சற்றுமுன்

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! கண் திறந்து தூங்கும் வில்லியனூர் போலீஸ்!

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! கண் திறந்து தூங்கும் வில்லியனூர் போலீஸ்!

புதுச்சேரி வில்லியனூர் போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் அதிகரித்து வரும் கொலை சம்பவங்கள் மக்களை பீதியிலேயே வைத்திருக்கிறது. ரவுடிகள் மீதான போலீஸின் பாராமுகமே இதற்குக் காரணம் என பரவலாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

வில்லியனூர் கோட்டத்துக்கு உட்பட்டு, வில்லியனூர், மங்கலம் ஆகிய இரண்டு காவல்நிலையங்கள் உள்ளன. இன்ஸ்பெக்டராக பழனிவேலும், உதவி ஆய்வாளராக குமாரும் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் மெத்தனப்போக்குதான் தொடர் கொலைகளுக்குக் காரணம் என்பதே அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு.

வில்லியனூர் பைபாஸ் சாலை, கோபால நாயக்கர் மண்டபம் அருகே, நடராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த வார்டு மணி என்கிற ராமகிருஷ்ணன், மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார். இவர் அமைச்சர் நமசிவாயத்துக்கு மிகவும் நெருக்கமானவர். ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் இந்தக் கொலை நடந்துள்ளது.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஒருவாரமாக போலீஸிடம் அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால், இன்ஸ்பெக்டர் பழனிவேலு கண்டுகொள்ளாததால், வார்டு மணி படுகொலைசெய்யப்பட்டார் என கூறப்படுகிறது. போலீஸ் ஆதரவுடனேயே இந்தக் கொலை நடந்ததாக அவருக்கு நெருக்கமான நண்பர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இதேபோல்தான், பெட்ரோல் பங்க் அதிபர் புருஷோத்தமன் கொலையும் நடந்துள்ளது. சேதராப்பட்டில் இருந்து வந்துகொண்டிருந்த அவரை, பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், பத்துக்கண்ணு என்ற இடத்தில் மறித்து, கழுத்தை அறுத்து கொலைசெய்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இதுவரையில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் இரட்டைக் கொலை மக்களை அதிர வைத்தது. பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்த ரவுடி அருண்குமாருக்கும், தமிழக பகுதியான வழுதாவூரை சேர்ந்த முகிலனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. ஒருவரை ஒருவர் கொலை செய்வதற்காக சதி திட்டம் தீட்டி வந்தனர். இந்தத் தகவல் வில்லியனூர் இன்ஸ்பெக்டர் பழனிவேலுவுக்கு தெரியும் என கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து அவர் எச்சரிக்காத நிலையில், முகிலனின் கூட்டாளிகள் முரளி, சந்துரு ஆகியோர் கொல்லப்பட்டனர். போலீஸார் ரோந்து சென்றிருந்தால் இந்தக் கொலை நடந்திருக்காது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதேபோன்று, வில்லியனூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் கொலைகள் நடப்பதற்கும், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதற்கும், இன்ஸ்பெக்டர் பழனிவேலுதான் முக்கிய காரணம் என்று பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது. பதவி உயர்வுக்காக காத்திருக்கும் அவர், தேவையில்லாத பிரச்னைகளில் மாட்டிக்கொள்ளக் கூடாது எனக் கருதி, பிரச்னைகளை கண்டும் காணாமல் செல்கிறார் என கூறப்படுகிறது.

இன்ஸ்பெக்டர் பழனிவேலுவின்  உத்தரவோ, வழிகாட்டுதலோ இல்லாததால், உதவி ஆய்வாளர் குமாரும் மெத்தனமாகவே இருந்து வருவதாக தெரிகிறது. இவரைப்பற்றியும் பல திடுக்கிடும் தகவல்கள் வருகின்றன. இதுபற்றியும் விரைவில் Exclusive செய்திகளை பார்க்கலாம்.

கொலை மிரட்டல் இருப்பதாக கூறிய அமைச்சர் நமசிவாயத்தின் தீவிர ஆதரவாளரைக்  கூட காப்பாற்றாத வில்லியனூர் போலீஸா, நம்மை காப்பாற்றப்போகிறது என மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

போலீஸார் துடிப்புடன் களமிறங்கி, ரோந்து பணிகளை அதிகப்படுத்தி, ரவுடிகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றினால்தான், வில்லியனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கு சீராகும். இவ்வாறு செய்யாமல், கண்ணை திறந்துகொண்டு காவலர்கள் தூங்கிக்கொண்டிருந்தால், நிலைமை மேலும் மோசமாகும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

CATEGORIES
error: Content is protected !!