போர் யானைகளுடன் வாகை மலர்! கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார் விஜய்!

0
115
Tamil actor Vijay unveiled the representative flag for his political party Tamizhaga Vetri Kazhagam today.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னை ஈசிஆர் சாலையில் பனையூரில் உள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்தார். மேலும், கீழும் சிவப்பு, நடுவில் மஞ்சள் ஆகிய நிறங்களுடன், இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

த.வெ.க. கொடி

இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரளாக பங்கேற்றனர். விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் இருவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் த.வெ.க. கொடி பாடலும் வெளியிடப்பட்டது. இந்த பாடல் தமிழன் கொடி பறக்குது என்று தொடங்குகிறது. தமது கட்சியின் கொடி, ஒரு கட்சிக்கான கொடி மட்டுமல்ல; வருங்கால தலைமுறையின் வெற்றிக்கான கொடி இது’ என விஜய் கூறியுள்ளார். கொடிப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியதாகவும், தமன் இசையமைத்ததாகவும் தெரிகிறது.

கல்வெட்டை திறந்துவைத்து, கட்சியின் கொடியை ஏற்றி விழாவில் பேசிய விஜய், “எல்லோருக்கும் வணக்கம். இன்னிக்கு நாம எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷமான நாள். நான் என்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கி அதுக்கு தொடக்கப்புள்ளியா பிப்ரவரி மாசம் கட்சியின் பெயரை அறிவித்தேன். அப்போதிலிருந்து நீங்கள் எல்லோரும் குறிப்பிட்ட நாளுக்காக காத்திருக்கிறீர்கள் எனத் தெரிகிறது. நம் முதல் மாநில மாநாடு அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் சிறப்பாக நடந்து வருகிறது.

விரைவில் அதற்கான நாள், நேரம், இடத்தை அறிவிப்பேன். அதற்கு முன்பாக நம் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டின் மக்கள் அனைவர் முன்பும் கொடியை அறிமுகப்படுத்தியதை பெருமையாக நினைக்கிறேன். இதுவரை நமக்காக உழைத்தோம். இனி தமிழ்நாட்டுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்களின் உயர்வுக்காகவும் நாம் எல்லோரும் சேர்ந்து உழைப்போம். புயலுக்குப் பின் அமைதி, ஆர்ப்பரிப்பு, ஆராவாரம் என இந்தக் கொடிக்குப் பின்னால் ஒரு வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது. அது என்ன என்பதை மாநாட்டில் கூறுகிறேன்.

த.வெ.க. கொடியை அறிமுகம் செய்து நடிகர் விஜய் பேச்சு.

அந்த மாநாட்டில் நம் கட்சியின் கொள்கை, செயல் திட்டங்கள் என்ன என்பதை சொல்வோம். அப்போது இந்த கொடிக்கான விளக்கத்தையும் கூறுவோம். அதுவரை கெத்தா இந்த கொடியை ஏற்றிக் கொண்டாடுவோம். இதை ஒரு கட்சிக்கான கொடியாக மட்டும் பார்க்கவில்லை. தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறையின் வெற்றிக்கான கொடியாகவே பார்க்கிறேன். இந்தக் கொடியை உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் நான் சொல்லாமலே ஏற்றுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே, கொடி ஏற்றுவதற்கான சட்ட விதிமுறைகளை எல்லாம் சரியாகப் பின்பற்றி, அனைவரிடமும் தோழமை பாராட்டி இதை ஏற்றிக் கொண்டாடுவோம். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம். நன்றி.” என்றார்.

நிகழ்ச்சியில் தவெக தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம். மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு. சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்” இவ்வாறு அவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Also Read :பேப்பர் கப்பில் டீ, காபி அருந்துவதில் உள்ள ஆபத்துகள்! குடல் புற்றுநோய் வரை வரக்கூடும் என எச்சரிக்கை!

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதற்காக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான என்.ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். இதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில், 2026 சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு என்று விஜய் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து நிலையிலான நிர்வாகிகளும் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக கடந்த 19-ம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மஞ்சள் நிறத்துடன் நடுவில் விஜய் படம் இருப்பது போன்ற கட்சிக் கொடியை ஏற்றி விஜய் ஒத்திகை பார்த்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry