சற்றுமுன்

சுங்கக் கட்டணம், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!

சுங்கக் கட்டணம், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!

அப்பாவி மக்களுக்கு அபராதம் போடும் விதமாகச் சுங்கக் கட்டணக் கொள்ளையைச் செய்யாதீர்கள் எனவும், பெட்ரோல்டீசல் விலையைக் குறைக்க வேண்டும் எனவும், திமுக தலைவர் மு..ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
ஏற்கெனவே மக்களின் வருமானம் முழுமையாகப் பாதிக்கப்பட்டு அவர்களுடைய வாழ்க்கை கரோனா காரணமாகக் குலைந்து சுருண்டு விழுந்து கொண்டு இருக்கும் போது, அதில் மேலும் இடியை இறக்கியதைப் போல, சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.

இன்றைய பேரிடர் காலம் என்பது, மக்களின் நல்வாழ்வுக்குப் பெரும் சவாலான காலம் மட்டுமல்ல; சமூக, பொருளாதார வாழ்க்கை, எதிர்காலம் அனைத்துக்கும் சவாலான காலம் ஆகும். இதில் ஆழமான புதைகுழிக்குள் தள்ளப்பட்ட அப்பாவி மக்களை மீட்டுக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அனைத்து வகைகளிலும் மத்திய அரசு எடுத்திருக்க வேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை; செய்ய நினைக்கவுமில்லை.

அதேநேரத்தில் கரோனாவோடு சேர்ந்து, தானும் தன் பங்குக்கு, மக்களை பொருளாதார ரீதியாக வேட்டையாடிக் காயப்படுத்த மத்திய அரசு திட்டமிடுவதன் அடையாளம்தான், வங்கிகள் நடத்தி வரும் வட்டி வசூலும், பெட்ரோல் டீசல் விலை உயர்வும். இதன் அடுத்தகட்டமாகச் சுங்கச்சாவடிக் கட்டணங்களை இன்று முதல் உயர்த்தி உள்ளார்கள்.

வாகனங்களின் தரத்துக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தக் கட்டண உயர்வு, வழக்கமான நடைமுறைதான் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். வழக்கத்திற்கு முற்றிலும் மாறான பேரிடரில், எதை வழக்கமான நடைமுறை என்று அதிகாரிகள் சொல்கிறார்கள் என்றே தெரியவில்லை.

பெட்ரோல், டீசல் விலையைக் குறையுங்கள் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். பொதுமுடக்கத்தைத் தளர்த்துவதன் மூலமாக, கரோனா ஒழிந்துவிட்டது என்றோ, நாளை காலை முதல் நாட்டின் பொருளாதாரம் எழுந்து நின்றுவிடப்போகிறது என்றோ, மாநில அரசு தவறான சிந்தனையில் மூழ்க வேண்டாம்.

மாநில அரசும், மக்களுக்குப் பொருளாதார உதவிகள், சலுகைகள் வழங்குவதன் மூலமாக, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் துன்ப துயரங்களில் தோள் கொடுத்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றும் அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

CATEGORIES
error: Content is protected !!