அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியைப் பறிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை வானகரத்தில் நேற்று முன் தினம் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அதிமுக பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக திண்டுக்கல் சீனிவாசன் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபின் முதன்முறையாக இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
எடப்பாடி பழனிசாமி வசிக்கும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இக்கூட்டம் நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில், ஜூலை 18-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அத்துடன் தற்போது அதிமுகவின் சட்டப்பேரவை எதிர்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளார். அவர் கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து பொதுக்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால்,எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியையும் அவரிடமிருந்து பறிப்பதற்கான வியூங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry