ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் ரத்து! 2 நினைவிடங்கள் எதற்கு? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

0
10

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையமும், அங்குள்ள அசையும் சொத்துக்களும் அரசுடமையாக்கப்பட்டன.

இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல, வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி சேஷசாயி விசாரித்தார்

அப்போது, தீபா மற்றும் தீபக் தரப்பில், தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை எனவும், வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும், நினைவில்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது

மேலும் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டது, வீட்டிற்கு 67 கோடியே 90 லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்து, அந்த தொகையை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் அதிகாரி செலுத்தியது தவறு எனவும் தீபா, தீபக் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சேஷசாயி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டு இருந்தார்

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசுடமை ஆக்கியது செல்லாது என உத்தரவிட்டுள்ளார். வேதா நிலையத்தை, ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக்கிடம்  3 வாரங்களில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்மேலும், வேதா நிலையத்துக்கு இழப்பீடாக செலுத்தப்பட்ட 67 கோடியே 90 லட்சம் ரூபாயை அரசிடம் திருப்பி வழங்க உத்தரவிட்ட நீதிபதி, ஜெயலலிதாவுக்கு வேதா நிலையம், பீனிக்ஸ் நினைவிடம் என இரண்டு நினைவிடம் எதற்கு? என கேள்வி எழுப்பினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*