ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 371 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நரா நகரில் இன்று காலை 11.30 மணி அளவில் யமாட்டோ சைடாய்ஜி ரயில் நிலையத்தின் எதிரே நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஷின்ஸோ அபே உரையாற்றினார். அப்போது அவரை நோக்கி ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டார். அவர் சுட்ட முதல் குண்டு குறி தவறியதாகவும், இரண்டாவது குண்டு ஷின்ஸோ அபே மீது பாய்ந்ததாகவும் தெரிகிறது.
குண்டு பாய்ந்ததில், ஷின்ஸோ அபேயின் நெஞ்சுப் பகுதியின் இடதுபாகத்திலும், கழுத்துப் பகுதியிலும் காயம் ஏற்பட்டதை அடுத்து நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அவர் சரிந்து விழுந்தார். சுயநினைவிழந்த அவர் நரா மாவட்டத்தில் உள்ள கஷிஹரா நகரில், நரா மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டுசெல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏற்கனவே சுயநினைவு இழந்த அவருக்கு முக்கிய உறுப்புகள் செயலிழந்ததாகவும், மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. ஷின்ஸோ அபே உயிரிழந்ததாக ஜப்பான் அரசு அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளது.
ஷின்ஸோ அபேயைத் துப்பாக்கியால் சுட்ட நபர் பாதுகாவலர்களால் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் டெட்ஸுயா யமாகாமி எனத் தெரியவந்திருக்கிறது. நரா நகரைச் சேர்ந்த அவர், ஜப்பானிய கடற்படையின் தற்காப்புப் படையில் பணியாற்றி 2005-ல் விலகியவர் என ஃபியுஜி செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஜப்பானில் துப்பாக்கி வைத்துக்கொள்ள கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. துப்பாக்கி வாங்குவது என்பது மிகவும் கடினமான காரியம். என சொந்தமாகத் தயாரித்த துப்பாக்கியை பயன்படுத்தி யமாகாமி இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. யமாகாமி முதல் குண்டைச் சுட்டபோது அது ’பஸூகா’ பொம்மை துப்பாக்கியின் சத்தம் போல இருந்ததாகவும், பின்னர் சற்றே பின்வாங்கி இரண்டாவது முறை அந்த நபர் சுட்டதாகவும், சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர் ஒருவர் ஜப்பான் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார். துப்பாக்கியால் சுட்ட நபரின் நோக்கம் என்ன என உறுதியாகத் தெரியவில்லை எனப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்திருக்கிறார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பானின் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஷின்ஸோ அபே. ஜப்பானில் நீண்டகாலம் பிரதமராகப் பதவி வகித்தவர் எனும் பெருமையும் அவருக்கு உண்டு. இந்தியாவுடனான நல்லுறவை வளர்த்ததில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. குவாட் அமைப்பின் மூலம் இந்தியாவுடன் நெருக்கமான உறவை அவர் பேணிவந்தார். புல்லட் ரயில் திட்டத்தை இந்தியாவில் தொடங்க அவர் முயற்சி எடுத்தார். உடல்நிலை மோசமானதால் ஆகஸ்ட் 2020-ல் பதவிவிலகினார். அவரது கட்சியைச் சேர்ந்த ஃபுமியோ கிஷிடா பிரதமராகப் பொறுப்பெற்றார்.

லிபரல் டெமக்ரடிக் கட்சியின் (Liberal Democratic Party) முன்னாள் தலைவரான ஷின்ஸோ அபே, அந்நாட்டின் மேலவைக்கு நடக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோதுதான் இந்தத் துயரச் சம்பவம் நடந்தேறியிருக்கிறது. இந்தத் தாக்குதல், காட்டுமிராண்டித்தனமான மற்றும் தீயநோக்கம் கொண்டது எனப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கண்டனம் தெரிவித்திருக்கிறார். மிகக் கடுமையான வார்த்தைகளில் இந்தத் தாக்குதலைக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.


ஷின்ஸோ அபே மீதான தாக்குதல் அதிர்ச்சியளிப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். எனது அன்பு நண்பர் அபே ஷின்சோ மீதான தாக்குதலால் ஆழ்ந்த மனவேதனை அடைந்துள்ளதாகவும், எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவருடனும், அவரது குடும்பத்தினருடனும், ஜப்பான் மக்களுடனும் உள்ளன” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். நாளை ஒருநாளை தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
I am shocked and saddened beyond words at the tragic demise of one of my dearest friends, Shinzo Abe. He was a towering global statesman, an outstanding leader, and a remarkable administrator. He dedicated his life to make Japan and the world a better place.
— Narendra Modi (@narendramodi) July 8, 2022
சமீபத்தில், மே மாதம் டோக்கியோவில் நடந்த குவாட் உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி அபேயை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அபே மீதான மோடியின் நல்லெண்ணத்தையும் தனிப்பட்ட மரியாதையையும் காண முடிந்தது. பிரதமராக அபே பலமுறை இந்தியா வந்துள்ளார். 2007 இல் தனது சுற்றுப்பயணத்தின் போது, அபே இந்திய நாடாளுமன்றத்தில் முகலாய இளவரசர் தாரா ஷிகோவை மேற்கோள் காட்டி இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலுக்கு இடையேயான தொடர்பை எடுத்துரைத்து பேசினார்.

2014 இல், 65 ஆவது குடியரசு நாள் அணிவகுப்பில் அபே தலைமை விருந்தினராக கலந்து கொண்டார், இந்திய குடியரசு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த ஜப்பானின் முதல் பிரதமர் அபே. அவரது பயணத்தின் போது, சுற்றுலாவை மேம்படுத்துதல், தொலைத்தொடர்பு கோபுரங்களில் எரிசக்தி திறனை மேம்படுத்துதல் மற்றும் இந்தியாவில் மின் உற்பத்தி உள்ளிட்ட 8 ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. அபே 2015 இல் வாரணாசியில் பிரதமர் மோடியுடன் ‘கங்கா ஆரத்தி’ நடத்தினார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry