செஸ் உலகின் கில்லி பிரக்ஞானந்தா! உலக சாம்பியனை மீண்டும் வீழ்த்தி அசத்தல்!

0
296

ஆன்லைன் ரேபிட் செஸ் தொடரில், உலக சாம்பியன் கார்ல்சன்னை தமிழக வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தினார்.

செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் வழியாக நடந்து வருகிறது. 16 வீரர்கள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஐந்தாவது சுற்றில் சென்னையை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகச் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.

கருப்பு நிற காய்களுடன் பிரக்ஞானந்தா விளையாடினார். இந்த போட்டி சமனில் முடிய இருந்த நிலையில், 40வது நகர்த்தலுக்குப் பிறகு கார்ல்சன் செய்த ஒரு தவறினை புரிந்துகொண்ட பிரக்ஞானந்தா, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காய்களை சரியாக நகர்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம் பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறார். உலகின் இளைய கிராண்ட் மாஸ்டரான அபிமன்யு மிஸ்ராவும் 16 பேர் கொண்ட போட்டியில் பங்கேற்கிறார்.

போட்டியின் 2வது நாள் முடிவில் பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளார். கார்ல்சன் 15 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார். சீனாவின் வேய் யி 18 புள்ளிகளுடன் முதலிடத்திலும், டேவிட் ஆண்டன் 15 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.

இதற்கு முன்னர், கடந்த பிப்ரவரி மாதம் ஆன்லைன் வாயிலாக நடந்த ஏர் திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியின் 8-வது சுற்றில், கார்ல்சனை, 3-0 என்ற கணக்கில் 16 வயது நிரம்பிய பிரக்ஞானந்தா தோற்கடித்திருந்தார். இந்த ஆண்டில் 2வது முறையாக கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry