பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் பிரபல ரௌடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ஆற்காடு சுரேஷுக்கும், தங்களுக்கும் விரோதம் இல்லை எனக்கூறும் ஆம்ஸ்ட்ராங் தரப்பினர், காவல்துறை தோல்வியே இந்தப் படுகொலைக்குக் காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்குக்கு இறுதி அஞ்சலி செலுத்த பிஎஸ்பி தலைவர் மாயாவதி நாளை சென்னை வருகிறார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் (52), சென்னையில் பெரம்பூரில் புதிதாக கட்டி வரும் வீட்டின் அருகே நின்று அவரின் சகோதரர் வீரமணி (65), நண்பர் பாலாஜி (53) உள்பட சிலருடன் நேற்று இரவு 7 மணிக்கு பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல், ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியது. தடுக்க முயன்ற ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் வீரமணி, பாலாஜி, டிரைவர் அப்துல்கனி ஆகியோருக்கும் சரமாரியாக வெட்டு விழுந்தது. இந்தக் கொடூர தாக்குதலில் ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். வீரமணி, பாலாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் பகுஜன் சமாஜ் கட்சியினர் அங்கு குவியத் தொடங்கினர். ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டு போலீஸாருக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். அதனால் சென்னை முழுவதும் பதற்றம் நிலவியது. இதையடுத்து சென்னை வடக்கு கூடுதல் கமிஷனர் அஸ்ரா கர்க் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அதோடு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்து விட்டு தப்பிய கும்பலை பிடிக்க பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்தச் சூழலில்தான் பிரபல ரௌடியான ஆற்காடு சுரேஷின் சகோதரரர் பொன்னை பாலு உள்பட எட்டு பேர் அண்ணாநகர் துணை கமிஷனர் அலுவலகத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து பேசிய போலீஸார், ஆம்ஸ்ட்ராங்குக்கு நெருங்கியவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போதுதான் ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்டு இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் கைதாகியிருக்கும் பொன்னை பாலு, பிரபல ரௌடி ஆற்காடு சுரேஷின் சகோதரர். இவரின் தலைமையிலான டீம்தான் இந்தக் கொலையை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங்கும் ஆற்காடு சுரேசுக்கும் என்ன முன்விரோதம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினோம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் ஆற்காடு சுரேஷ் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த போலீஸார், அரக்கோணத்தைச் சேர்ந்த ‘ஒற்றைக்கண்’ ஜெயபால், சைதை சந்துரு, எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த யமஹா மணி உள்பட சிலரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆற்காடு சுரேஷை கொலை செய்ய ஒரு பிரபல ரௌடி டீம் கைதானவர்களுக்கு உதவிய தகவல் தெரியவந்தது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் கிடைக்காததால் அந்த டீமை போலீஸார் கைது செய்யவில்லை. இருப்பினும் ரகசியமாக விசாரணை நடத்தியதில் சிலரின் மீது சந்தேகம் எழுந்தது.
அதனால் ரௌடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸார், ஆற்காடு சுரேஷ் கொலையில் தொடர்புடையவர்களை விசாரித்து வந்தனர். அப்போதுதான் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தரப்பு மீது ஆற்காடு சுரேஷின் டீம் ஆத்திரத்திலிருக்கும் தகவல் கிடைத்தது. உடனடியாக ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார், ஆம்ஸ்ட்ராங் குடியிருக்கும் புளியந்தோப்பு காவல் மாவட்ட உயரதிகாரிகளுக்கு நோட் போட்டனர். அதில் `ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்திருக்கிறது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள்’ என குறிப்பிட்டிருந்தது. இந்தச் சூழலில்தான் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதும் ஆற்காடு சுரேஷின் டீம் மீதுதான் சந்தேக பார்வை விழுந்தது. உடனடியாக அவர்களை தேடியபோதுதான் ஆற்காடு சுரேஷின் சகோதரர் உள்பட எட்டு பேர் சரண் அடைந்திருக்கிறார்கள். இவர்களின் பின்னணி, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் சிக்கிய ஒரு கோல்டு நிறுவன விவகாரத்தில் ஆற்காடு சுரேஷ் தலையிட்டிருக்கிறார். அதில் ஆம்ஸ்ட்ராங் தரப்பு ஆற்காடு சுரேஷுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததாக தெரிகிறது. அதுதொடர்பாக விசாரித்துக் கொண்டிருக்கிறோம். கைதானவர்களின் பின்னணயில் சிறையிலிருக்கும் ஒரு பிரபல ரௌடிக்கும், தலைமறைவாக இருக்கும் ஒரு ரௌடிக்கும் தொடர்பு இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அந்தக் கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது” என்று விரிவாக கூறினர்.
இதை மறுக்கும் ஆம்ஸ்ட்ராங் தரப்பினரோ, ஆற்காடு சுரேஷுக்கும், ஆம்ஸ்ட்ராங்குக்கும் எந்தவித முன்விரோதமும் கிடையாது. அதனால் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். உளவுத்துறையின் தோல்வியால்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதனால் இந்தத் தோல்விக்கு காரணமாக காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள். முதலமைச்சரின் தொகுதிக்கு உள்பட்ட பெரம்பூர் பகுதியில், காவல்நிலையத்துக்கு அருகே, தேசிய கட்சியின் மாநிலத்தலைவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே, பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்குக்கு இறுதி அஞ்சலி செலுத்த நாளை (ஞாயிறு) சென்னை வர திட்டமிட்டுள்ளதாகவும், ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் அமைதியையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டுவதாகவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை சென்னையில் அவரது வீட்டுக்கு வெளியே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் கூடிய தலைவர் அவர். அவரது படுகொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மிகவும் வேதனைக்குரிய இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு நாளை (ஞாயிறு) சென்னைக்கு நேரில் சென்று ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளேன். அவருடைய குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவுள்ளேன். இத்தருணத்தில் அனைவரும் அமைதியையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
The gruesome killing of Mr. K. Armstrong, Tamil Nadu state Bahujan Samaj Party (BSP) president, outside his Chennai house is highly deplorable and condemnable. An advocate by profession, he was known as a strong Dalit voice in the state. The state Govt. must punish the guilty.
— Mayawati (@Mayawati) July 5, 2024
இந்தச் சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. @BSPArmstrong அவர்கள் சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருமுற்றேன்.
திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத்…
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) July 5, 2024
திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைதுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அன்னாரது இறுதி ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு திரு. @mkstalin அவர்களை வலியுறுத்துகிறேன்” என விமர்சித்துள்ளார்.
இதனிடையே, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. எனவே, இந்த கொலையின் பின்னணியில் இருந்தவர்கள், உண்மையான குற்றவாளிகள் யாரோ, அவர்களை கைது செய்ய வேண்டும். சரண் அடைந்தவர்களை கைது செய்துவிட்டோம் என்ற வகையிலே காவல்துறை புலன் விசாரணையை நிறுத்திக் கொள்ளக்கூடாது” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூர் பகுதியில் உள்ள பந்தர்கார்டன் பள்ளியில், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது. தமிழக அரசு அதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறது. அவருடைய கட்சி அலுவலகத்தின் வளாகத்தினுள் அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கும், அனுமதி அளிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry