சற்றுமுன்

கொரோனாவை சிறப்பாகக் கையாண்ட மாநிலங்களில் தமிழகத்துக்கு முதலிடம்!  இந்திய மருத்துவ ஆராய்சி மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கொரோனாவை சிறப்பாகக் கையாண்ட மாநிலங்களில் தமிழகத்துக்கு முதலிடம்!  இந்திய மருத்துவ ஆராய்சி மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பரிசோதனைகளின் எண்ணிக்கை, தெளிவான புள்ளிவிவரங்களை அறிவித்தல் உள்ளிட்டவைகளை அடிப்படையாகக்கொண்டு, ICMR எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்சி மையம், மாநிலவாரியாக, SARS-Cov 2 எனப்படும் கோவிட்-19 பற்றிய பட்டியலை அறிவித்துள்ளது. அதில், சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சாதாரணமாக இரண்டு விதங்களில் கோவிட்-19 தொற்றியிருக்கிறதா? இல்லையா? என்பதை உறுதி செய்ய முடியும். ஒன்று பிசிஆர் டெஸ்ட், மற்றொன்று, ஆன்ட்டிஜென் எனப்படும் ரத்தப்பரிசோதனை மூலம் தொற்று உள்ளதா என்பதை உறுதிசெய்வது. இந்தியாவில் கோவிட்-19 தொற்று பரவத் தொடங்கியபோது, 100% அளவுக்கு பிசிஆர் டெஸ்ட்டே எடுக்கப்பட்டன. ஆனால், தற்போது, 60% அளவுக்கு பிசிஆர் டெஸ்ட்டின் அளவு குறைய,  40% அளவுக்கு ஆன்ட்டிஜென் டெஸ்ட் செய்வது அதிகரித்துள்ளது.

இதில், ஆன்ட்டிஜென் டெஸ்ட் மூலம், கோவிட்-19 தொற்று உள்ளதா என்பதை துல்லியமாக கண்டறிய முடியாது. ஆன்ட்டிஜென் டெஸ்ட்டில், கோவிட்-19 தொற்றுக்கு வாய்ப்பில்லை என முடிவு வந்த பலருக்கு, பிசிஆர் டெஸ்ட்டில் தொற்று உறுதியாகியிருக்கிறது. இதுதான் பிரச்சனைக்குக் காரணம். தேசிய அளவில், ஆன்ட்டிஜென் டெஸ்ட் அதிகளவு எடுக்கப்பட்ட காரணத்தால், சுமார் 34 லட்சம் பேர்,  கோவிட்-19 தொற்றுள்ளவர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. Asymptomatic என்றறியப்படும் இவர்களால் மேலும் பலருக்கு தொற்று பரவியுள்ளதாக தெரிகிறது.

தேசிய அளவில் நிலைமை இவ்வாறு இருக்க, கோவிட்-19 தொற்று கட்டுப்படுத்துதலின் பல படிநிலைகளில், தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. தொற்று பரிசோதனையில், 100%  பிசிஆர் டெஸ்ட்டுடன் தமிழ்நாடு, ராஜஸ்தான் மாநிலங்கள் முதலிடத்தில் இருக்கின்றன. மிக மோசமான செயல்பாடு என்ற வரிசையில், பீகார், தெலங்கானா, குஜராத், டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

தொற்று பாதிப்பை குறைத்துக் காட்டிய மாநிலங்களில் (அதிக ஆன்ட்டிஜென் டெஸ்ட் காரணமாக) பீகார் முதலிடத்தில் இருக்கிறது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரத்தைக் காட்டிலும், பீகாரில் 132 சதவிகிதம் அதிகம் பாதிப்பு உள்ளது. இந்த வரிசையில் தெலங்கானா, குஜராத் மாநிலங்களும் இடம் பெற்றுள்ளன. மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களிலும் மட்டும் சுமார் 10 லட்சம் தொற்றாளர்கள் கணக்கில் வரவில்லை. அதேநேரம், ஒளிவுமறைவின்றி, நேர்மையாக புள்ளிவிவரங்களை அளித்த மாநிலங்களாக தமிழ்நாடும், ராஜஸ்தானும் இருக்கின்றன.

மாநில மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்பட்ட பரிசோதனை அடிப்படையிலான புள்ளிவிவரத்தில், தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. இங்கு, இதுவரையில் 1 கோடிக்கும் அதிகமான பிசிஆர் டெஸ்ட்டுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, பத்தாயிரம் பேருக்கு, ஆயிரத்து நானூறு என்ற அடிப்படையில் பரிசோதனை செய்யப்படுகிறது. (தேசிய அளவில், பத்தாயிரம் பேருக்கு 550 பரிசோதனைகளே செய்யப்படுகின்றன) அடுத்தபடியாக, பத்தாயிரம் பேருக்கு, ஆயிரத்து முன்னூறு என்ற அடிப்படையில் கர்நாடகா 2-வது இடத்தில் உள்ளது. இதிலும், பீகார், தெலங்கானா, குஜராத் மாநிலங்களின் செயல்பாடுகள் மோசமாக உள்ளன.

ICMR புள்ளிவிவரப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், உயிரைப் பணயம் வைத்து, சிறுநீர்கூட கழிக்க இயலாமல் தியாக உள்ளத்தோடு பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வேல்ஸ் மீடியா தலைவணங்குகிறது. தமிழக சுகாதாரத்துறையின் சிறப்பான செயல்பாட்டால், தற்போது மாநிலத்தில் தொற்று பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. தொய்வில்லாமல் இதேவேகத்தில் செயல்பட்டு, கோவிட்-19 தொற்று இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

Source: ICMR data, Thanks : NDTV

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

CATEGORIES
error: Content is protected !!