கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யவேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் கஞ்சா, போதைப்பொருள் விற்பனைக் குறித்து தமிழக ஆளுநரிடத்தில் மனு அளித்திருந்தோம், தற்போது கள்ளச் சாராய சம்பவத்தால் 58 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளிக்கவுள்ளோம் என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் அருந்தி 58 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அதிமுக சார்பில் இன்று (திங்கட்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு தலைமைவகித்தார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினார். அப்போது, “கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளான நிலையில் தமிழகம் முழுவதும் போதைப் பொருள்கள், கள்ளச் சாராய விற்பனையால் அப்பாவி மக்கள் உயிரிழப்பது அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
கள்ளக்குறிச்சியில் காவல் நிலையம், நீதிமன்றம் அருகிலேயே கள்ளச் சாராய விற்பனை நடைபெற்று உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. அதிகாரிகளை ஆட்சியாளர்கள் ஆட்டிப் படைக்கின்றனர். இந்தப் பகுதியின் முக்கியப் புள்ளி துணையோடு கள்ளச் சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது. ஆட்சியாளர்கள் அடாவடித்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம், நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், தூங்கும் அரசைத் தட்டி எழுப்புவும் தான் மாநிலம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தை முடக்க இந்த அரசு நினைக்கிறது. மக்களின் உணர்வுகளை, கொந்தளிப்பை அரசால் தடை செய்ய முடியாது. இதற்கு பதில் கூறும் காலம் விரைவில் வரும். இதில் தொடர்புடையவர்கள் பெரும்புள்ளிகள் என்பதால், காவல்துறையால், ஒரு நபர் ஆணையத்தால் விசாரணை நடத்தி நீதி கிடைக்காது. எனவே தான் சிபிஐ மூலம் விசாரணை நடத்தக் கோருகிறோம். அப்பது தான் நீதி நிலைாட்டப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நீதி கிடைக்கும்.
இந்த இயக்கம் மக்களுக்கு குரல் எழுப்பும் இயக்கம். மக்களுக்கு எப்போதெல்லாம் துன்பம், துயரம் ஏற்படும் போது, அதை தட்டிக் கேட்கும் இயக்கம் அதிமுக. அதற்காக எத்தனை பிரச்சினைகள் வாந்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயங்காது. கள்ளச் சாராயம் குடித்து 58 பேர் உயிரிழப்புக்கு நீதி கேட்டு பேசியபோது, சட்டப்பேரவை முடக்க நினைப்பதாக கூறுகின்றனர். அடக்குமுறையைக் கண்டும் அஞ்சும் இயக்கம் அதிமுக அல்ல. முதலில் 3 பேர் உயிரிழந்ததாக ஆட்சியர் பொய் கூறியிருக்கிறார். அவர் உண்மமையை வெளிப்படுத்தியிருந்தால் இவ்வுளவு உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது, அரசின் அழுத்தம் காரணமாக மாவட்ட ஆட்சியர் பச்சைப்பொய் பேசியிருக்கிறார். இதனால் கள்ளச் சாராயம் அருந்தியவர்கள் வதந்தி என சிகிச்சைப் பெறாமல் இருந்துள்ளனர்.
கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களின் வீட்டில் கதவில், ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர் மூலமே அதன் உண்மை தன்மையை அறிந்து கொள்ளலாம். ஆட்சியாளர்கள் ஆதரவோடும், அரவணைப்போடும் தான் கள்ளச் சாராயம் விற்பனையில் ஈடுட்டுள்ளார்கள் என்பது நிரூபணமாகியிருக்கிறது. கடந்த ஆண்டு செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் 22 பேர் உயிரிழந்தனர். அப்போது என்ன நடவடிக்கை எடுத்தார்கள், அப்போது முறையான நடவடிக்கை எடுத்திதிருந்தால், இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது.
அப்போது கூட்டம் நடத்தி இரும்புக்கரம் கொண்டு கள்ளச் சாராய வியபாரிகள் அடக்கப்படுவர் என கூறியிருந்தார். இது மக்களின் பிரச்சினை, நீதிகேட்டு நாங்கள் பேச, அனுமதி கேட்டால் தடை விதிக்கின்றனர். சட்டமும் விதியும் மக்களுக்காகத் தான். 2013-ல் சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கும் போது பேரவையில் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும், அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும், அக்கட்சியினரும் எப்படி நடந்துகொண்டார்கள என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக பேரவையில் அனுமதி கேட்டபோது, பேரவை விதிகளை மீறி செயல்படுவதைகக் கூறி அதிமுக எம்எல்ஏ-க்களை வெளியேற்றினார்கள்.
நாங்கள் விதிகளுக்கும், மரபுக்கும் புறம்பாக நடப்பதாக சொல்லுகிறார்கள். 18.02.2017 அன்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் திமுகவினரும் எப்படி ஜனநாயகத்தை காப்பாற்றினார்கள் என்பது நாடறியும். ஜனநாயகத்திற்கு புறம்பாக அன்று திமுகவினர் நடந்துகொண்டது போல நாங்கள் நடக்கவில்லை.… pic.twitter.com/CGS3YxBWTG
— AIADMK IT WING – Say No To Drugs & DMK (@AIADMKITWINGOFL) June 24, 2024
நாங்கள் தற்போது சட்டப்பேரவையில் எப்படி நடந்துகொண்டோம் என்பது உங்களுக்து தெரியும், பேரவை மரபு மாண்புகளையும் மதிக்கக் கூடிய இயக்கம் அதிமுக. மக்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசவும், உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டும், நியாயம் வேண்டும் எனவும் பேச கேட்டபோது, ஏதேதோ காரணங்களைக்கூறி அனுமதி மறுக்கின்றனர். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்குமார், கள்ளக்குறிச்சி நகரத்தில் நடைபெற்று வந்த கள்ளச் சாராய விற்பனைக் குறித்து சட்டப்பேரவையில், 2023 மார்ச் 29-ம் தேதி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர அனுமதி கோரினார். அந்த மனுவில் நானும் கையழுத்திட்டிருந்தேன். அப்போதே அந்த தீர்மானத்திற்கு அனுமதி வழங்கி விவாதிக்கப்பட்டிருந்தால், இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்றிருக்காது.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மருத்துவனைக்கு வந்தபோது, தகவல் அளித்திருந்தால், நடவடிக்கை எடுத்திருப்போம் என்கிறார். ஆனால் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோரிடம் நேரிலும் தெரிவித்திருந்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகத்தால், அந்த விற்பனையை தடுத்து நிறுத்தவில்லை. கல்வராயன்மலையில் சாராயம் காயச்சுபவரகள் ஆளும் கட்சியினர் என அதிகாரிகளுக்குத் தெரிந்தும், அப்பாவி மக்கள் மீது வழக்குப் பதிவுசெய்கின்றனர். இதற்கு வனத்துறையினர் உடந்தையாக செயல்படுகின்றனர்.
2023 காவல்துறை மானியக் கோரிக்கையின்போது பேசிய முதலமைச்சர், பள்ளிக் கல்லூரி அருகிலுள்ள இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக 2136 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 136 பேர் மட்டுமே. அப்படியானால் எஞ்சியவர்கள் ஆளும்கட்சியினர் எனும் போது அவர்கள் எப்படி கைது செய்வார்கள். கள்ளக்குறிச்சி சம்பவத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களில் கள்ளச் சாராய ஒழிப்பு சோதனை நடத்தி 876 சாராய வியபாரிகள் மீது 861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4657 லிட்டர் கள்ளச் சாராயம் மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல் செயப்பட்டது,. இந்த சம்பவம் நடைபெறாமல் இருந்திருந்தால், இத்தகையை சோதனை நடைபெற்றிருக்காது. மேலும் பலர் எதிர்காலத்தில் உயிரிழந்திருக்கக் கூடும்.
ஒரே இடத்தில் 28 பேரின் உடல்கள் எரியூட்டப்பட்டது தான் திராவிட மாடல் அரசின் சாதனை. இந்த ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் போதைப் பொருட்களை ஒழிக்க முடியவில்லை. போதைப்பொருட்கள் சாக்லேட், திரவம், ஊசி வடிவத்தில் புழங்குகிறது. இதனால் இளைஞர்கள் மாணவர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். கஞ்சா, கள்ளச் சாராய விற்பனைகளால் உயிர்கள் பறிபோகும் சூழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யவேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் கஞ்சா போதை விற்பனைக் குறித்து தமிழக ஆளுநரிடத்தில் மனு அளித்திருந்தோம், தற்போது கள்ளச் சாராய சம்பவத்தால் 58 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளிக்கவுள்ளோம்” என்றார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry