சிதம்பரம் நடராஜர் கோவிலின் கணக்குகளை ஆய்வு செய்ய இந்து அறநிலையத்துறை முடிவு எடுத்தபோது, கோவில் பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு குறித்து பொதுமக்களிடம் கேட்ட கருத்துகளின் அடிப்படையில் விளக்கம் அளிக்கக்கோரி தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
Also Read : நிலக்கரி எடுப்பதால் ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிப்பு! அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட மத்திய அரசு!
இந்நிலையில், விளக்கம் தருமாறு கேட்கப்பட்ட 27 கேள்விகளுக்கும் பொது தீட்சிதர்கள் விரிவான பதில் அனுப்பியுள்ளனர். அதில், சிதம்பரம் கோவில் நிதி முறையாக பயன்படுத்தப்படுவதாகவும், கோவில் நிதியை பயன்படுத்தி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். அறநிலையத்துறை அனுப்பிய சில கேள்விகளும், அதற்கு தீட்சிதர்கள் தெரிவித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி : வரம்புகளை மீறி நிதியை பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தீட்சிதர்களின் பதில் : இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை போல சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரம்புமீறி நிதி பெறுவதில்லை.
கேள்வி : பிரசாதம் தரமற்றதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தீட்சிதர்களின் பதில் : இந்துசமய அறநிலையத்துறை கோவில்களில் பிரசாதம் என்ற பெயரில் சிற்றுண்டிகளை விற்பனை செய்து கோவில்களை வணிக மையமாக்குவதை விட்டுவிடுவது நல்லது.
கேள்வி : நாட்டியாஞ்சலிக்கு ரூ.20000 முதல் வசூலிக்கப்படுவதால் ஏழைக்குழந்தைகள் பங்குபெற முடியவில்லை என குற்றச்சாட்டு.
தீட்சிதர்களின் பதில் : கடந்த சில ஆண்டுகளாக நாட்டியாஞ்சலிக்கு அனுமதியே வழங்கவில்லை.
கேள்வி : பெண்களை மரியாதை குறைவாக நடத்துகிறார்கள் என குற்றச்சாட்டு.
தீட்சிதர்களின் பதில் : அப்பட்டமான தெளிவற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டு.
கேள்வி : குழந்தை திருமணம் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தீட்சிதர்களின் பதில் : குழந்தை திருமணம் சட்டத்திற்கு எதிரானது, எனவே அது போன்ற சம்பவங்கள் கோவிலில் நடைபெறுவதில்லை.
கேள்வி : ஆண்டாள் சிலையை எடுத்து மறைத்து வைத்திருக்கிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
தீட்சிதர்களின் பதில்: இது முற்றிலும் புரம்பான தகவல். இது விளக்கமளிக்க கூட தேவையில்லாத குற்றச்சாட்டு.
மேலும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ஆதரவாக வரப்பெற்ற ஆயிரக்கணக்கான கடிதங்களை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட வேண்டும் என தீட்சிதர்கள் வலியுறுத்தியுள்ளனர். வருகிற 22 ஆம் தேதி நகை சரிபார்ப்புக்கு ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்கு சிதம்பரம் நடராஜர் கோவில் சார்பாக முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் பொது தீட்சிதர்கள் சார்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு பதில் அனுப்பியுள்ளனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry