‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்த, குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு சமர்ப்பித்த அறிக்கையை, மத்திய அமைச்சரவை இன்று (செப்.18) ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. இது தொடர்பான மசோதா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
The Cabinet has accepted the recommendations of the High-Level Committee on Simultaneous Elections. I compliment our former President, Shri Ram Nath Kovind Ji for spearheading this effort and consulting a wide range of stakeholders.
This is an important step towards making our…
— Narendra Modi (@narendramodi) September 18, 2024
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்த குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு, தனது அறிக்கையை கடந்த மார்ச் மாதம் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் வழங்கியது. இந்த அறிக்கையை அமைச்சரவையின் முன் வைப்பது, சட்ட அமைச்சகத்தின் 100 நாள் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருந்தது. குழு அளித்த பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து ஆராய்வதற்காக ‘செயல்படுத்தும் குழு’ ஒன்றை அமைக்கவும் குழு முன்மொழிந்தது.
ஒரே நேரத்தில் நடத்தப்படும் தேர்தல்கள் வளங்களைச் சேமிக்கவும், வளர்ச்சி மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்தவும், “ஜனநாயகக் கொள்கையின் அடித்தளங்களை” ஆழப்படுத்தவும், “இந்தியா, அதுவே பாரதம்” என்பதை நனவாக்கவும் உதவும் என்று குழு கூறியுள்ளது. மாநிலத் தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, இந்திய தேர்தல் ஆணையம் பொது வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளைத் தயாரிக்கவும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.
தற்போது, மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பொறுப்பேற்றுள்ளது. அதே நேரத்தில், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சி தேர்தல்களை மாநில தேர்தல் ஆணையங்கள் நடத்துகின்றன. இந்நிலையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான உயர்மட்டக் குழு, 18 அரசியலமைப்பு திருத்தங்களை பரிந்துரைத்துள்ளது. அவற்றில் பெரும்பாலான திருத்தங்களுக்கு மாநில சட்டப்பேரவைகளின் ஒப்புதல் தேவையில்லை. இருப்பினும், இவற்றுக்கு சில அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் தேவைப்படும். அவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
Also Read : 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான இலவச சுகாதார காப்பீடு திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?
ஒற்றை வாக்காளர் பட்டியல் மற்றும் ஒற்றை வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான சில முன்மொழியப்பட்ட மாற்றங்களுக்கு குறைந்தது பாதி மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவது குறித்த தனது அறிக்கையை சட்ட ஆணையம் விரைவில் கொண்டு வர வாய்ப்புள்ளது.
மக்களவை, மாநில சட்டப்பேரவைகள், நகராட்சிகள், பஞ்சாயத்துகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய அரசாங்கத்தின் மூன்று அடுக்குகளுக்கும் 2029 முதல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், தொங்கு நாடாளுமன்றம், சட்டமன்றம் ஏற்பட்டால், ஒன்றிணைந்த அரசாங்கத்துக்கான ஏற்பாடுகளை செய்யவும் சட்ட ஆணையம் பரிந்துரை செய்ய வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு இமாச்சலப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, கர்நாடகா, தெலங்கானா, மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களில் புதிய அரசு ஆட்சி அமைத்தது. இந்த மாநிலங்களுக்கு 2028ல் மீண்டும் தேர்தல் நடக்கும். 2029ல் தேர்தல் நடத்தினால் புதிய அரசாங்கங்கள் சுமார் ஒரு வருடம் அல்லது அதற்கும் குறைவாக ஆட்சியில் இருக்கும்.
Also Read : தினமும் ஒன்று – இரண்டு கிராம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்கள் 2027-ல் அடுத்த தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் அமலானால், இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான காலத்திற்கு நீடிக்கும் அரசாங்கங்களாகவே அவை இருக்கும். இதேபோல், மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 2026ஆம் ஆண்டில் தேர்தல் நடக்க உள்ளது.
இந்த மாநிலங்கள் மூன்று ஆண்டுகள் நீடிக்கும் அரசாங்கங்களாக இருக்கும். அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் மட்டுமே இந்த ஆண்டு தேர்தலை சந்திக்க உள்ளது. ஒடிசா, ஆந்திரா, சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு மக்களவைத் தேர்தல்களுடன் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும்.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்ததை அடுத்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்தத் திட்டம் நடைமுறைக்கு ஏற்றது அல்ல. இது பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி. இது வெற்றி பெறாது. மக்கள் இதனை ஏற்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்த முன்மொழியும் இந்தத் திட்டத்துக்கு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. உச்ச நீதிமன்றத்தின் பல நீதிபதிகளும் இத்திட்டத்துக்கு ஆதரவாக உள்ளனர். எனினும், இதனை நடைமுறைப்படுத்த, அரசியலமைப்பில் குறைந்தபட்சம் ஆறு திருத்தங்கள் தேவை. இதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தனிப்பெரும்பான்மை இருந்தாலும், இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவது ஆளும் கூட்டணிக்கு சவாலாக இருக்கும். மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 இடங்களில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 112 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகள் சார்பில் 85 உறுப்பினர்கள் உள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு, மத்திய அரசுக்கு குறைந்தபட்சம் 164 வாக்குகள் தேவை.
இதேபோல், மக்களவையில் மொத்தமுள்ள 545 இடங்களில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களைக் கொண்டுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 364 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனினும், மசோதா தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும்போது அவையில் உள்ள உறுப்பினர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் மட்டுமே பெரும்பான்மை கணக்கிடப்படும் என்பதால் நிலைமை மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அதனைத் தொடர்ந்து இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும். எல்லா தடைகளையும் கடந்தால் மட்டுமே, அரசு திட்டமிடுவதுபோல் இச்சட்டத்தை 2029-ல் நடைமுறைப்படுத்த முடியும் என்பது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, மக்களவைக்கும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து அரசியல் கட்சிகளின் கருத்தை தேசியச் சட்ட ஆணையம் கேட்டறிந்தது. அப்போது, இந்தத் திட்டத்தில் விடை காண வேண்டிய கேள்விகள் ஏராளமாக இருக்கின்றன என்ற வாதமும் முன்வைக்கப்பட்டன.
1967 வரை மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒன்றாகத்தான் தேர்தல்கள் நடத்தப்பட்டு வந்தன. அதற்குப் பிறகு சில மாநில அரசுகள் கலைக்கப்பட்டது, புதிய மாநிலங்கள் உருவானது உள்ளிட்ட காரணங்களால் மக்களவைக்கும் பல மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் வெவ்வேறு நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானது.
1983-ம் ஆண்டிலும் , 1999-ம் ஆண்டிலும் மீண்டும் பழைய நடைமுறைக்குத் திரும்புவதற்கான சாத்தியங்கள் பரிசீலிக்கப்பட்டன. 2014 மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் வாக்குறுதிகளில் ஒன்றாக இது இடம்பெற்றது. 2016-இல் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 2018-இல் தேசியச் சட்ட ஆணையம் இது தொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்கத் தொடங்கியது. ஆனால், அப்போதும் அரசியல் கட்சிகளின் கருத்தொற்றுமையைப் பெற முடியவில்லை.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry