ஆவினுக்கான பால் கொள்முதலமை அமுல் நிறுவனம் கபளீகரம் செய்வதாகக் குற்றஞ்சாட்டும், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி, அமுல் நிறுவனத்துக்கு ஆவின் மற்றும் பால்வளத்துறை அதிகாரிகள் துணைபோவதாக புகார் கூறியுள்ளார். அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வது பற்றி கடந்த ஆண்டு மே மாதமே அரசுக்கு தெரியப்படுத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சு.ஆ.பொன்னுசாமி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் அமுல் நிறுவனம் பால்கொள்முதல் செய்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, தட்டக்கல், கூடுதிறைபட்டி ஆகிய மூன்று இடங்களிலும், திருவண்ணாமலை மாவட்டம் படவேடு, கண்ணமங்கலம் ஆகிய இரண்டு இடங்களிலும், வேலூர் மாவட்டத்தில் அமிர்தி என்னுமிடத்திலும் ஆக ஆறு இடங்களில் அமுல் நிறுவனம் கொள்முதல் நிலையங்கள் அமைத்துள்ளது. மூன்று மாவட்டங்களில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினசரி சுமார் 50ஆயிரம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்து, அங்கிருந்து ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பால் பண்ணைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அந்த மூன்று மாவட்டங்களில் உள்ள ஆவின் மற்றும் பால்வளத்துறை அதிகாரிகள், அமுல் நிறுவன அதிகாரிகளோடு மறைமுகக் கூட்டு வைத்து அமுல் நிறுவனத்தின் பால் கொள்முதலுக்கு துணை போவதாகவும், அதனாலேயே மேற்கண்ட மாவட்டங்களில் ஓராண்டுக்குள் அமுல் நிறுவனத்தால் தினசரி பால் கொள்முதலில் 50ஆயிரம் லிட்டர் என்கிற இலக்கை எட்ட முடிந்ததாகவும் வருகின்ற தகவல்கள் கடும் அதிர்ச்சியளிக்கிறது.
ஆனால் அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் பால் கொள்முதல் செய்யத் தொடங்கிய ஓராண்டுக்குள், மூன்று மாவட்டங்களில் மட்டும் அதுவும் வெறும் ஆறு இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைத்து, அதன் மூலம் சுமார் 50ஆயிரம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்து வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு கூட தமிழ்நாட்டில் “அமுல் நிறுவனத்தால் ஆவினுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது” என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியிருந்தது ஒருவேளை இது அவரது கவனத்திற்கு தெரிந்தே நடந்திருக்குமோ..? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளாவில் அமுல் கால் பதிக்க முனைந்த போது, அம்மாநில அரசுகள் கடுமையாக எதிர்வினையாற்றி தடுத்தன. அதுமட்டுமின்றி கர்நாடக மாநிலத்தின் கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினி 20ஆண்டுகளுக்கு முன் வெறும் 19லட்சம் லிட்டர் மட்டுமே தினசரி பால் கொள்முதல் செய்த நிலையில், தற்போது தினசரி பால் கொள்முதல் சுமார் 1 கோடி லிட்டர் என்கிற மாபெரும் இலக்கை எட்டி சரித்திர சாதனை படைத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டிலோ 40ஆண்டுகால ஆவின், கடந்த மூன்றாண்டுகளில் வெறும் விளம்பரத்தில் மட்டுமே வளர்ச்சியாகவும், உண்மையில் வீழ்ச்சியை நோக்கியும் சென்று கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல” அமுல் நிறுவனம் ஆவினுடைய பால் கொள்முதலை கபளீகரம் செய்ய நினைத்து செயல்பட்டு வருவது வேதனைக்குரிய விஷயமாகும்.
இந்த நிலையில், கடந்த மே மாதம் இறுதி வாரம் தொடங்கி ஜூன் மாதம் இறுதி வாரம் வரைக்குள்ளான இடைபட்ட காலத்தில், ஒரு லிட்டருக்கு 12.00 ரூபாய் வரை தனியார் பால் நிறுவனங்கள் பாலுக்கான கொள்முதல் விலையை குறைத்தது. இதேபோல், தமிழ்நாட்டில் உள்ள பிரபல தனியார் பால் நிறுவனம் (மில்கி மிஸ்ட்) ஒன்றின் தூண்டுதலின் பேரில் அமுல் நிறுவனமும் தமிழகத்தில் தாங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கான கொள்முதல் விலையை எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி நேற்று முன்தினம் (01.07.2024 திங்கட்கிழமை) முதல் லிட்டருக்கு 3.00 ரூபாய் குறைத்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் வயிற்றில் அடிக்கும் செயலை செய்திருப்பது கூடுதல் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
குறிப்பாக அமுல் நிறுவனம் ஆவினை விட அதிக விலை கொடுத்து பால் கொள்முதல் செய்வதாக கூறப்பட்டாலும் கூட உண்மை நிலவரம் அதுவல்ல. ஏனெனில் ஆவின் நிறுவனம் 12.5% மொத்த சத்துள்ள (கொழுப்பு சத்து 4.3% – திடசத்து 8.2%) பாலுக்கு லிட்டருக்கு 38.00 ரூபாய் கொடுத்து கொள்முதல் செய்து வந்த நிலையில், அமுல் நிறுவனமோ 12% மொத்த சத்துள்ள (கொழுப்பு சத்து 3.5% – திடசத்து 8.5%) பாலுக்கு 38.00 ரூபாய் கொடுத்து கொள்முதல் செய்து வந்துள்ளது. இது ஆவினை விட லிட்டருக்கு 1 ரூபாய் 60 காசுகள் மட்டுமே கூடுதலாகும். இந்த நிலையில் தனியார் பால் நிறுவனங்களைப் போல், தற்போது அமுல் நிறுவனமும் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி லிட்டருக்கு 3.00 ரூபாய் குறைத்து ஒரு லிட்டர் பாலுக்கு 35.00 ரூபாய் மட்டுமே கொள்முதல் விலையாக வழங்குகிறது. இது தற்போதைய சூழலில் ஆவினை விட லிட்டருக்கு 3.00 ரூபாய் குறைவாகும்.
ஆவின் நிர்வாகம் மற்றும் பால்வளத்துறை அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் தனியார் பால் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசின் கையில் இல்லாதது உள்ளிட்ட காரணிகளால் தமிழ்நாட்டில் பால் சார்ந்த உபபொருட்களின் உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஒரு தனியார் பால் நிறுவனம் (மில்கி மிஸ்ட்) தொடங்கி வைத்த பால் கொள்முதல் விலை குறைப்பு, தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக பால் கொள்முதல் விலை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
தனியார் பால் நிறுவனங்களோடு மறைமுக உறவில் இருந்து கொண்டு, கூட்டுறவிற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும், பால் உற்பத்தியாளர்களின் வயிற்றில் அடிக்கும் விதமாகவும், நம்ப வைத்து கழுத்தறுக்கும் செயலையும் செய்து, பால் கொள்முதல் விலை குறைப்பு நடவடிக்கையில் தனியாரோடு கைகோர்த்துள்ள அமுல் நிறுவனத்தின் தன்னிச்சையான, சர்வாதிகார போக்கினை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன் பால் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அமுல் நிறுவனத்தின் தன்னிச்சையான செயல்பாடுகளை முளையிலேயே கிள்ளி எறிய, தமிழ்நாட்டில் எந்த ஒரு மாவட்டத்திலும் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்ய தடை விதிக்க தமிழ்நாடு அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டில் ஆவினுக்கான பால் கொள்முதலையும், அமுல் வருகையை தொடர்ந்து அந்நிறுவனத்தின் பால் கொள்முதல் நிலவரத்தையும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள DR, CSR, SI, EO உள்ளிட்ட பால்வளத்துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளையும், அந்தந்த மாவட்ட ஆவின் பொது மேலாளர்களையும் கூண்டோடு பணியிடை நீக்கம் செய்து, அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சரை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry