சற்றுமுன்

பெரும் பலத்துடன் ராஜபக்ச! இலங்கையில் தமிழர்களின் உரிமையை இந்தியா காக்க ராமதாஸ் வலியுறுத்தல்

பெரும் பலத்துடன் ராஜபக்ச! இலங்கையில் தமிழர்களின் உரிமையை இந்தியா காக்க ராமதாஸ் வலியுறுத்தல்

பெரும் பலத்துடன் ராஜபக்ச பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கையில் தமிழர்களின் எஞ்சிய உரிமையை இந்தியா காக்க வேண்டும் என பா... நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ச மீண்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களின் உரிமை, பாதுகாப்பு குறித்த அச்சங்கள் எழுந்துள்ளன. இலங்கைத் தேர்தலில் பெரும்பான்மையை பெறுவதற்காக ராஜபக்ச சகோதரர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள்தான் மிகவும் ஆபத்தானவை ஆகும்.

இலங்கை மக்கள்தொகையில் தமிழர்களும், முஸ்லிம்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். இலங்கைத் தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களின் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மை பெறுவது சாத்தியம் கிடையாது.

ஆனால், அதையும் கடந்து ராஜபக்ச சகோதரர்கள் பெரும்பான்மை பெற்றதற்குக் காரணம் இலங்கையின் அனைத்துப் பகுதிகளில் வாழும் சிங்களர்களிடையே இனவெறியை வரலாறு காணாத அளவுக்குத் தூண்டியதுதான். அதுமட்டுமின்றி, தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சிங்களர்களை அதிக அளவில் குடியேற்றம் செய்தும், தமிழர்களை அச்சுறுத்தியும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கைத் தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், சிங்களர்களுக்கு நன்றி செலுத்துவதற்காகவும், அவர்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட ராஜபக்ச சகோதரர்கள் முடிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழர்களுக்குக் கிடைத்திருந்த குறைந்தபட்ச அரசியல் அதிகாரமும் கூட பறிக்கப்பட்டுவிடும். அதுமட்டுமின்றி, 13-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை ரத்து செய்வது இந்தியாவை அவமதிக்கும் செயலாகும்; அதை இந்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

இப்போது இலங்கையின் அனைத்து அதிகாரங்களும் ஒரே குடும்பத்தின் கீழ், அதுவும் போர்க்குற்றங்களை நிகழ்த்திய குடும்பத்தின் கீழ், வந்துவிட்ட நிலையில், இனி ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் எனத் தோன்றவில்லை. இத்தகைய சூழலில் ஈழத் தமிழர்களின் அரைகுறை உரிமைகளையும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது இந்திய அரசின் கடமை ஆகும்.

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை விரைவுபடுத்தி குற்றம் இழைத்தவர்கள் அனைவருக்கும், அவர்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும், தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
error: Content is protected !!