மலக்குடல் மற்றும் ஆசனவாயின் உட்பகுதியில் உள்ள நரம்புகள் வீக்கமடைவதே மூல நோய் அல்லது பைல்ஸ் எனப்படுகிறது. மூல நோய் உள்ளவர்களுக்கு, அவர்களின் குடல் இயக்கத்தின் போது, இரத்த நாளங்களின் உட்புறங்கள் மிகவும் மெலிந்து நீண்டு காணப்படும்; அதனால் நரம்புகள் வீங்கி எரிச்சலடையலாம்.
பொதுவாக மூலம் என்பது உயிர்க்கொல்லி நோயல்ல, எனினும் அது சங்கடத்தையும், தாங்க முடியாத வலியையும் ஏற்படுத்தும். மூல நோயை பல்வேறு சிகிச்சையின் மூலம் எளிதாக கையாள்வதோடு, அதனால் ஏற்படும் வலியிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.
குடல் இயக்கங்களின் போது கஷ்டப்படுபவர்கள், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்கள், கர்ப்பமாக இருப்பவர்கள், பருமனானவர்கள் அல்லது குறைந்த நார்ச்சத்துள்ள உணவை உண்பவர்கள், மூல நோய் ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் ஆவர். நாள்பட்ட மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு ஆகியவை மூல நோயின் ஆபத்தை அதிகரிக்கும். மூல நோய்க்கு நிவாரணமாக எந்த வகை உணவுகளை உண்ணலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
சிலவகை மூல நோய் அறிகுறிகள் தானாகவே சரியாகக்கூடும். குறிப்பாக, அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, போதிய தண்ணீர் குடிப்பது மற்றும் வீட்டு சிகிச்சைகள் ஆகியவற்றின் மூலம் அவை குணமாகலாம். இருப்பினும், தொடர்ச்சியான அல்லது கடுமையான மூல நோய்க்கு மருத்துவரின் மேற்பார்வையிலான சிகிச்சை அவசியம் தேவை.
பொதுவாக உள் மூலம், வெளி மூலம் என மூலம் இரண்டு வகைப்படும். இதில் உள் மூலம் மலக்குடலுக்குள் உருவாகின்றன. வழக்கமாக இது வெளியே தெரிவதில்லை; மேலும், அரிதாகவே அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது. இருப்பினும், ஆசனவாயின் வழியாக மலம் கடந்து செல்லும்போது, மிகவும் சிரமமாக இருக்கும். பெருமளவில் எரிச்சலை ஏற்படுத்தி, உட்புற தோலை சேதப்படுத்தி இரத்தப்போக்கை உண்டாக்கும். சில சமயங்களில், உள் மூல நோய், ஆசனவாய் வழியாக நீண்டு வெளிவந்து, வலி மற்றும் எரிச்சலை தூண்டலாம்.
வெளி மூலத்தின் பாதிப்பினை நம்மால் காண முடியும்; ஏனெனில் இவை ஆசனவாயை சுற்றியுள்ள தோலின் கீழ் உருவாகலாம். சில நேரங்களில், ஆசனவாயின் வெளிப்புறத்தில் வெடிப்பு உருவாகி, இரத்தப்போக்கு ஏற்படலாம். அந்த வகை வெடிப்பினால் அரிப்பு, மற்றும் அதிக வேதனை உண்டாகும். வெளி மூலத்தில் ஏற்படும் இரத்தக்கசிவினால் இரத்த உறைவு (த்ரோம்போசிஸ்) உருவாகலாம். இதனால் கடுமையான வீக்கம் உண்டாகி, வலி ஏற்படும்.
மூல நோய்க்கான காரணங்கள்
- கீழ் மலக்குடலில் வடிகட்டும் செயல் நிகழ்கையில், அழுத்தம் ஏற்பட்டு, அதனால் நரம்புகள் வீக்கமடைந்து மூலம் ஏற்படலாம்.
- கழிவறையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும் மூல நோய்க்கு வழிவகுக்கும்.
- மலச்சிக்கலும், வயிற்றுபோக்கும் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தால், அது எரிச்சலை ஏற்படுத்தி அது மூலமாக மாறலாம்.
- கருவுற்ற காலத்தில் கருப்பை பெரிதாகி, பெருங்குடலில் உள்ள நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு அதனால் வீக்கம் உண்டாகி மூல பாதிப்பு நேரலாம்.
- உடல் எடை அதிகரிப்பதால், இடுப்பு நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு மூல நோய்க்கு வழிவகுக்கலாம்.
- போதிய நார்ச்சத்து இல்லாவிடில் குடல் இயக்கத்தின் போது அதிக சிரமம் ஏற்பட்டு அதுவே மூலத்தினை தூண்டலாம்.
- அதிக பளுவை மீண்டும் மீண்டும் சுமப்பதால், வயிற்றுப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு, மலக்குடல் நரம்புகள் அதிக சிரமத்திற்கு உள்ளாகி மூல நோய் உருவாகலாம்.
- வயது மூப்பின் காரணமாக, உங்கள் மலக்குடல் மற்றும் ஆசனவாயிலுள்ள நரம்புகளுக்கு ஆதரவாக நிற்கும் திசுக்கள் பலவீனமடைந்து, நீண்டு மூலமாக வெளிப்படலாம்.
Also Read : நீங்க சிகரெட் பிடிப்பவரா? புற்றுநோயில் இருந்து தப்பிக்க இந்த 7 டெஸ்ட்டும் உடனே செஞ்சுக்கோங்க..!
மூல நோயிலிருந்து நிவாரணம் பெற உதவும் உணவுகள் :
1. பழங்கள் – ஆப்பிள், பேரிக்காய், பெர்ரி, வாழைப்பழங்கள் மற்றும் ஆரஞ்சு :
ஆப்பிள், பேரிக்காய் மற்றும் பெர்ரி போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆப்பிள் மற்றும் பேரீச்சம்பழங்களை தோலுடன் சாப்பிடும்போது, கரையாத நார்ச்சத்தை வழங்குகின்றன. எனவே, மலம் எளிதாக வெளிவருகிறது. இந்தப் பழங்களில் அதிக நீர் உள்ளடக்கம் உள்ளதால், இவை நீர்ச்சத்தினை அளித்து, மலத்தை இலகுவாக வைத்திருக்க உதவுகிறது. பெர்ரி மற்றும் ஆரஞ்சு பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் C போன்ற ஊட்டச்சத்துகள், இன்ஃப்ளமேஷனைக் குறைக்கவும் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன.
2. காய்கறிகள் – ப்ராக்கோலி, கேரட், மற்றும் அனைத்து கீரை வகைகள் :
ப்ராக்கோலி மற்றும் காலிஃபிளவர் போன்ற காய்கறிகளில் கரையாத நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இவை மலச்சிக்கலைத் தடுக்க உதவுகின்றன. காய்கறிகளில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிரம்பியுள்ளன. எனவே அவை செரிமான ஆரோக்கியம் உள்பட ஒட்டுமொத்த உடல்நலத்தையும் ஆதரிக்கின்றன. உதாரணமாக, கீரை வகைகளில் மெக்னீசியம் அதிகம் உள்ளது, இது மலத்தை இலகுவாக்க உதவுகிறது. எனவே காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் மூல நோயின் அபாயத்தை குறைப்பதற்கான முக்கிய ஆதாரங்களாக உள்ளன.
3. முழு தானியங்கள் – ஓட்ஸ், முழு கோதுமை பிரெட், பிரவுன் அரிசி, பார்லி மற்றும் உமியுள்ள தானியங்கள் :
சுத்திகரிக்கப்பட்ட தானியங்களுடன் ஒப்பிடும்போது முழு தானியங்கள் அதிக நார்ச்சத்தை வழங்குகின்றன. இவை மலத்தை இலகுவாக்க உதவுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட (ரிஃபைன்ட் செய்யப்பட்ட) தானியங்களை விட முழு தானியங்கள் மெதுவாக ஜீரணிக்கப்படுவதால், இரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்க உதவுகின்றன. வயிறு நிறைந்த உணர்வை ஊக்குவித்து, அதிகப்படியான உணவுத் தேவையைத் தடுக்கிறது. ஓட்ஸில் பீட்டா-குளுக்கன் (beta-glucan) எனப்படும் ஒரு குறிப்பிட்ட வகை கரையக் கூடிய நார்ச்சத்தும் உள்ளதால், அது செரிமான ஆரோக்கியத்தையும், உடல்நலத்தையும் இயல்பாக பராமரிக்க உதவுகிறது.
4. பருப்பு வகைகள் – பீன்ஸ் (கிட்னி, கருப்பு), பயறு, கொண்டைக்கடலை மற்றும் பட்டாணி போன்றவை :
பருப்பு வகைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அவை, தண்ணீரைத் தக்கவைத்து எளிதான குடல் இயக்கங்களை ஊக்குவிக்கின்றன. பருப்பு வகைகள் தாவர அடிப்படையிலான புரதத்தின் சிறந்த மூலமாகும். மேலும், இவை அத்தியாவசிய அமினோ அமிலங்களை வழங்குகின்றன. பருப்பு வகைகளில் உள்ள நார்ச்சத்து சர்க்கரையை மெதுவாக உறிஞ்ச உதவுவதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்படுவதோடு, மூல நோய் ஏற்படும் சாத்தியத்தைக் குறைக்கிறது.
5. கொட்டைகள் மற்றும் விதைகள் – பாதாம் பருப்பு, முந்திரி கொட்டை, ஆளி விதை மற்றும் சியா விதை போன்றவை :
கொட்டைகள் மற்றும் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச்சத்துகள் ஆகியவையால் நிறைந்துள்ளன. ஆளிவிதைகள் மற்றும் சியா விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், குடலில் ஜெல் போன்ற படிமத்தை உருவாக்கி மலத்தை சுலபமாக வெளியேற்ற உதவுகிறது. ஆளி மற்றும் சியா போன்ற சில விதைகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை, ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளதால், மூல நோயுடன் தொடர்புடைய இன்ஃப்ளமேஷனைக் குறைக்கவும் உதவுகின்றன.
மூல நோய் அறிகுறிகளுக்கு முறையான மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. மலக்குடலில் கணிசமான அளவு இரத்தப்போக்கு நேர்ந்தாலோ, அல்லது மலத்தில் இரத்தம் கலந்திருப்பதைக் கண்டாலோ, உடனே மருத்துவரை அணுகுவது அவசியம். அதனால், பிற கடுமையான நிலைமைகளை முன்கூட்டியே சமாளிக்கலாம். ஆசனவாய் பகுதியில் தொடர்ச்சியான அல்லது தீவிரமான வலி இருக்கும்பட்சத்தில் அதனை ஒரு மருத்துவ நிபுணரிடம் தெரிவித்து, சிகிச்சை பெற வேண்டும். உள் மூல நோய் வெளியே தென்பட ஆரம்பித்து, தானாகவே உள்வாங்கவில்லை என்றால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry