அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை இதுவரை அரசு நிறைவேற்றாத நிலையில், தீர்வு காணப்பட்டு விட்டதாக தவறான தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது என மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழுத் தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஊதியக் கோரிக்கையை பொறுத்தவரை 293, 354 ஆகிய இரு அரசாணைகள் குறித்து அரசு மருத்துவர்களின் சங்கங்களுக்கு இடையே மாறுபட்ட கருத்து இருந்தது. அவர்களுக்குள் ஒருமித்த கருத்தை உருவாக்கி இன்று அந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாக தவறான தகவலை தெரிவித்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது.
அதுவும் அரசு மருத்துவர்கள் அரசாணை 354ஐ அமல்படுத்த வேண்டும் என்ற ஒரே ஒரு ஒற்றை கோரிக்கைக்காக ஒருமித்த கருத்துடனே போராடி வந்தனர். யாருமே கேட்காத அரசாணை 293 என்ற புதிய ஆணையை வெளியிட்டு மருத்துவர் சங்கங்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தியதே திமுக ஆட்சி அமைந்த பிறகு தான். அப்படியிருக்க 34 முறை பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்திருக்கும் அமைச்சர், அரசாணை 354 வேண்டும் என மருத்துவர்கள் நீண்டகாலமாக கோரி வரும் நிலையில், அதை செய்யாமல் புதிய அரசாணையை வெளியிட்டது ஏன் என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.
அந்த அறிக்கையில் மருத்துவர்கள் இங்கு மட்டுமல்ல உலக அளவில் மதிக்கப்பட வேண்டிய சமூகத்தை சார்ந்தவர்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் தமிழகத்தில் மட்டுமே அரசு மருத்துவர்கள் உரிய ஊதியம் வேண்டி நீண்டகாலமாக போராடி வருகிறார்கள் என்பதை அமைச்சருக்கு நினைவுப்படுத்த விரும்புகிறோம்.
அதுவும் திமுக ஆட்சி அமைந்த பிறகு, ஊதியக் கோரிக்கைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ள வந்த மருத்துவர்களை, காவலர் மூலம் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார்கள். அதாவது ஜனநாயக நாட்டில் அமைதியாக போராட்டம் நடத்துவதற்கு கூட உரிமை மறுக்கப்பட்டதை மருத்துவர்களால் மறக்க முடியாது.
Also Read : நடுராத்திரியில் பசிக்குதா? ஸ்வீட், சாக்லெட் சாப்பிடனும் போல இருக்கா? அப்போ இந்தப் பதிவை மிஸ் பண்ணிடாதீங்க!
கோரிக்கைக்காக போராடிய டாக்டர் லட்சுமி நரசிம்மன் உயிர் தியாகம் செய்தது குறித்து நம் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் எந்த கோரிக்கைக்காக அவர் உயிரை கொடுத்தாரோ, அந்த கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்பதை மட்டும் ஏன் அமைச்சர் நினைத்து பார்க்கவில்லை?
அரசாணை 354 ஐ அமல்படுத்த வேண்டும் என சட்டசபையில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசை வலியுறுத்திய போது அமைச்சர் பதிலேதும் தெரிவிக்கவில்லை. கலைஞரின் நினைவிடத்தில் கோரிக்கை மனு சமர்ப்பிக்க சென்று மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட போதும் அமைச்சர் மவுனமாகவே இருந்தார்.
பொதுவாக தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிமுறைகளை அரசு பின்பற்றி வருகிறது. ஆனால் நாடு முழுவதும் அரசு மருத்துவர்களுக்கு டெல்லி எய்ம்ஸ்க்கு இணையான ஊதியம் தரப்பட வேண்டும் என அறிவுறுத்திய நிலையில் இதுவரை அதை அமல்படுத்தவில்லை.
அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை 6 வாரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு 6 மாதங்கள் கடந்த பின்னரும் நீதிமன்ற உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை. அதேநேரத்தில் அரசாணை 354 ஐ அமல்படுத்த முடியாது என உத்தரவு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது மருத்துவர்களுக்கு அதிர்ச்சியளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து அரசு மருத்துவர்கள் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், 8 வாரத்திற்குள் (அக்டோபர் 28 ம் தேதிக்குள்) பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இத்தகைய நிலையில் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையில் தீர்வு காணப்பட்டு விட்டதாக எப்படி அமைச்சரால் சொல்ல முடிகிறது? திறமையுள்ள அமைச்சர் இவ்வாறு கூறுவது என்பது நாடகமா? அல்லது உயர் அதிகாரிகள் சொல்வதை அமைச்சர் குறிப்பிட்டுள்ளாரா?
2019ம் ஆண்டு போராட்டத்தின் போது எதிர்கட்சி தலைவராக இருந்த திரு. மு.க. ஸ்டாலின் அரசு மருத்துவர்களிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பது ஏன்? திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் அரசாணைக்கு தடை போடுவது ஏன்? போன்ற கேள்விகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் பதில் சொல்வார்களா?
எனவே இதுவரை திமுக அரசால் ஏமாற்றப்பட்டுள்ள, துரோகம் இழைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்களை, இதற்கு மேலும் காயப்படுத்துவதை விடுத்து அரசாணை 354 ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்க நடவடிக்கை எடுக்க அமைச்சரை வேண்டுகிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry