
தமிழ்நாட்டில் 2,500 சதுர அடி நிலத்தில் 3,500 சதுர அடி பரப்பளவுக்குள் வீடு கட்டுவோர் இணைய வழியிலேயே விண்ணப்பித்து, உடனடியாக ஒப்புதல் பெறும் நடைமுறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை துவங்கியிருக்கிறது. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இதற்கான விண்ணப்பக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் வீடு கட்டுவோர், சதுர அடிக்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
நகராட்சி நிர்வாகம் – குடிநீர் வழங்கல் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகள் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் வளர்ச்சிக் கட்டணம், கட்டட வரைபட ஒப்புதல் கட்டணம் மற்றும் இதர செலவினங்களை ஒருங்கிணைத்து கட்டணங்களை நிர்ணயிக்க ஆணை பிறப்பித்துள்ளன.
Also Read : வெயிட் குறைக்கனுமா..? இதை டிரை பண்ணுங்க, கைமேல ரிசல்ட்..! மரணத்தையே தள்ளிப்போடும் கருஞ்சீரகம்…!
இதன்படி, சென்னையில் வீடு கட்ட விரும்புவோர் சதுர அடிக்கு ரூ.100-ம், கோவை, திருப்பூர், மதுரையில் வீடு கட்ட விரும்புவோர் சதுர அடிக்கு ரூ.88-ம் செலுத்த வேண்டும். தாம்பரம், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் சதுர அடிக்கு 84 ரூபாயும், ஆவடி, திருநெல்வேலி, வேலூர், தூத்துக்குடி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சதுர அடிக்கு 79 ரூபாயும் வசூலிக்கப்படும். தஞ்சாவூர், நாகர்கோவில், ஓசூர், கடலூர், கரூர், கும்பகோணம், திண்டுக்கல், சிவகாசி, காஞ்சிபுரம் மாநகராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.74 வசூலிக்கப்படும்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையும், சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை நகராட்சிகளுக்கு சதுர அடிக்கு ரூ.74; கிரேடு -1 மற்றும் கிரேடு -2 நகராட்சிகளுக்கு சதுர அடிக்கு ரூ.70 என பிளாட்(flat rates) விகிதங்களை நிர்ணயித்துள்ளது. பேரூராட்சிகளில் வசிப்பவர்கள், பேரூராட்சிகளின் வகையைப் பொறுத்து சதுர அடிக்கு ரூ.45 முதல் சதுர அடிக்கு ரூ.70 வரை கட்ட வேண்டும்.
மறுபுறம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சி.எம்.டி.ஏ) எல்லைக்குட்பட்ட புறநகர் கிராம பஞ்சாயத்துகள் மற்றும் பிற கிராம பஞ்சாயத்துகளுக்கு சதுர அடிக்கு ரூ.27 மற்றும் சதுர அடிக்கு ரூ.22 பிளாட்(flat rates) விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. புறநகர் கிராம பஞ்சாயத்துகளுக்கும், மற்ற பகுதிகளில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கும் முறையே சதுர அடிக்கு ரூ.25, ரூ.15 என பிளாட் விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
புதிய முறையின்படி, 2,500 சதுர அடி வரையிலான மனை அளவு மற்றும் 3,500 சதுர அடி வரை கட்டப்படும் கட்டிடங்களுக்கு, தரைத்தளம் அல்லது தரை மற்றும் ஒரு தளம் கொண்ட ஆனால் 7 மீட்டர் உயரத்திற்குள் உள்ள குடியிருப்பு கட்டமைப்புகளை நிர்மாணிப்பதற்கான அனுமதிகளைப் பெறலாம். இதுபோன்ற சிறிய கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ்களைப் பெறுவதிலிருந்தும் அரசாங்கம் விலக்கு அளித்துள்ளது.
மேலும், புதிய முயற்சியின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான சாலை அகல விதிமுறைகள் 1.5 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளன, ஆய்வு கட்டணத்திலிருந்து விலக்கு (சதுர மீட்டருக்கு ரூ.2) மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் கட்டணங்களில் (சதுர மீட்டருக்கு ரூ.375) இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் நிலைக் கட்டணங்களைச் செலுத்திய பிறகு QR Code மூலம் திட்ட அனுமதிகளைப் பதிவிறக்கம் செய்யலாம். கட்டிட அனுமதிகள் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும், மேலும் நிலமானது அரசாங்கம், திறந்தவெளி இருப்பு, நீர்நிலைகள் மற்றும் பிறருக்கு சொந்தமாக இருந்தால் அனுமதிகள் ரத்து செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள், 2019 இன் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
Also Read : சுகர் பேஷன்ட்டும் பயமில்லாம உருளைக்கிழங்கு சாப்பிடலாம்! இப்படி குக் பண்ணுங்க, என்ஜாய் பண்ணுங்க…!
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள கட்டிட பொறியாளர்கள், கட்டணங்கள் அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர். பழைய முறையின்படி, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சதுர அடிக்கு ரூ.60 கட்டணமாக இருந்தது. அது தற்போது, சதுர அடிக்கு ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகிட்டத்தட்ட 67 சதவிகித உயர்வாகும். புதிய சுய சான்றிதழ் முறையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, முந்தைய முறையின் கீழ் திட்டமிடல் அனுமதிகளுக்கு பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகளுக்கு இணையதளத்தின் மூலம் ஒற்றைச் சாளர அனுமதி அளிக்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. ‘தமிழ்நாடு திட்ட அனுமதிக்கான ஒற்றைச் சாளர முறை’ என்று அதற்குப் பெயர். புதிதாக அறிமுகமாகியுள்ள திட்டம் சிறிய வீடுகளுக்கானது. 2,500 சதுர அடி மனையில் 3,500 சதுர அடி பரப்பிற்குள் வீடு கட்டுவோர் புதிய முறைப்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த ஒற்றைச் சாளர அனுமதிக்கு https://onlineppa.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry