சீனாவில் தொடர்ந்து அடக்குமுறைக்கு உள்ளாகும் முஸ்லிம்கள்! மசூதிகளை சேதப்படுத்தி வரும் ஜின் பிங் அரசு!

0
39
Chinese authorities are reportedly attempting to raze the dome and four minarets

சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் உய்குர் மொழி பேசும் முஸ்லிம்கள் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர். சீனாவின் மற்ற மாகாணங்களில் குழந்தைப் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த மாகாணத்தில் மட்டும் கட்டுக்குள் வரவில்லை.

இதனால் சில ஆண்டுகளாக முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மைப் பிரிவினர் இடையே, குழந்தைப் பேற்றைத் தடுப்பதற்காக சீன அதிகாரிகள் அத்துமீறி சில நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று அசோசியேட் பிரஸ் (ஏ.பி.) செய்தி வெளியிட்டது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Also Read : ஆவினுக்கு அச்சுறுத்தலாக நிற்பது அமுலா? பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களா? நடைமுறைச் சிக்கலா?

இந்த நிலையில், உய்குர் மக்களை போல் மற்றொரு முஸ்லிம் இனக் குழுவான ஹுய் மக்களும் மதத்தின் அடிப்படையில் துன்புறுத்துலுக்கு உள்ளாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் இரண்டாவது பெரிய இனக் குழுவான ஹுய் மக்கள், யுன்னான் மாகாணத்தில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி யுன்னான் மாகாணத்தின் நஜியாயிங் கிராமத்தில் உள்ள மசூதியில், ஹுய் மக்கள் தொழுகை நடத்தச் சென்றுள்ளனர். அப்போது மசூதியை சேதப்படுத்துவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் குழுமியிருந்தனர். தொழுகை நடத்த மக்களை அனுமதிக்காததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் உருவானது.


(ஆங்கில மொழியாக்கம் – Yunnan Tonghai Najiaying, the armed police surrounded the mosque 🕌 prohibiting people from entering.)

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹுய் இன மக்கள், ‘சமீப ஆண்டுகளாகவே நாடு முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹுய் மசூதிகளில்,  குவிமாடங்களை அழிப்பது, மினாராக்களை இடிப்பது என வெளிப்படையான இஸ்லாமிய கட்டிடக்கலைகளை சீன அதிகாரிகள் அழிக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக சீன அதிகாரிகள் நஜியாயிங் மசூதிக்கு வந்துள்ளனர். சீனாவின் எல்லைகளில் உள்ள இனரீதியாக வேறுபட்ட மாகாணமான யுன்னானில், இஸ்லாமிய கலாச்சாரத்திற்கான ஒரு முக்கியமான மையம் இந்த மசூதியாகும். இதையும் சேதப்படுத்த அதிகாரிகள் முயற்சிக்கிறார்கள். மசூதியின் பெரிய மையப் பச்சைக் குவிமாடமும், நான்கு மினாரட்டுகளும் அவர்களது இலக்காக உள்ளது.

சனிக்கிழமையன்று போலீஸ் பாதுகாப்புடன் மசூதிக்கு வந்த அதிகாரிகள் கிரேன்களை மசூதி வளாகத்திற்குள் அனுப்பி வலுக்கட்டாயமாக இடிக்கத் தொடங்கினர். இது எங்களின் கடைசி கௌரவம். எங்கள் வீட்டை இடிக்க எங்கள் வீட்டிற்கு வருவது போன்றதுதான் இது. அதை நாங்கள் அனுமதிக்க முடியாது’ என அவர்கள் கூறுகின்றனர்.

Also Read : அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு மூடுவிழா? பெற்றோர், கல்வியாளர்கள் கடும் அதிருப்தி!

போலீஸாருக்கும் ஹுய் மக்களுக்கு இடையே மோதல் வெடித்த நிலையில், சனிக்கிழமையன்று பல மணி நேரம் நீடித்த முற்றுகை போராட்டம் காரணமாக அதிகாரிகள் பின்வாங்கியுள்ளனர். இதனால் ஹுய் இன மக்களுக்கு தற்காலிக வெற்றி கிடைத்துள்ளது. போலீஸார் பலரை கைது செய்திருக்கும் நிலையில், சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிறு முழுவதும், பொதுமக்கள் மாறி மாறி மசூதியைப் பாதுகாத்துள்ளனர்.

சீனாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக மத அடிப்படையிலான அடக்குமுறைகளை சீனா ஏவி வருகிறது என்று அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விமர்சித்து வரும் நிலையில், சீனா இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry