் போராட்டங்கள்!
இந்த விவகாரத்தில் அதிமுக தனது சட்டப் போராட்டத்தையும், களப் போராட்டத்தையும் ஆணித்தரமாக முன்னெடுத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அதிமுக வழக்கறிஞர்கள் மாரீஸ்குமார், ராஜராஜன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில், “அரசே தனது குடிமகனைக் கொன்றுள்ளது. யாரை காப்பாற்ற தமிழக அரசு முயற்சிக்கிறது?” என்று நீதிமன்றம் ஆணித்தரமாகக் கேள்வி எழுப்பியது, இந்த விவகாரத்தின் தீவிரத்தை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இது போதுமானதாகும்.
அதிமுக சார்பில் திருப்புவனத்தில் அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் சிபிஐ விசாரணை கோரியதன் விளைவாக, நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தானாக முன்வந்து சிபிஐ விசாரணைக்கு ஒப்புக்கொண்டது. இந்த ஒப்புதல், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இடைவிடாத அழுத்தத்திற்கும், நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்திற்கும் கிடைத்த வெற்றி. இது அரசின் சுயாதீனமான முடிவல்ல.
முதலமைச்சர் ஸ்டாலின் அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்டு, நியாயம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். ஆனால், இதுவரை நடந்த 25-க்கும் மேற்பட்ட காவல் கொலைகளுக்கு சம்பந்தப்பட்ட குடும்பங்களிடம் அவர் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை? இது இரட்டை நிலைப்பாடு இல்லையா? மீதமுள்ள 10 மாத ஆட்சிக்காலத்தில் காவல் கொலைகள் நடக்காது என முதலமைச்சர் உறுதியளிப்பாரா? இந்த உறுதிமொழி வெறும் சடங்கு ரீதியானதாக இருக்கக் கூடாது; தமிழக மக்களின் உயிர் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உறுதிமொழியாக இருக்க வேண்டும்.
மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க, திமுக அரசு இந்த விஷயத்தில் வெறும் வாய்மொழி அறிக்கைகளை விட்டுவிட்டு, உறுதியான, காலவரையறை நிர்ணயிக்கப்பட்ட, வெளிப்படையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையெனில், ஜனநாயகத்தின் மீதான இந்தக் கறை, திமுக ஆட்சியின் வரலாற்றில் அழிக்க முடியாத அவமானச் சின்னமாக பதிவாகிவிடும். தமிழக மக்கள் இதனை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
ஒரு அரசியல் பார்வையாளனாக, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தித்துள்ள அதலபாதாளம் மிகுந்த கவலையளிக்கிறது. ஆளும் கட்சியான திமுகவின் மெத்தனப் போக்கால், சட்டத்தின் காவலர்களே மக்களின் உயிரைக் காவு வாங்குவது, ஜனநாயகத்தின் அடிப்படை அஸ்திவாரங்களையே அசைத்துப் பார்க்கிறது. இது உள்நாட்டு விவகாரமாகத் தோன்றினாலும், ஒரு மாநிலத்தின் நிர்வாகத் திறன் குறித்த சர்வதேசப் பார்வையை வெகுவாகப் பாதிக்கிறது.
கட்டுரையாளர் : அம்மா கோபி, மூத்த ஊடகவியலாளர், அஇஅதிமுக ஐ.டி.விங். நிர்வாகி.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry