200 நாட்களில் 595 கொலைகள்! கொலைக்களமாக மாறிவரும் தமிழகம்! மக்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை என EPS கண்டனம்!

0
78
Edappadi Palaniswami alleges 595 murders took place in 200 days under MK Stalin-led DMK rule.

2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தின் தலைநகராம் சென்னை கொலை நகரமாக மாறியுள்ளது என்ற நிலையில், கடந்த 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி தமிழகமே கொலைக்களமாக மாறியுள்ளது. மக்கள் தங்களது உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் வாழ்வது அபாயகரமான ஒன்றாகும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி’’ என்று பாடினார் எம்ஜிஆர். அவரின் ரசிகன் நான் என்றும், அவரது படங்களை பார்த்தே வளர்ந்தவன் நான்’ என்றும் தேவைக்கேற்றார்போல், சந்தர்ப்பத்திற்கேற்றார்போல் சொல்லக்கூடிய இந்த திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின், தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தராமல், அவர்களை சிரமத்திற்கு உள்ளாக்கி தனது நிர்வாகத் திறமையின்மையை நாள்தோறும் வெளிக்காட்டி வருகிறார்.

Also Read : மின் கட்டண உயர்வுக்கு ஈபிஎஸ் கண்டனம்! சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் ஸ்டாலினால் மக்கள் வேதனையில் துடிப்பதாக குற்றச்சாட்டு!

கடந்த மூன்றாண்டுகளாக திமுக ஆட்சியில் நடைபெறக்கூடிய சமூக விரோதச் செயல்களை சுட்டிக்காட்டினால், தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று வக்கணை பேசும் ஸ்டாலின், நான் எத்தனையோ முறை வேண்டுகோள் விடுத்த பின்னரும் காவல் துறையினரை சுதந்திரமாக செயல்பட விடாமல் வைத்திருப்பது, நாள்தோறும் நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்களின் மூலம் நிரூபணமாகிறது. யார் ஆட்சியில் இருந்தாலும் அங்கொன்றும், இங்கொன்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், வக்கிர புத்தி படைத்தவர்களாலும், ஒருசில கொலைகள் நடப்பது இயல்பு. குற்றவாளிகளை காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்வது நடைமுறை.

ஆனால், திமுக ஆட்சியில் கொலைகள் செய்வதையே தொழிலாகக் கொண்டு பலர் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து வெறியாட்டம் ஆடுவதும், பல கொலைகளில் ஈடுபட்ட கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறுவதும் கண்கூடாகும். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில்கூட ‘நாங்கள்தான் செய்தோம்’ என்று தானாகவே முன்வந்து சிலர் சரணடைந்துள்ளதும், அதில் ஒருவரை சென்னை மாநகர் காவல் துறையினர் என்கவுண்டர் செய்ததும் விந்தையான சம்பவமாகும்.

Also Read : தமிழகத்தில் புதிய மின் இணைப்புக்கான கட்டணம் இரு மடங்காக உயர்வு! அடுத்தடுத்த கட்டண உயர்வுகளால் மக்கள் கொந்தளிப்பு!

காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் படுகொலை, சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிக் கழகச் செயலாளர் சண்முகம் படுகொலை, மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் படுகொலை என்று கட்சி பேதமின்றி பல படுகொலைகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இவற்றில் ஒருசில கொலை நிகழ்வுகளைத் தவிர, ஏனைய குற்றங்களில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. உண்மைக் குற்றவாளிகள் இதுவரை பிடிபடாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தின் தலைநகராம் சென்னை கொலை நகரமாக மாறியுள்ளது என்ற நிலையில், கடந்த 200 நாட்களாக தமிழகமே கொலைக்களமாக மாறியுள்ளது. மக்கள் தங்களது உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் வாழ்வது அபாயகரமான ஒன்றாகும். திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 80 கொலைகளும்; பிப்ரவரி மாதம் 64 கொலைகளும்; மார்ச் மாதம் 53 கொலைகளும்; ஏப்ரல் மாதம் 76 கொலைகளும்; மே மாதம் 130 கொலைகளும்; ஜூன் மாதம் 104 கொலைகளும்; ஜூலை 17-ஆம் தேதி வரை 88 கொலைகளும் என, மொத்தம் சுமார் 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Also Read : கடலில் மீன்களைவிட அதிகரிக்கும் கழிவுகள்! பூமியில் உள்ள மனிதர்களின் எடைக்கு நிகராக ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்குகள்!

தமிழகத்தில் சென்னை மாநகரில் மட்டும் 86 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது, இரண்டாவது மதுரையில் 40 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 35-ம், விருதுநகரில் 31 கொலைகளும் நடைபெற்று முறையே மூன்றாவது, நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

‘அடுத்தவர்கள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும்’ என்ற இருமாப்போடு இனியும் செயல்படாமல், சுய சிந்தனையோடு கொலை பாதகர்களிடமிருந்து மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று சிந்தித்து, போர்க்கால அடிப்படையில் இந்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன். கையில் அதிகாரம் இருக்கிறது என்ற மமதையில் தொடர்ந்து காவல் துறையை தங்களின் சுயநலத்திற்காக இந்த ஆட்சியாளர்கள் ஏவல் துறையாக பயன்படுத்துவார்களேயானால், ‘அரசியல் பிழைத்தோர்க்கு, அறம் கூற்றாகும்’ என்பதை நினைவூட்டுகிறேன்.” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry