உலக காட்டுயிர் நிதியம் கடந்த மாதம் 10ந் தேதி ‘தி லிவிங் பிளானட் 2024’ (The Living Planet 2024) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் சென்னையில் ஏற்பட்டுள்ள சூழலியல் பாதிப்புகள் குறித்த முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளது.
Source : 2024 Living Planet Report
உலக காட்டுயிர் நிதியத்தின் அறிக்கையின் சாராம்சம் என்னவென்றால், 1970 ஆம் ஆண்டிலிருந்து வனவிலங்குகளின் எண்ணிக்கை சராசரியாக 73% குறைந்துள்ளதாக விவரிக்கிறது. மனித குலத்திற்கு மிகப் பெரிய ஆபத்துகளை உண்டாக்கக்கூடிய அபாயகரமான திருப்புமுனைகளை நோக்கி பூமி நகரும் நிலையில், காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை நெருக்கடிகக்கு எதிராக அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெரிய அளவிலான ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படும் என எச்சரிக்கிறது.
மேலும், அமேசான் காடுகள் இழப்பால் உலக வானிலை எப்படி பாதிக்கப்படுகிறது?, கடல் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, ஐரோப்பா, வட அமெரிக்காவில் வானிலையின் போக்கு எப்படி மாறுகிறது? என்பது குறித்தும், உலகளவில் நேரிட்டுள்ள பல சூழலியல் பாதிப்புகள் பற்றியும் இந்த அறிக்கை விரிவாகப் பேசுகிறது.
வேகமான நகரமயமாதல் காரணமாக சென்னை பெருநகரம், அதன் சதுப்புநிலப் பரப்பில் 85% பகுதியை இழந்துள்ளதாக ‘தி லிவிங் பிளானட்’ அறிக்கை தெரிவித்துள்ளது. சென்னையில் சதுப்புநிலங்கள் குறைந்துள்ளதன் காரணமாக, நிலத்தடி நீர்வளத்தைப் புதுப்பித்தல், வெள்ளத் தடுப்பு ஆகிய முக்கியமான இயற்கை செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
“நீரை மாசுபடுத்தும் அம்சங்கள், வண்டல் ஆகியவற்றைத் தடுக்கும் இயற்கை வடிகட்டியான சதுப்பு நிலங்கள் அழிந்ததன் காரணமாக, காலநிலை மாற்றத்தால் வறட்சி, வெள்ளம் ஆகிய இயற்கைப் பேரிடர்களால் சென்னை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 2019ஆம் ஆண்டு கோடையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய நீர்நிலைகள் வறண்டன, நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. 2019ஆம் ஆண்டு கோடையில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டது. சதுப்பு நில அழிவின் காரணமாக, 2015, 2023 ஆகிய ஆண்டுகளில் அப்பகுதி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். சதுப்பு நிலம், இயற்கை வடிகால் அமைப்புகளை அழிப்பதன் மூலம் நகரத்திற்கு ஏற்பட்ட சேதம் மோசமடைந்தது.
2015ஆம் ஆண்டில் மழை அளவு அதிகமாக இருந்தது என்றாலும், இது முன்பு நிகழாதது அல்ல. ஆனால், வறட்சி, வெள்ளம் ஆகிய இயற்கைப் பேரிடர்களில் இருந்து காக்கும் சதுப்பு நிலங்களின் அழிவால் நிலைமை மோசமானது. நிலத்தடி நீரை மீள்நிரப்பு செய்யவும், தண்ணீரைத் தக்க வைக்கவும் சதுப்பு நிலங்கள் இல்லாத காரணத்தால், சென்னையின் ஒரு கோடியே 12 லட்சம் மக்கள், தண்ணீர்ப் பற்றாக்குறையால் குடிக்க, குளிக்க, சமைக்க என தங்கள் நீர்த்தேவைக்கு லாரி தண்ணீரையே நம்ப வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்” என அந்த அறிக்கை கூறியுள்ளது.
அழிந்துவரும் பல உயிரினங்களின் வாழ்விடமாக பள்ளிக்கரணை சதுப்புநிலம் விளங்குகிறது. சென்னையில் பள்ளிக்கரணை, பழவேற்காடு, எண்ணூர் ஆகியவை முக்கியமான சதுப்புநிலப் பகுதிகளாக விளங்குகின்றன. சென்னை பெருநகரை விரிவுபடுத்தும் நோக்கத்தில், சதுப்பு நிலங்களை குடியிருப்புப் பகுதிகளாக மாற்றுவதாலேயே, அழிவு மற்றும் பாதிப்பின் அளவு வருடத்துக்கு வருடம் அதிகமாகிறது. எஞ்சியிருக்கும் சதுப்புநிலங்களை உடனடியாகக் காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் எச்சரிக்கை மணியாகவே தமிழ்நாடு அரசு இந்த ஆய்வறிக்கையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதுபற்றி கருத்துத் தெரிவித்துள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ. சுந்தர்ராஜன், “எந்த வகையிலும் சதுப்பு நிலங்களை வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதியாக முடிவெடுக்க வேண்டும். வெள்ளத்தைத் தடுக்க மட்டுமல்ல, வறட்சியைக் கட்டுப்படுத்தவும் சதுப்பு நிலங்கள் முக்கியம்.
சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசால் ‘தமிழ்நாடு வெட்லாண்ட் மிஷன்’ (Tamilnadu Wetland Mission) என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. இந்தத் திட்டம் பள்ளிக்கரணை, பழவேற்காடு போன்ற பெரிய சதுப்பு நிலங்கள் மீதுதான் கவனம் செலுத்துகிறது. இதுதவிர, மற்ற நீர்நிலைகள் மீதும் கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும், இந்தத் திட்டத்திற்கான விதிமுறைகளை அரசு இன்னும் அறிவிக்கவில்லை” என்கிறார் அவர்.
சதுப்பு நிலம் பற்றி கூறும் தமிழ்நாடு வெட்லாண்ட் மிஷன்’ இணையதளம், “சென்னையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், இயற்கையாக அமைந்த, கடைசியாக எஞ்சியிருக்கும் சதுப்புநிலப் பகுதிகளில் ஒன்று. அதன் கிழக்கு சுற்று எல்லை, பக்கிங்ஹாம் கால்வாய், பழைய மகாபலிபுரம் சாலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. அப்பகுதி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமாக உள்ளது. தெற்கு, மேற்கு எல்லைகள் குடியிருப்புகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களால் நிறைந்துள்ளன. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் உண்மையான மொத்த பரப்பளவில், தற்போது 10% மட்டுமே எஞ்சியிருக்கிறது” என அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
சதுப்பு நிலங்களின் அழிவுக்கு அதில் கொட்டப்படும் கட்டடக் கழிவுகளும், மக்களால் உருவாக்கப்படும் கழிவுகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சதுப்பு நிலங்களின் பௌதீக எல்லை என்பது வேறு, அதன் சூழலியல் எல்லை என்பது வேறு. சூழலியல் எல்லை என்பது, சதுப்பு நிலத்தின் எல்லையையும் தாண்டியது. நீர்பிடிப்புப் பகுதி வரை சதுப்பு நிலத்தின் எல்லை உள்ளது. இதை மனதில் வைத்து அதன் எல்லையை வரையறுக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry