கல்வித்தரம் குறித்த விவாதத்துக்கு தயாரா..? ஆளுநர் ரவிக்கு பகிரங்க சவால் விடும் ஐபெட்டோ அண்ணாமலை!

0
458
AIFETO Annamalai challenges the Governor to an open debate on the quality of education, questioning the current state of the system. His bold stance emphasises the need for transparency and reform in educational policies.

குடியரசு முன்னாள் தலைவர் சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேதகு குடியரசுத் தலைவர், தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி சிறப்பு செய்து ஆசிரியர் பணியினை மாணவர்களை உருவாக்குகிற புனிதமான பணி என்றும் புகழாரம் சூட்டி பாராட்டி வருகிறார்.

பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களிலும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு விருதுகள் வழங்கி ஆசிரியர்களை, ஆசிரியர் பணியினை பாராட்டி மகிழ்ந்து கொண்டாடி வருகிறார்கள். செப்டம்பர் 5 அன்று பிரதமர் டெல்லியில் இருந்த போதெல்லாம் அவரது இல்லத்திற்கு தேசிய விருது பெற்ற ஆசிரியர்களை அழைத்துப் பாராட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டு பெருமைப்படுத்தி வருகிறார்.

Also Read : கருத்தரித்தலில் சிக்கலை ஏற்படுத்தும் காற்று மாசு! மிகப்பெரிய அச்சுறுத்தலை சமாளிக்க முடியாமல் திணறும் உலக நாடுகள்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி, கிண்டி ஆளுநர் மாளிகையில் 05.09.2024 அன்று நடைபெற்ற ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில், தலைமை விருந்தினராக ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். அந்த விழாவில் அவர் பேசிய வரிகளை அவரே சுய பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் மோசம், கற்பித்தல் திறன் மோசம், தேசிய சராசரியினை விட கீழே போய்விட்டது; தமிழக பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் கலாச்சாரம் அதிகரித்து விட்டது வேதனையுறுகிறேன் என்கிறார் ஆளுநர். தாம் செல்லுகின்ற இடமெல்லாம் வெறுப்புணர்வினை திட்டமிட்டு வெளியிட்டு வருவதால், கேட்பதற்கு இது ஒன்றும் புதியதல்ல..!

ஆனால், ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு ஆளுநர் இப்படி எங்கள் தாய்த் தமிழ்நாட்டினை பற்றி, கல்வித்தரத்தை பற்றி மிக மோசமாக பேசியபோது கேட்டுக் கொண்டிருந்த ஆசிரியர்கள், கல்வியாளர்களில் ஒருவர் கூட தமிழ் இன உணர்வு இல்லாமல் இருந்திருப்பார்களா..?

Also Read : நீங்க சிகரெட் பிடிப்பவரா? புற்றுநோயில் இருந்து தப்பிக்க இந்த 7 டெஸ்ட்டும் உடனே செஞ்சுக்கோங்க..!

ஆளுநர் அவர்களே..! பாஜக ஆளும் மாநில அரசுகளான குஜராத், உத்தரப்பிரதேசம் உள்பட கல்வியின் தரம், மாணவர்களின் கற்றல் திறன் பற்றி பட்டியல் போட்டு விவாதிக்கலாமா? 18 ஆண்டு காலமாக தேசியச் செயலாளராக (National Secretary, All India Federation of Elementary Teachers’ Organisations’) இருந்து வருகிறேன். வெளிப்படைத் தன்மையுடன் வெளிக்கொணர தயாராக உள்ளோம்.

ஆசிரியர் தினத்தன்று இப்படி பேசலாமா..? என்ற இடம் பொருள் ஏவல் கூட தெரியாத மாநிலத்தில் பயின்று வந்தவரா ஆளுநர்? என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆசிரியர் = ஆசு-குற்றம்; இரியர் – நீக்குபவர். ஆசிரியர் என்பவர் ஒழுக்கத்தை போதிப்பவர், குற்றத்தை நீக்குபவர், அறிவொளி தருபவர்.

ஐபிஎஸ் அதிகாரியான ஆளுநர் ஏற்கனவே காவல் கண்காணிப்பாளர், உளவுத்துறை உயர் அதிகாரப் பொறுப்பில் இருந்தவர் என்று எண்ணுகிறோம். பார்ப்பவர்களை எல்லாம் குற்றவாளிகளை தேடும் கண் கொண்டு பார்ப்பவர்கள், அவருக்கு பிடித்த பாரதத்தினை நினைவுக்கு கொண்டு வந்தால், துரியோதனன் வர்க்கத்தினருக்கு நல்லவர்கள் கண்ணுக்கு தெரிய மாட்டார்கள். நல்லதும் கண்ணுக்கும் படாது.

Also Read : பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுமாறு சுற்றறிக்கை! ஐபெட்டோ கடும் கண்டனம்!

தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தை பற்றி குறை சொல்லும் ஆளுநரே..! தமிழ்நாட்டின் சார்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், உயர் கல்வித்துறை அமைச்சரும் பாடத்திட்டம் பற்றி விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்கள். நாங்களும் விவாதிக்க தயாராக உள்ளோம். வாய்ப்பினை தாருங்கள். தமிழ் மண்ணில் முளைத்த புல் பூண்டுகள் கூட உங்களை ஏற்றுக் கொள்ளாது. எதிர்ப்புணர்வு புயல் வீச வாய்ப்பளிக்காதீர்கள்.

ஆசிரியர் தினத்தன்று தமிழ்நாட்டு ஆசிரியர்களை, ஆசிரியர் பணியினை, அறப்பணியினை தரம் தாழ்த்தி பேசியதை மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும். சத்திரபதி சிவாஜி சிலை நொறுங்கி கீழே விழுந்து விட்டது. 100 முறை பாரதப் பிரதமர் அவர்கள் மன்னிப்பு கேட்கிறார். அறம் நின்றுதான் அதன் கடமையைச் செய்யும். ஆசிரியர் தினத்தன்று ஆசிரிய சமுதாயத்தை சேதாரப்படுத்தியது, புறப்பட்ட இடத்திற்கே வந்து சேரும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ஆசிரியர் சமுதாயக் குரலும் உங்களுக்கு எதிராக ஒலிக்கும்..! ஒலிக்கட்டும்..!

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry