டெல்லியில், நீர்வள அமைச்சகத்தில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நேற்று(28/08/23) நடந்தது. இதில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநில அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.
அப்போது, தமிழக நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா, ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஆகஸ்டில் வழங்க வேண்டிய நீரில் இன்னும் 54 டிஎம்சி வழங்கப்படவில்லை. இதனால், தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு 24 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும்’’ என்று கோரினார்.
இதற்கு பதிலளித்த கர்நாடக அரசு அதிகாரிகள், “அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் அவ்வளவு நீர் திறக்க முடியாது” என்றனர். கூட்டத்தின் நிறைவில், தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் நீர் திறக்குமாறு கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது. இதற்கு கர்நாடக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வெளியேற்றப்படும் காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
Also Read : காவிரி விவகாரத்தில் தமிழக அரசு பொய் சொல்வதாகப் புகார்! பிரதமரை சந்தித்து முறையிட கர்நாடக அரசு முடிவு!
இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “காவிரி ஒழுங்காற்று ஆணையம் தமிழகத்திற்கு மேலும் 15 நாட்கள் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடும்படி கூறியுள்ளது. கர்நாடக அணைகளில் நீர் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கு திறந்துவிட முடியும். ஏற்கனவே தமிழகத்திற்கு 26 டி.எம்.சி. முதல் 30 டி.எம்.சி. வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
தற்போது கர்நாடக அணைகளில் குடிநீர் மற்றும் விவசாய சாகுபடிக்கு மட்டும் நீர் இருப்பு உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால், கர்நாடகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். இதுகுறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். அதன் பின்னர் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும். அதுவரை கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு இல்லை.” இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு குறித்து பெங்களூருவில் ANI செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அம்மாநில உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாடீல், “காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது. ஆனால், எங்களிடம் தண்ணீர் இல்லை. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை நிறைவேற்ற முடியாத ஒன்று. எனவே, நாங்கள் சட்ட வழியைப் பின்பற்ற உள்ளோம்.
காவிரி விவகாரத்தில் அறிவியல் பூர்வமான மற்றும் நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டத்தை முன்வைத்தால்தான் அது சாத்தியமாகும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்தப் பிரச்சினையில் நடைமுறை அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சூத்திரம் தேவை. இல்லாவிட்டால், அனைவருக்கும் சங்கடம்தான் ஏற்படும். கர்நாடகாவின் குடிநீர் தேவை மற்றும் விவசாயத் தேவைக்கு இருக்கும் தண்ணீரை தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். நாங்கள் எவ்வாறு கொடுக்க முடியும்?” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நீர்ப் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கும் வகையில் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காவிரியில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக அரசு மறுத்துவிட்டது. அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் இப்போதைக்கு தண்ணீர் திறந்து விட முடியாது எனவும், கர்நாடகத்தில் உள்ள அணைகளில் தற்போது 47 சதவீத அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருப்பதாகவும், இதை குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் கர்நாடகா கூறியிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக அளிக்கப்படும். அதன்பின்னர் தமிழக அரசு தொடர்ந்த அவசர மனு மீது நீதிமன்றம் முடிவு எடுக்கும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry