அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப்பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கை உணர்வினை ஏற்படுத்துகின்ற வகையில் 01.07.2023 முதல் நிலுவைத் தொகையுடன் 42% சதவீதத்திலிருந்து 46% சதவீதமாக அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் இதயம் நிறைந்த வரவேற்பினையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். தங்கம் தென்னரசு நிதி அமைச்சராக பொறுப்பேற்றவுடன் சந்தித்தபோது தெரிவித்த உணர்வின் பிரதிபலிப்பாகவே இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் வரவேற்பினையும், பாராட்டுதல்களையும் நிதியமைச்சருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேர்தல் கால வாக்குறுதியினை தமிழ்நாடு முதலமைச்சர் விரைந்து நிறைவேற்றி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மத்தியில் கருணாநிதி மீது கொண்டிருந்த நம்பிக்கை உணர்வினை முதலமைச்சர் ஸ்டாலினும் பெறுவார் என்ற நம்பிக்கை உணர்வு எங்களுக்குத் தெரிகிறது.
இந்த அகவிலைப்படி உயர்வினால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், சத்துணவுப் பணியாளர்கள் உள்பட 18 இலட்சம் குடும்பத்தினர் பயனடைவார்கள் என்பதை எண்ணுகிற போது பெருமையுறுகிறோம். என்றும் வரவேற்க வேண்டியவற்றை வரவேற்றும், பாராட்ட வேண்டியவற்றை பாராட்டுவோம்.” இவ்வாறு அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry