உலகளவில் மக்கள் அதிகமாகப் பாதிக்கப்படும் பிரச்னைகளில் முதன்மையானதாக இருப்பது பல் மற்றும் வாய் சம்பந்தபட்ட நோய்கள்தான். 2022ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் மேலான மக்கள் பல் தொடர்பான பிரச்னைகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்கள் சரியாக பல் துலக்காமல் இருப்பதே 99சதவீத பல் பிரச்னைகளுக்குக் காரணமாக அமைகிறது” என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஈறு தொடர்பான பிரச்னைகளும் (Gum disease), பல் சுத்திகளும் (Periodontal Disease) ஏற்படுவதற்கு 99% காரணம் நாம் பற்களைச் சரியாகத் துலக்காமல் இருப்பதுதான். எனவே ஏனோ தானோ என்று பல் துலக்காமல், கவனத்தோடு பல் துலக்கினாலே மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே ஏற்படாது.
பொதுவாக ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கினாலே பல் சுத்தமாக மாறிவிடும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். அதேபோல் ஒருமுறை இரண்டு நிமிடங்களுக்கு பற்களை சுத்தம் செய்தல் வேண்டும். ஆனால், அதுமட்டும் போதாது, ஈறுகள், பற்கள் என அனைத்திலும் நன்றாக சுத்தம் செய்தல் வேண்டும். அப்போதுதான், பற்களுக்கு இடையில் மற்றும் நாக்கில் உள்ள பிளேக் மற்றும் பாக்டீரியாக்கள் அகற்றப்படுகின்றன. மேலும் ஈறு நோய் மற்றும் பல் சிதைவைத் தடுக்கும்.
Also Read : சுகர் பேஷன்ட்டும் பயமில்லாம உருளைக்கிழங்கு சாப்பிடலாம்! இப்படி குக் பண்ணுங்க, என்ஜாய் பண்ணுங்க…!
பெரும்பாலானோர் செய்யும் பெரிய தவறு, இரவு நேரங்களில் பல் துலக்காதது. இரவு நேரங்களில் பல் துலக்குவது மிகவும் அவசியம். அதேபோல் சிலர் ஒரு நிமிடத்திற்குள்ளாகவே பற்களை மிக வேகமாகத் துலக்கி விடுவார்கள். மற்ற சிலர் 10 நிமிடங்கள் வரை பல் துலக்குகிறார்கள். இது இரண்டுமே மிக தவறானது. நீண்ட நேரம் பல் துலக்குவதால் ஈறுகள் இறங்கிப் போவதுடன், பற்கள் தேய்ந்து போகும். சில நேரங்களில் பற்கள் உடைந்தும் போகும். பற்களில் மஞ்சள் நிறத்தில் படியக் கூடிய காரையும் தவறான பல் துலக்கும் முறைகளால்தான் ஏற்படுகிறது.
பல் துலக்கும் முறையை தெரிந்துகொள்வோம்
- முதலில் தண்ணீரில் சிறிது நேரம் பிரஷை ஊற வைக்க வேண்டும். அப்போதுதான் பிரஷ் சுத்தமாகும். பின்னர் ‘ஃபுளோரைடு’ உள்ள பேஸ்ட்டை பயன்படுத்த வேண்டும்.
- சுமார் 15 வினாடிகள், பிரஷை வைத்து முன் பற்களில் மேலும் கீழுமாகவும், வட்டமாகவும் மெதுவாக தேய்க்கவும்.
- இப்போது நன்றாக வாயைத் திறந்து, கீழ்ப் பற்களை இருபுறமும் 15 விநாடிகள் தேய்க்கவும். பின் பற்களின் மேல் பகுதியை 15 விநாடிகள் தேய்க்கவும். பின்னர் பற்களின் பக்கவாட்டு பகுதியை 15 விநாடிகள் தேய்க்கவும். பற்களை அழுத்த வேண்டாம்.
- பின் பற்களின் பின்புறம் 30 விநாடிகள் தேய்க்கவும். அப்படி செய்யும்போது ஈறுகளுக்கு சேதம் ஏற்படாதவாறு மெதுவாக தேய்க்கவும்.
- பிறகு நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். நாக்கில் பாக்டீரியா அல்லது பிளேக் கூட வளரலாம். எனவே பல் துலக்கும் போதெல்லாம் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.
- அனைத்திற்கும் இறுதியாக, மீதமுள்ள பேஸ்ட், உமிழ்நீர், வாயில் உள்ள தண்ணீர் அனைத்தையும் துப்ப வேண்டும். பின் குளிர்ந்த நீரில் வாயை நன்கு கொப்பளிக்கவும்.
பிரஷ் எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்?
இங்கே சிலருக்கு அழுத்தமாகப் பல் தேய்த்தால்தான் பல் துலக்கியது போன்ற உணர்வு ஏற்படும். அதற்காக கடினமான நார்களைக் (Hard brush) கொண்ட பிரஷ்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மென்மையான பிரஷ்களை பயன்படுத்துவதுதான் எப்போதும் நல்லது. ஆனால் நிறைய பேர் இங்கே சரியான முறையில் பல் துலக்குவது இல்லை. அவ்வாறு இருப்பவர்கள் Medium பிரஷ்களை பயன்படுத்தலாம்.
ஏனெனில் சரியாகப் பல் துலக்காமல் இருந்தாலும், Medium பிரஷ்களை பயன்படுத்தும்போது அது அவர்களுடைய பற்களில் உள்ள கறைகளை நீக்குவதற்கு உதவி செய்கிறது. ஆனால் அதேநேரம் Hard & Medium பிரஷ்களை முறையாகப் பயன்படுத்தவில்லை என்றால் பற்கள் சேதமடையும் என்பதையும் நினைவுகொள்ள வேண்டும்.
பற்கள் நேரான வரிசையில் இருக்கும் நபர்கள் Straight பிரஷ்களை தேர்ந்தெடுத்தாலே போதும். அதுவே பல் வரிசை சீராக இல்லாமல் இருப்பவர்கள் Criss Cross பிரஷ்களை தேர்ந்தெடுக்கலாம். வயதானவர்கள் அல்லது பற்களில் ஏதேனும் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருப்பவர்கள், பற்கூச்சம் உடையவர்கள் Ultra soft பிரஷ்களை உபயோகித்தால் நல்லது.
Also Read : வெயிட் குறைக்கனுமா..? இதை டிரை பண்ணுங்க, கைமேல ரிசல்ட்..! மரணத்தையே தள்ளிப்போடும் கருஞ்சீரகம்…!
இதில் நமக்கு எந்த வகையான பிரஷ்கள் பொருத்தமாக இருக்கும் என்பதை நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். குழப்பமாக இருக்கும்பட்சத்தில் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம். அதேபோல் ஒரு டூத்பிரஷை இரண்டு மாதம் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்கள் ஒரே பிரஷை பயன்படுத்துவதில் எந்தப் பலனும் இல்லை.
எந்தவொரு பல் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருந்தாலும், ஆரம்பகட்டத்திலேயே மருத்துவரை அணுகுவது நல்லது. குறைந்தது ஆண்டுக்கு ஒருமுறை பற்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அதுதான் பற்களை பாதுகாப்பதுடன், பெரும் மருத்துவ செலவுகளில் இருந்தும் நம்மை காக்கும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry