ஆளும் கட்சியைக் குறை கூறாத அண்ணாமலை தமிழ்நாட்டுக்காக என்ன சேவை ஆற்றினார்? அதிமுக கலங்கரை விளக்கம் என ஆர்.பி. உதயகுமார் பதிலடி!

0
50
Former Minister R.B. Udayakumar, Tamil Nadu BJP chief Annamalai | File Image.

ஆளும் கட்சியை குறைகூறாத தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டுக்காக ஆற்றிய சேவைகள் என்ன?” என்று அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் ஆண்டுதோறும் 6.9 லட்சம் ஏக்கரில் காய்கறி சாகுபடி நடந்தாலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு உற்பத்தி இல்லை. அண்டை மாநிலங்களில் கையேந்துகிற நிலையிலேயே நாம் இருக்கிறோம். மூன்று ஆண்டுகளாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் என்று சொல்கிறார்கள். ஆனால் அதை சரியாக கையாளவில்லை என்பது காய்கறி விலை உச்சத்தில் இருப்பதன் மூலம் இப்போது நிரூபணம் ஆகியிருக்கிறது.

வாரம்தோறும் விவசாயிகளைச் சந்தித்து சாகுபடிக்குத் தேவையான உதவிகளை வழங்க அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், காய்கறிகள் உற்பத்தி அதிகரித்து விலையும் கட்டுக்குள் இருந்தது. அதுபோல் திமுக அரசு கையாளவில்லை. அதனால், காய்கறிகளை அள்ளி வாங்கி வந்த நிலை மாறி, எண்ணி வாங்கக்கூடிய வகையில் விலைவாசி ஏறி உள்ளது.

ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று சொல்லும் திமுக அரசு, மக்களிடமிருந்து பத்தாயிரம் ரூபாயைப் பறிக்கிறது. உரிமை மீட்பதில் தூங்கிக் கொண்டிருக்கிற அரசு, விலைவாசியை கட்டுப்படுத்துவதிலும் தூங்கிக் கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீரழிவு உள்பட இந்த விவகாரங்களை எடுத்துக்காட்டி பிரதான எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தினந்தோறும் அறிக்கை விட்டாலும், திமுக எழுந்திருப்பதாகத் தெரியவில்லை

ஜூன் 4-க்கு பிறகு அதிமுக இருக்காது என்று வாய் கூசாமல் ஒருவர் பேசிக் கொண்டே இருக்கின்றார். அதிமுக பற்றி பேசினால் அவருக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்பது தெரியாமல், ஒவ்வொரு நாளும் அதிமுக பற்றி பேசாத நாளே இல்லை. 4-ம் தேதிக்குப் பிறகு அல்ல, இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அதிமுக மக்கள் இயக்கமாக இந்தியாவில், தமிழகத்தில் வெற்றிக்கொடி நாட்டும் என்பதை அண்ணாமலைக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

Also Read : புரட்சித் தலைவியின் முகமூடி அணிந்து தமிழகத்தை ஏமாற்ற திட்டமிடும் அரைவேக்காடு அண்ணாமலை! கோயபல்ஸ் பிரச்சாரத்தால் மக்களை திசை திருப்ப சதி!

அதிமுக-வை பொறுத்தவரை மக்கள் சேவையே கழகத்தின் ஒரே கொள்கையாக வைத்துச் செயலாற்றி வருகிறோம். அண்ணாமலை ஒவ்வொரு நாளும் ரெண்டு கோடி தொண்டர்களும் மன வேதனை அடையும் வகையில், அதிமுக பற்றி பேசுகிறார். அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்று சொல்லியிருக்கிறார். இது அணையப் போகும் விளக்கு அல்ல, அணையா விளக்கு, மக்களுக்கு வழிகாட்டுகிற கலங்கரை விளக்கு என்பது தமிழக மக்களுக்குத் தெரியும்.

அண்ணாமலை வரலாற்றைப் படித்துப் பேசுவதைக் காட்டிலும் குறிப்பெடுத்துப் பேசுகிற தலைவராக இருக்கிறார். தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விளம்பர அரசியல் செய்கிறார். அவரிடத்தில் பணிவோடும் பண்போடும் அடக்கத்தோடும் கேட்கிறேன், தமிழ்நாட்டுக்காக அண்ணாமலை ஆற்றிய சேவைகள் என்ன… மக்கள் தொண்டு என்ன… மொழி உரிமை, இன உரிமை, ஜீவாதார உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தாரா? பத்தாண்டுக்காலம் மத்தியில் ஆட்சியிலிருந்த பாஜக மூலம் தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக எல்லோரையும் வசைபாடுகிற அண்ணாமலை, நீங்கள் பொறுப்பேற்றதற்கு பிறகு தமிழ்நாட்டிற்காக என்ன செய்தீர்கள்?

அதிமுக-வை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, முன்பைவிட மிக வலிமையாக எடப்பாடியாரின் தலைமையில் அதிமுக விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறியக்கூடிய காலம் தொலைவில் இல்லை. 1972-ல் தொடங்கபட்ட இந்த இயக்கம் மிட்டா மிராசுகளுக்கானதல்ல. ஏழை எளிய கூலித் தொழிலாளர்கள், சாமானியர்கள், மாணவர்கள், தாய்மார்கள், விவசாயிகள் என ஏழைகளுக்கான ஒரு கட்சி என்றால், அது அதிமுக-தான். 52 ஆண்டுகளில் எத்தனையோ சவால்களைச் சந்தித்திருக்கிறது, இமாலய வெற்றியும் பெற்றிருக்கிறது பல தோல்விகளையும் சந்தித்திருக்கிறது.

அதிமுக ஒருநாளும் மக்கள் பணியிலிருந்து பின் வாங்கியதில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலும் சரி, தற்போது எடப்பாடி பழனிசாமி காலத்திலும் சரி அதன் கொள்கை, லட்சியமெல்லாம் மக்கள் சேவை ஒன்றுதான். அதிமுக-வை இரண்டு கோடி தொண்டர்கள் ஆணிவேராக இருந்து ஆலமரமாக காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry