கங்கை முதல் இலங்கை வரை வெற்றிக்கொடி…! பொற்கால ஆட்சியை வழங்கிய ராஜேந்திர சோழன்! 430 ஆண்டுகள் ஆட்சி செய்த சோழர்கள்!

0
56
Rajendra Cholan was unique in dividing the winning places into zones and implementing creative projects.

சோழ வம்சத்தின் தலைசிறந்த பேரரசர்களில் ஒருவர் முதலாம் இராஜேந்திர சோழன்… தெற்காசிய வரலாற்றில் அதிகாரம் மற்றும் கம்பீரத்துடன் எதிரொலிக்கும் பெயர். இந்த புகழ்பெற்ற ஆட்சியாளர் பிறந்தபோது வைத்த பெயர் வேறு. ராஜேந்திர சோழனின் உண்மையான பெயர் மதுராந்தக சோழன்.

பேரரசர் ராஜராஜ சோழன் மற்றும் ராணி திரிபுவன மாதேவியார் ஆகியோருக்குப் பிறந்த மதுராந்தகர் 1012இல் பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் 1002 முதலே தந்தையின் போர் வெற்றிகளில் அவரது பங்களிப்பும் இருந்தது. 1014இல் அரியணை ஏறியதும் மதுராந்தகர், முதலாம் ராஜேந்திர சோழன் என்ற ஆட்சிப் பெயரை ஏற்றுக்கொண்டார் . அவரது ஆட்சியானது பல இராணுவ வெற்றிகளால் குறிக்கப்பட்டது, கங்கைக்கான வரலாற்றுப் பயணம் உட்பட, அவருக்கு ‘ கங்கைகொண்ட சோழன் ‘ என்ற பட்டத்தையும் பெற்றுத் தந்தது. விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு, இராசேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது.

Image Credit : BBC

ராஜேந்திரனின் பிறந்த நாள் மற்றும் நட்சத்திரம் 2014-க்கு முன்புவரை `மார்கழித் திருவாதிரை’ என்றே தவறுதலாக கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் திருவாரூர் தியாகராஜர் கோவில் மேற்குப் புறச் சுவரில் உள்ள குமுதப்படையில் இருந்த கல்வெட்டு, ‘ஆடித் திருவாதிரைதான் ராஜேந்திரனின் பிறந்த நட்சத்திரம்’ என்பதை தெளிவாக உறுதிப்படுத்தியது. ‘கோனேரின்மை கொண்டான்’ என்று தொடங்கும் அந்த கல்வெட்டில், ‘யாம் பிறந்த ஆடித் திருவாதிரையும் ஐயனின் ஐப்பசி சதயமும்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தொல்காப்பியம் மேற்கோளிட்டுக் காட்டிய தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளை மிக குறுகிய காலத்திலேயே மாற்றி அமைத்தவர் ராஜேந்திர சோழன். இதுபற்றி கூறும் கல்வெட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான குடவாயில் பாலசுப்பிரமணியன், ‘தன் ஆட்சிக்காலத்தில் வடக்கே கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியதோடு, கடல் கடந்து இலங்கை, சுமத்ரா, கடாரம், ஸ்ரீ விஜயம், மலேயா, சுமத்ரா ஆகிய கிழக்காசிய தேசங்களையும் வென்றவர் ராஜேந்திர சோழன். கி.பி. 1017-ல் இலங்கை மீது படையெடுத்து வென்றார். இந்த வெற்றியை இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் தெளிவாக விளக்கி உள்ளது.

Also Read : ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை வசதி கொண்ட மருத்துவமனை! சோழர்களின் அசத்தலான ஆட்சி முறையை பகிரும் கல்வெட்டு!

இலங்கையில் ராஜேந்திர சோழனின் கல்வெட்டுகள் ‘புலனருவ, திரிகோணமலை, அத்தர குழளியா, பெரியகுளம், மாதோட்டம், நித்த வினோதம், கனதாரவ முதலிய இடங்களில் உள்ளன. அதேபோல் கடார வெற்றியும் ராஜேந்திர சோழனின் முக்கிய சாதனையாகும். லெய்டன் செப்பேட்டில் கடார வெற்றி குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தன் ஆட்சிக்காலத்தில் வடக்கே கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியதை மெய்கீர்த்தி சாசனத்தில், கங்கைநீரை எடுத்த இடம் பற்றி கூறப்பட்டுள்ளது.

“நித்தில நெடுங்கடல் உத்திரலாடமும் வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும் ..” என விவரித்து கங்கை நீருடன் சோழர் படை தாயகம் திரும்பியது என அதில் விவரிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரனின் கங்கை வெற்றியை பறைசாற்றும் கல்வெட்டுகள், கும்பகோணம் திருலோக்கியில் உள்ளது. “இராஜேந்திர சோழ தேவர் கங்கை கொண்டு எழுந்தருளுகின்ற இடத்து திருவடி தொழுது..” என்று அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு நிர்வாகத்திலும் ராஜேந்திர சோழனின் செயல்பாடு போற்றும்படியாக இருந்தது. வெற்றி பெற்ற இடங்களை மண்டலங்களாக பிரித்து ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தும் வகையில் கைதேர்ந்தவர்களை அப்பகுதிக்கு தலைமை நிர்வாகிகளாக நியமனம் செய்தார்.” என்று குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Also Read : வியக்க வைக்கும் சோழர்களின் நீர் மேலாண்மை! சதய விழா நாளில் மாமன்னன் ராஜராஜசோழனை வணங்குவோம்!

கி.பி.1023-ல் கங்கை வெற்றியின் நினைவாக, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் என்ற தலைநகரை கி.பி. 1027-இல் ராஜேந்திர சோழன் நிர்மாணித்தார். அங்கு கங்கை கொண்ட சோழீஸ்வரம் என்னும் கோவிலையும் கட்டினார். கங்கை கொண்ட சோழபுரம் சுமார் 250 ஆண்டுகள் சோழ மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது. கோவிலின் மேற்கில் ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் ஏரியை அமைத்தார். இந்த ஏரி தற்பொழுது பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது. நீர் மேலாண்மையில் சோழர்கள் தனித்துவம் பெற்றவர்கள்.

Image Credit : Chegg
Image Credit BBC

ராஜேந்திர சோழன் காலத்தில், இன்றைய இந்தியாவின் பெரும்பகுதி நிலப்பரப்பும், கடல் தாண்டிய இலங்கையும், வெகுதூரத்தில் உள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளும் சோழப் பேரரசின் எல்லையாக இருந்துள்ளன. ராஜேந்திரனின் முதல் மகனான ராஜாதிராஜனின் திருமழபாடி கல்வெட்டில், “சூரியகுலத்தில் உதித்து, வடதிசையில் கங்கைப் பகுதியையும், தென்திசையில் இலங்கையையும், மேற்கு திசையில் கேரளாவையும் (மகோதை), கிழக்கு திசையில் கடாரத்தையும் கொண்ட எனது தந்தையின் ஆட்சி பரப்பே எனது எல்லையாக இருந்தது” என்று பதிவு செய்துள்ளார்.

“மௌரியர்களின் ஆட்சி காலம் 137 வருடங்கள், குப்தர்கள் 223 ஆண்டுகள், பல்லவர்கள் 325 ஆண்டுகள், சோழர்கள் 430 ஆண்டுகள், விஜயநகர பேரரசு 340 ஆண்டுகளும் நிலைத்திருந்தன. ஆங்கிலேயர்கள் 187 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டுள்ளனர். ஆனால் சோழ பேரரசு மட்டும் தான் 430 ஆண்டுகள் தொடர்ச்சியான நிலையான நீடித்த ஆட்சியை கொடுத்த ஒரே பேரரசு ஆகும்.” ராஜேந்திர சோழன் 32 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். இவர் தனது ஆட்சி காலத்தில் முதல் 13 ஆண்டுகள் மட்டுமே போர்கள் நடத்தியுள்ளார். கடைசி 19 ஆண்டுகளில் எந்த போரையும் நடத்தவில்லை. முதலில் மேற்கத்திய சாளுக்கியர்கள் மற்றும் அனுராதபுர ஆட்சியாளர்களுக்கு எதிராக தனது வீரத்தை வெளிப்படுத்தினார். இலங்கை, சேர, மற்றும் பாண்டிய நாட்டு அரசுகளில் கிளர்ச்சியாளர்களை ராஜேந்திர சோழன் தோற்கடித்தார்.

ராஜேந்திர சோழன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள நாட்டேரி என்ற ஊரின் அருகில் பிரம்மதேசம் கிராமத்தில் இறந்தார். இதற்குச் சான்றாக பிரம்மதேசத்திலுள்ள சந்திர மெளலீஸ்வரர் கோவிலில் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

With Input BBC.