சற்றுமுன்

எம்.ஜி.ஆர்-க்கும் காவித்துண்டு போத்திட்டீங்களே! உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் வலியுறுத்தல்

எம்.ஜி.ஆர்-க்கும் காவித்துண்டு போத்திட்டீங்களே! உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் வலியுறுத்தல்

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு அணிவித்த செயலுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உருவச் சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்து, களங்கப்படுத்திய கொடுஞ்செயல் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நிகழ்ந்திருப்பது மிகுந்த மன வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது.

இந்த காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. சமீபகாலத்தில் இதுபோன்ற, சமூகத்திற்குத் தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளைச் சேதப்படுத்துவது, களங்கப்படுத்துவது போன்ற இழிசெயல்கள் மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. உயரிய கொள்கை என்பது நமது லட்சியங்களைப் பிறர் ஏற்கப் பாடுபடுவது மட்டுமல்ல, மாற்றுக் கருத்துகளையும், குறிப்பாக மக்களின் நம்பிக்கைகளையும் மதிப்பதும் ஆகும்.

கருத்துச் சுதந்திரமென்ற பெயரில் தரமற்ற விமர்சனங்களால் பிறர் மனங்களைக் காயப்படுத்துவது, மனித நாகரிகத்திற்கு மாறான செயலாகும். மொழியால், இனத்தால், மதத்தால், சாதியால் வேறுபட்டு இருந்தாலும், இந்தியர் என்கிற ஒற்றைச் சொல்லில் பெருமிதம் கொண்டெழுகிற நமது ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கவும், அதன்மூலம் ஓட்டு அரசியல் பிழைப்பிற்கும் சிலர் திட்டமிடுவதை ஒருபோதும் தமிழினம் ஏற்காது.

அரவிந்தரும், கவிஞர் பாவேந்தரும் உதித்த புதுச்சேரி மண்ணில், புரட்சித் தலைவரின் திருவுருவச் சிலைக்கு அவமரியாதையை ஏற்படுத்தியிருக்கும் விஷமிகளை விரைந்து கண்டுபிடித்து, அவர்களைப் பின்னால் இருந்து இயக்கும் சமூக விரோதிகளையும் இனம் கண்டு, சமூகத்தின் முன்னும், சட்டத்தின் முன்னும் அவர்களைத் தோலுரித்து காட்டிட, கடுமையான விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி முதல்வரைக் கேட்டுக்கொள்வதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

CATEGORIES
error: Content is protected !!