காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகா அரசு திறந்துவிடாததால், தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை விசாரிக்க தனி அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள நிலையில், இதுபற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுமாறு கர்நாடகா முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி வலியுறுத்தியிருந்தார்.
அதன்படி, காவிரி நீர்ப்பங்கீசு விவகாரத்தில் அடுத்தகட்ட முடிவு எடுப்பது தொடர்பாக, முதல்வர் சித்தராமையா தலைமையில், பெங்களூரு விதான் சவுதாவில் இன்று(ஆகஸ்ட் 23) அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. காலை 11:00 மணிக்கு ஆரம்பித்த கூட்டம், மதியம் 1:30 மணிக்குத் தான் முடிந்தது. அனைத்துக் கட்சி தலைவர்களுமே, நீர், நிலம், மொழி விஷயத்தில், சமரசம் செய்து கொள்ளாமல், ஒற்றுமையாக செயல்படுவோம் என்று தீர்மானித்தனர். கர்நாடகாவில் குறைவான மழை பெய்துள்ளதால், மேலும் தண்ணீர் வழங்க முடியாது என்றும், இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் உறுதியான வாதங்களை முன் வைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் பேசிய கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ‘காவிரி விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கு இடமில்லை. கர்நாடகத்தின் உரிமைகளை காக்க சட்டப் போராட்டம் நடத்துவோம். கர்நாடக விவசாயிகளைக் காப்பாற்றுவோம்’ என்று கூறினார். காவிரி, மேகேதாட்டு மற்றும் மகாதாயி நதிநீர் பங்கிட்டு பிரச்சினை தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.” என்று கூறினார்.
கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி பேசும்போது, “தமிழக அரசு வழக்கு தொடர்ந்ததும் கர்நாடக அரசு தண்ணீர் திறந்தது தவறு. தகராறு மனு பதிவு செய்திருக்க வேண்டும். கர்நாடகா தரப்பில் காவிரி மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றத்திலும் தற்போது நிலையை விளக்கமாகக் கூற வேண்டும் என்றார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, “காவிரி, மேகதாது, மகதாயி குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. விவசாய சங்க பிரநிதிநிதிகள் பங்கேற்றனர். உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் வாதாடும் சட்ட வலலுனர் குழுவும் பங்கேற்றனர். கர்நாடகாவில் மழை குறைவாலும், தண்ணீர் கஷ்டம் ஏற்பட்டு உள்ளதாலும், தமிழகம் கஷ்டத்தின் சூத்திரத்தை பின்பற்ற வேண்டும். அனைவரும் நிலம், நீர், மொழி விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று, அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம்.
மாநில நலன் கருதி அரசு எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்போம் என்று எதிர்க்கட்சியினர் உறுதி அளித்து உள்ளனர். நடப்பாண்டில் ஆகஸ்ட் இறுதி வரை தமிழகத்துக்கு 86.38 டி.எம்.சி., தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஜூன் மாதம் மழை பற்றாற்குறை ஏற்பட்டது.
மேட்டூரில் தண்ணீர் இருந்தும் இல்லை என்று கூறுகின்றனர். இதற்காகத் தான் மேகதாது அணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இதுபோன்ற கஷ்ட காலத்தில் தண்ணீர் கொடுக்க முடியும். எந்த பிரச்னை செய்யவில்லை என்றாலும் தமிழகம் எதிர்க்கிறது. உச்சநீதிமன்ற்ததில் வழக்கு விசாரணையின் போது கர்நாடகாவின் நிலைமையை உறுதியாக விவாதிக்கும்படி வழக்கறிஞர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் துணை முதல்வரும், நீர்ப்பாசன துறை அமைச்சருமான சிவகுமார், பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்த கவுடா, பசவராஜ் பொம்மை, மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் வீரப்ப மொய்லி, ஜெகதீஷ் ஷெட்டர், மாநில அமைச்சர்கள் என்.செலுவராயசாமி, எச்.கே.பாட்டீல், கே.ஜே.ஜார்ஜ், சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் சுமலதா, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜக்கேஷ், தேஜேஷ்வி சூர்யா, மாநில தலைமை செயலர் ரஞ்சிதா சர்மா, கர்நாடக அட்வகேட் ஜெனரல் கிரண் குமார் ஷெட்டி, உட்பட அனைத்து கட்சி எம்.பி.,க்கள், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.
Also Read : உடல் பருமன் அறிகுறிகள்; ஏற்படுத்தும் நோய்கள்! Obesity: What You Need to Know
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, ஜூன்1 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை, 55.253 டி.எம்.சி., தண்ணீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 16.387 டி.எம்.சி., தண்ணீர் தான் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறுவை பயிர்களை காப்பாற்றுவதற்காக, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விடும்படி, கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்காததால், தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தனி அமர்வு மூலம், அடுத்த வாரம் முதல் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry