
பொதுவாகவே குழந்தைகள் பிறந்தது முதல் தாயின் அரவணைப்பில் தான் தூங்குவது வழக்கம். அம்மாவின் வாசனை, தொடுதல் மூலமாக அம்மாவை அறிந்து அவளது அமைப்பில் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து தூங்குகிறார்கள். ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு விதமான தூங்கும் முறை இருக்கும். சில குழந்தைகள் தலையணைகள், போர்வைகள் மற்றும் பொம்மைகளுடன் தூங்குவதை விரும்புவார்கள்.
எந்த வயதில் இருந்து குழந்தைகளை தனி அறையில் தூங்க வைக்க வேண்டும் என்ற சந்தேகம் பல பெற்றோருக்கு உண்டு. இன்னும் சில பெற்றோரோ குழந்தைகளை தனி அறையில் தூங்க வைப்பதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் கூட இருப்பார்கள். எனவே குழந்தைகளை தனி அறையில் எந்த வயதில் இருந்து தூங்க வைக்க வேண்டும்? அதற்கான காரணம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
Also Read : வாழ்க்கையில் எளிதாக வெற்றிபெற வேண்டுமா? உங்களுக்கு கைகொடுக்கும் காலை நேர பழக்கவழக்கங்கள்!
குழந்தைகள் ஏன் தனியாகத் தூங்கப் பழக வேண்டும்?
குழந்தைப் பருவத்தில், பெற்றோரிடம் அதிகப் பற்றுதல் இருக்கும். இந்தக் காரணத்திற்காக, அவர்களுடன் தூங்குவது தவறல்ல. ஆனால் குழந்தைகள் வளரும்போது, அவர்கள் தனியாகத் தூங்க விரும்புவார்கள். சில நேரங்களில் குழந்தையே தனியாகத் தூங்க விரும்பினால் கூட பெற்றோர்கள் விடுவதில்லை. இது முற்றிலும் தவறான செயல். இப்படித் தொடர்ந்து செய்யும் பட்சத்தில் அக்குழந்தை எப்பொழுதும் தூங்குவதற்கு பெற்றோரைத் தேடுவதற்கு அதிக வாய்ப்புண்டு.
நிபுணர்களின் கூற்றுப்படி, 7 வயது வரை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தங்களோடு தூங்க வைக்கலாம் என்று சொல்லுகின்றனர். ஏனெனில் இந்த வயது வரை அவர்கள் தங்கள் மனதளவில் குழந்தைகளாகவே இருப்பார்கள். பிறகு அவர்கள் நன்கு வளர்ந்த உடன் எதையும் சமாளிக்கும் திறன் அவர்களுக்குள் வளர ஆரம்பிக்கும்.
அதுவே குழந்தைக்கு எட்டு வயது தொடங்கியவுடன் அவர்களை தனி அறையில் தூங்க வைப்பது மிகவும் அவசியம். ஒருவேளை இந்த வயதுக்கும் பிறகும் உங்கள் குழந்தை உங்களுடன் ஒரே அறையில் தூங்க வேண்டும் என்று அடம் பிடித்தால் அவர்களுக்கு மெதுவாக எடுத்து சொல்லி அவர்களை தனி அறையில் தூங்க வைக்க பழக்கப்படுத்துங்கள். இப்படி தனியாக தூங்க வைப்பது குழந்தைகளுக்கு மனவளர்ச்சியையும் மற்றும் மனமுதிர்ச்சியையும் வழங்கும்.
குழந்தைகளைத் தனியாகத் தூங்க வைப்பதற்கான குறிப்புகள்:
திடீரென உங்கள் பிள்ளையைத் தனியாகத் தூங்க வற்புறுத்தாதீர்கள். எந்தக் குழந்தையாக இருந்தாலும் திடீரெனத் தனியாக இருக்கப் பழகிவிடாது. உங்கள் குழந்தையை நீங்கள் தனி அருகில் தூங்க வைக்க விரும்பினால் அதை படிப்படியாக அவர்களுக்கு பழக்கப்படுத்துங்கள். அதாவது நீங்கள் முதலில் உங்களது படுக்கைக்கு அருகில் அவர்களுக்கு படுக்கைப் போட்டு தூங்க பழக்கப்படுத்துங்கள். பிறகு தனியறையில் தூங்க வைக்கவும்.
ஒருவேளை உங்கள் குழந்தை தனியாக தூங்க பயப்படுகிறார்கள் என்றால் அவர்களை ஒருபோதும் வற்புறுத்த வேண்டாம். அதற்கு மாறாக வாரத்திற்கு இரண்டு நாட்கள் தனியாகத் தூங்க பழக்கப்படுத்தவும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் குழந்தைகள் தானாகவே தனியாக தூங்க ஆரம்பித்து விடுவார்கள்.
Also Read : முடி அதிகமாக கொட்டுதா? இதை மட்டும் செய்யுங்க… மூன்றே மாதத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!
உங்கள் குழந்தை தனியாகத் தூங்க பயப்படுகிறார்கள் என்றால் நீங்கள் அவர்கள் தூங்கும் வரை அவர்களுக்கு அருகில் இருங்கள். இப்படி செய்வதன் மூலம், குழந்தைகள் சிரமம் இன்றி தனியாக தூங்குவதற்கு பழகிக் கொள்வார்கள். குழந்தைகளை இரவு தூங்கும் வரை அவர்களுக்கு கதை சொல்லலாம். இப்படி செய்வதன் மூலமும் குழந்தைகள் சீக்கிரமாகவே தனியாக தூங்குவதற்கு பழகிக் கொள்வார்கள்.
முக்கியமாக குழந்தைகள் தூங்க செல்வதற்கு முன் கண்டிப்பாக பல் துலக்க வேண்டும் என்று சொல்லுங்கள். இது அவர்களின் சிறந்த தூக்கம் மற்றும் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும். பல்துலக்க செய்துவிட்டு, நைட் டிரெஸ் போட்டு விட்டு அவர்களை மெத்தையில் தூங்கும் நிலையில் படுக்கவைத்து போர்வை போத்தி அருகில் அமர்ந்து நல்ல கதை ஒன்றைச் சொல்லுங்கள்.
பின்னர் விளக்குகளை அணைத்து விட்டு குட்நைட் சொல்லிவிட்டுச் செல்லுங்கள். உங்கள் குழந்தைகள் தனியாக உறங்குவதை காண சிரமமாக இருக்கலாம். இன்றே இந்த வழக்கத்தை முறித்துக் கொள்ளலாம் எனத் தோன்றலாம். ஆனால் இவ்வாறாகச் செய்வது மிகவும் முக்கியம். இப்படிச் செய்தால் தான் உங்கள் குழந்தைகள் விரைவாகத் தனியாக உறங்குவதற்குப் பழகுவார்கள்.
நிபுணர்களின் கூற்றுப்படி, குழந்தைகள் ஆரம்பத்தில் இருந்து பெற்றோருடன் தூங்குவதற்குப் பழகி இருப்பதால் தனியறையில் தூங்குவதை மிகவும் சிரமமாக உணர்வார்கள் மற்றும் அவர்களுக்குள் பயமும் இருக்கும். ஆனால், குழந்தைகளை தனி அறையில் தூங்க பழகும்போது அவர்கள் உணர்ச்சி ரீதியாக வலுப்படுவார்கள் மற்றும் அவர்கள் மனதில் இருக்கும் பயமும் நீங்கும். இதனால் அவர்கள் பெற்றோரை சார்ந்து இல்லாமல் தனியாக வாழ கற்றுக் கொள்வார்கள்.
Image Source : Getty Image
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry