இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், சிறந்த ஆல்ரவுண்டருமான ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டி20 உலகக் கோப்பையுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ரவீந்திர ஜடேஜா, “நன்றி. நிறைந்த இதயத்துடன், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். உறுதியான குதிரை பெருமையுடன் பாய்வது போல, நான் எப்பொழுதும் என் நாட்டுக்காக என்னால் முடிந்ததைக் கொடுத்துள்ளேன். இனி அந்தப் பணி மற்ற வடிவங்களில் அதைத் தொடரும்.
டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது. இது எனது சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சம். நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், தளராத ஆதரவுக்கும் நன்றி. ஜெய் ஹிந்த்” என்று பதிவிட்டுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடப் போவதாக ஜடேஜா அறிவித்துள்ளார். முன்னதாக இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து தற்போது ஜடேஜாவும் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
2009ல் இலங்கைக்கு எதிராக டி20 போட்டிகளில் விளையாடத் தொடங்கிய ஜடேஜை, 74 போட்டிகளுக்குப் பிறகு ஓய்வு பெறுகிறார். 7.13 என்ற எக்கனாமியில் 54 விக்கெட்டுகளையும், 127.16 ஸ்ட்ரைக் ரேட்டில் 515 ரன்களையும் அவர் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில், 3036 ரன்கள் (சராசரியாக 36.14) எடுத்துள்ள ஜடேஜா 294 விக்கெட்டுகளை (24.13) வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில், அவர் 2756 ரன்கள் (32.42) மற்றும் 220 விக்கெட்டுகள் (36.07) எடுத்துள்ளார். மேலும் உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry