
வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோ அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு, அந்நாட்டின் நேரப்படி 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் தெற்கில் உள்ள மராகேஷ் நகரை மையமாக கொண்டு உண்டானது. இது ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானது. என தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால், மாரகேஷ் (Marrakesh) பகுதியின் தெற்கே 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அட்லஸ் மலைகளில் (Atlas Mountains) அதிகளவில் சேதம் ஏற்பட்டிருக்கிறது. நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 2,012 பேர் பலியாகினர். மொரோக்கோ உள்துறை அமைச்சகம் இதை உறுதிபடுத்தி இருக்கிறது. மேலும் 2,059 பேர் காயமடைந்திருக்கிறார்கள். இதில் 1,404 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அல்-ஹவுஸ் மையப்பகுதி மற்றும் தாரூடன்ட் மாகாணங்களில் வாழ்ந்தவர்கள்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மூன்று நாள்கள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அனைத்து பொது கட்டடங்களிலும் மொரோக்கோ நாட்டின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு அதிக அளவில் ரத்தம் தேவைப்படுவதால், நாட்டு மக்களிடம் ரத்த தானம் வழங்க மராகேஷில் உள்ள ரத்ததான மையம் அழைப்பு விடுத்திருக்கிறது.

மொரோக்கோவின் அண்டை நாடாகவும், போட்டியாளர் நாடாகவும் கருதப்படும் அல்ஜீரியா தனது வான்வெளி வழியாக அனைத்து மொராக்கோ விமானங்களுக்கும் உதவி செய்கிறது. உணவு விநியோகம் மற்றும் மருத்துவ உதவிகளைச் செயல்படுத்த இரண்டு ஆண்டுக்கால தடையை நிறுத்தி வைப்பதாக அல்ஜீரியா அறிவித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “உயிரிழப்பு மற்றும் பேரழிவு குறித்து ஆழ்ந்த வருத்தம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
Also Read : டெல்லியில் தொடங்கியது ஜி20 உச்சி மாநாடு! பிரதமர் இருக்கைக்கு முன் வைக்கப்பட்ட ‘பாரத்’ பெயர்ப்பலகை!
இந்தியப் பிரதமர் மோடி, “மொரோக்கோவில் நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளால் மிகவும் வேதனையடைந்தேன். இத்தகைய சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் மொரோக்கோ மக்களுடன் இருக்கின்றன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இந்தக் கடினமான நேரத்தில் மொரோக்கோவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

சீனத் அதிபர் ஜி ஜின்பிங், “பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த வருத்தம். மொராக்கோ அரசும் மக்களும் இந்த பேரழிவின் தாக்கத்தைச் சமாளித்து மீண்டு வருவார்கள் என நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்தார். 1960-ம் ஆண்டில் அகாடிரில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 12,000க்கும் அதிகமானவர்கள் பலியானார்கள். 1980-ல் அல்ஜீரியாவில் 7.3 ரிக்டர் அளவிலான எல் அஸ்னாம் நிலநடுக்கத்தில் 2,500 பேர் உயிரிழந்தனர். குறைந்தது 300,000 பேர் வீடுகளை இழந்தனர்.
2004-ம் ஆண்டில், வடகிழக்கு மொரோக்கோவின் அல் ஹோசிமாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது குறைந்தது 628 பேர் கொல்லப்பட்டனர், 926 பேர் காயமடைந்தனர். இந்த வரிசையில் தற்போது மொரோக்கோ நிலநடுக்கமும் இணைந்துள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry