உலக மக்கள்தொகையில் 99 சதவிகிதத்தினரை பாதிக்கும் காற்று மாசுபாடு ஒரு பெரிய பொது சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. மாசுபடுத்திகளால் அதிக தூரம் பயணிக்க முடியும். எனவே அவை அசல் மூலங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளையும் பாதிக்கிறது.
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (யுஎன்இபி) காற்று மாசுபாட்டை, “உலக அளவில் பொது சுகாதாரத்திற்கு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்” என்று அழைக்கிறது. இது உலகம் முழுவதும் எழுபது லட்சம் அகால மரணங்களுக்கு காரணமாக உள்ளது என்று அது கணக்கிட்டுள்ளது. காற்று மாசு எனும் சவாலை எதிர்கொண்டு சமாளிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2020-ஆம் ஆண்டில் ஐநா பேரவை, செப்டம்பர் 7-ஆம் தேதியை ’நீல வானத்துக்கான தூய காற்றின் சர்வதேச தினமாக’ (International Day of Clean Air for Blue Skies) அறிவித்தது.
காற்று மாசுபாடு என்பது திட துகள்கள், திரவ துளிகள் மற்றும் வாயுக்களின் சிக்கலான கலவையாகும். இது PM அதாவது ’பர்டிகுலேட் மேட்டர்’ (துகள்கள் மாசுமாடு) என்று அளவிடப்படுகிறது. 2.5 மைக்ரோமீட்டர்கள் அல்லது அதற்கும் குறைவான விட்டம் கொண்ட நுண்துகள்கள் (PM2.5), மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது. துகள்களின் நுண்ணளவு காரணமாக அவை ரத்த ஓட்டத்தில் நுழைகின்றன. இதயம், மூளை மற்றும் பிற உறுப்புகளில் குவிந்துவிடுகின்றன. சராசரி மனித முடி சுமார் 70 மைக்ரோமீட்டர்கள். அதை ஒப்பிடும்போது இந்த துகள்கள் மனித முடியின் அளவில் முப்பதில் ஒரு பங்கு ஆகும். அவை புகைக்கரி, மண் தூசி, சல்பேட்டுகள் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
உலக அளவில் மிக அதிக PM2.5 நுண்துகள்கள் வெளிப்பாடுகளைக் கொண்ட பத்து நாடுகளில் எட்டு ஆப்பிரிக்காவில் உள்ளன. மீதமுள்ள இரண்டு, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளன. காற்று தரக் கட்டுப்பாடு வலுவாக இல்லாதது, பலவீனமான ஒழுங்குமுறை கட்டமைப்புகள் மற்றும் போதிய நிதி இல்லாதது போன்ற காரணங்களால் இந்த பிராந்தியங்கள் காற்றின் தரத்தை மேம்படுத்தும் திசையில் சவால்களை சந்தித்து வருகின்றன.
Also Read : தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்! Microplastics Found in Human Breast Milk!
இதனிடையே, பெண்கள் கருத்தரிப்பதில் காற்று மாசு மற்றும் ஒலி மாசு சிக்கல் ஏற்படுத்துவதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. டென்மார்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு பிரிட்டிஷ் மருத்துவ இதழ் வெளியீட்டு நிறுவனமான BMJவில் வெளியாகியிருக்கிறது.
30-45 வயதினரில், 5,26,056 ஆண்கள் மற்றும் 3,77,850 பெண்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் 2000-2017 இடையில் திருமணம் செய்துகொண்ட நார்டிக் நாடுகளைச் சேர்ந்தவர்கள். கருத்தடை செய்யப்படாதவர்கள்! வட ஐரோப்பாவில் உள்ள நார்வே, ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளையும் அதைச் சார்ந்த தீவுகளையும் நார்டிக் நாடுகள் எனக் குறிப்பிடுவர்.
இந்த ஆய்வின்படி காற்று மாசு ஆண்கள் கருவுறுத்தல் சக்தியிலும், ஒலி மாசு பெண்கள் கருவுறுதலிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது என்பது தெரியவந்திருக்கிறது. சராசரியாக 5 ஆண்டுகள் காற்று மாசுபாட்டுடன் வாழும் ஆண்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. மனித உடல் ஆரோக்கியத்தில் நுண்துகள்கள் ஏற்படுத்தும் பாதிப்பு இதற்குக் காரணம் என்கின்றனர்.
காற்றில் PM2.5 வகை மாசு அதிகமாக இருக்கும்போது இந்தப் பிரச்னை தீவிரமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். 2000 – 2017 வரையிலான 18 ஆண்டுகளில் 16,172 ஆண்களும் 22,672 பெண்களும் கருத்தரிக்க இயலவில்லை. இவர்கள், சராசரியை விட ஒரு க்யூபிக் மீட்டருக்கு 2.9 மைக்ரோ கிராம் PM2.5 வகை மாசு அதிகமாக இருக்கும் பகுதிகளில் இருந்துள்ளனர். இதனால் காற்றுமாசு கருவுறுதலில் சிக்கல் ஏற்படுத்த 24% வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
35-45 வயது பெண்களுக்கு கருவுறுதலில் சிக்கல் ஏற்படுவதற்கு ஒலி மாசு முக்கிய காரணமாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். முக்கியமாக சாலையில் போக்குவரத்து நெரிசலினால் ஏற்படும் ஒலி மாசு 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் 37 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக இந்த ஆய்வு கூறுகிறது. மேற்கு நாடுகளில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது முக்கியப் பிரச்னையாக பார்க்கப்படுகிறது. முதல் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளின் வயதும் அதிகரித்திருக்கிறது என்பதால், இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.
இது ஒரு முதற்கட்ட ஆய்வுதான் என்பதால் இந்த முடிவுகளை அங்கீகரிக்க ஆழமான ஆய்வுகள் தேவை. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளிலும் இது நிரூபிக்கப்பட்டால், மேற்கு நாடுகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க காற்று மாசு மற்றும் ஒலி மாசை குறைக்க அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இதுவரை, சிகரெட், புகையிலை, ஆல்கஹால், பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள், நாட்பட்ட நோய்கள், உடல் உபாதைகள், உடல்பருமன், தீவிர எடையிழப்பு ஆகிய காரணிகள் கருவுறுதலில் சிக்கல் ஏற்படுத்துவதைக் கண்டறிந்துள்ளனர்.
உலக அளவிலான காற்று மாசு பற்றி தெரிந்துகொண்ட நிலையில், இந்தியாவிலும் நிலைமை மோசமாகத்தான் உள்ளது. காற்றின் தர அளவுகளை மதிப்பீடு செய்யும் சுவிட்சர்லாந்தின் ’IQAir’ அமைப்பு 2023-ம் ஆண்டுக்கான உலக காற்று தர அறிக்கையை வெளியிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, காற்று மாசு அளவீடான ‘பிஎம் 2.5 செறிவு’ என்பது கன மீட்டருக்கு 5 மைக்ரோகிராமை விட அதிகமாக இருக்கக்கூடாது.
ஆனால் இந்தியாவின் வருடாந்திர ‘பிஎம் 2.5 செறிவு’ கனமீட்டருக்கு 54.4 மைக்ரோகிராமாக (54.4 g/m3) உள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் வங்கதேசமும், இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானும், 3-வது இடத்தில் இந்தியாவும் உள்ளது. மிக மோசமான அளவில் காற்றுமாசு நிலவும் முதல் 50 நகரங்களில் இந்தியாவைச் சேர்ந்த 42 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry