தள்ளுவண்டி கடை தண்ணி சட்னி! டிபன் பிரியர்களின் முதல் சாய்ஸ் இதுவாகத்தான் இருக்கும்!

0
90
Thalluvandi Kadai Thanni Chutney! This will be the first choice of tiffin lovers!Image Credit : tamil boldsky.

பொதுவாக நாம் வீடுகளில் இட்லி தோசை செய்யும் பொழுது அதனுடன் வைத்து சாப்பிட தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி என இந்த மூன்று சட்னிகளை மட்டுமே சுழற்சி முறையில் மாற்றி மாற்றி சாப்பிடுவோம். புதிதாக ஏதேனும் சட்னி செய்ய விருப்பப்பட்டால் இந்த தள்ளுவண்டி கடை சட்னியை செய்து பாருங்கள். அற்புதமான சுவையில் இருக்கும்.

சற்று நீர்க்க இருக்கும் இந்தச் சட்னியை ஊற்றி சாப்பிட்டால் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிக எண்ணிக்கையில் இட்லியோ, தோசையோ சாப்பிடலாம். பெரிய ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சட்னியை விட, தள்ளுவண்டி கடைகளில் கொடுக்கப்படும் சட்னியின் சுவையே தனி தான். பெரிய ஹோட்டல்களில் வயிறு நிறைய சாப்பிடுவதை விட, தள்ளுவண்டி கடைகளில் வயிறு நிறைய சாப்பிடுவதோடு, திருப்தியாகவும் சாப்பிடுவோம். இதற்கு அந்தக் கடைகளில் கொடுக்கப்படும் சட்னியின் சுவையும் முக்கிய காரணம்.

குழந்தைகளுக்கும் பிடித்தவாறு இருக்கும் இந்த தள்ளுவண்டி கடை சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள்:

  • எண்ணெய் – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 5
  • பூண்டு – 6 பல்
  • சின்ன வெங்காயம் – 6
  • கறிவேப்பிலை – 2 கொத்து
  • புளி – சிறிதளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • வறுத்த வேர்க்கடலை – 100 கிராம்
  • பொட்டுக்கடலை – 50 கிராம்
  • உப்பு – சுவைக்கேற்ப
  • தண்ணீர் – தேவையான அளவு.

தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்..!

  • எண்ணெய் – 1 டீஸ்பூன்
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
  • வரமிளகாய் – 2
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • சின்ன வெங்காயம் – 5 (பொடியாக நறுக்கியது)

தள்ளுவண்டி கடை சட்னி செய்முறை:

* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்னர் அதில் பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் புளி, கொத்தமல்லி, வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, தண்ணி சட்னி என்பதால், சற்று அதிக நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.

* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தள்ளுவண்டி கடை ஸ்பெஷல் சட்னி தயார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry