அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் 23.9.2024 அன்று நடந்த பேச்சுவார்த்தையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக டிட்டோஜாக் உயர்மட்டக் குழு தலைவர்கள் கருத்தொருமித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
இந்த நிலையில், 23.9.2024 மாலையில் தொடக்கக்கல்வி இயக்குனர் தலைமையில், தொடக்கக் கல்வி மாவட்ட அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் என சுமார் 850 அதிகாரிகள் கலந்துகொண்ட காணொளி கூட்டத்தில், இணை இயக்குநர்(நிர்வாகம்) கோபிதாஸ் பேசும்போது, கடந்த 10ம் தேதி டிட்டோஜாக் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக ஊதியத்தை பிடித்தம் செய்து அறிக்கை அளித்திட வேண்டும் என்று அழுத்தமான குரலில் தெரிவித்துள்ளார்.
No Work, No Pay என்பது நாங்கள் அறிந்திராதது இல்லை. ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் எனத் தெரியாமல் ஆசிரியர்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டக் களத்துக்கு வரவில்லை. ஆனால், காலையில் ஆசிரியர் சங்கங்களுடன் இணக்கமான பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடிக்குமாறு அன்று மாலையிலேயே வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு ஆணையிட வேண்டிய அவசியம் என்ன? என்பதுதான் கேள்வியே.
Also Read : சிறார் ஆபாச படங்களை போனில் பார்த்துவிட்டு டெலிட் செய்வதும் குற்றம் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
இதுபற்றி நாம் கேள்வி எழுப்பியதும், ஊதியம் பிடித்தம் தொடர்பாக அரசாணை வெளியிடவில்லை என்று இணை இயக்குநர்(நிர்வாகம்) கோபிதாஸ் விளக்கம் தருகிறார். அரசாணையை அரசுதான் வெளியிட முடியும், இணை இயக்குநர் வெளியிட முடியாது என்பது நாம் அறிந்ததுதான். அரசாணை வெளியிடப்படவில்லை என்பது உண்மைதான். அதே அளவு உண்மை, காணொளி கூட்டத்தின்போது வாய்மொழி உத்தரவாக ஊதியத்தை பிடித்தம் செய்யச் சொன்னது. இதற்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் நேரடி சாட்சியாக இருக்கிறார்கள். இதில் எது உண்மை என்ற பட்டிமன்றம் தேவையில்லை.
அதேபோல், பேச்சுவார்த்தையில் விவாதம் செய்தவாறே தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ், காணொளிக் கூட்டத்தின்போது, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ₹5400/- தர ஊதியம் நிர்ணயம் செய்தது தவறு என்று தணிக்கை தடை இருந்தாலும், இல்லாவிட்டாலும், யாரெல்லாம் ₹5400/- தர ஊதியம் பெற்றிருக்கிறார்களோ அவர்களுடைய பணிப்பதிவேட்டை எடுத்துக்கொண்டு நாங்கள் வரச் சொல்கின்ற நாளில் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது அமைச்சரின் நிலைப்பாட்டுக்கு மீறிய செயலாகும்.
முதலமைச்சரின் அழுத்தத்தின் பெயரில்தான் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது என்பதை நாம் அறிகிறோம். சென்ற வாரம் வரை அரசாணை 243இல் திருத்தம் செய்ய முடியாது என்று கூறிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தேவையான திருத்தத்தை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் வெளியிட உள்ளதாக டிட்டோ ஜாக் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறை செயலாளரும் 100% அதில் உறுதியாக உள்ளார் என்பதை அறிகிறோம்.
போராட்டத்தினை ஒத்தி வைத்தது தவறு என தொடக்கக் கல்வி இயக்குனர் நினைக்கிறாரா? இல்லை அரசுக்கு எதிராக போராட வேண்டும் என்று நினைக்கிறாரா? பரிந்துரை செய்ய வேண்டிய தொடக்கக் கல்வி இயக்ககம், எதிர்க்கட்சி வழக்கறிஞர்களைப் போல் செயல்படுவது முறையுமல்ல; மாண்புமல்ல; என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எங்களைப் பொறுத்தவரை வரவேற்க வேண்டியதை, உடனடியாக வரவேற்போம்; எதிர்க்க வேண்டியதை அடுத்தக் கணமே எதிர்ப்போம்.
ஆசிரியர் சொந்தங்களே, அவரவர்களுக்கு மனதில் தோன்றிய கருத்துக்களை எல்லாம் மனம் போன போக்கில் பதிவு செய்திட வேண்டாம். 100% உங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்பதை உங்கள் மீது கொண்டுள்ள உரிமை உறவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சில நேரங்களில் கூட்டமைப்புகள் எடுக்கிற முடிவுகள் பாதுகாப்பான முடிவாகத்தான் இருக்கும் என்பதை உணர வேண்டும். வெளிப்படையாக எல்லாவற்றையும் பதிவு செய்ய இயலாது. திங்கள் கிழமை பேச்சுவார்த்தையில் நடைபெற்ற எல்லாவற்றையும் தனிப்பதிவாக இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு வெளியிட உள்ளோம்.” இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, டிட்டோஜாக் உயர்மட்டக் குழுவின் முடிவுப்படி, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதி மற்றும் பணி சார்ந்த 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10/9/2024 தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் சார்பாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைநகரங்களில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதன் தொடர்ச்சியாக வரும் 30ம் தேதி மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக டிட்டோ ஜாக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இதனால் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு அழுத்தம் ஏற்பட்ட காரணத்தால், திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே, 23.09.2024 அன்று டிட்டோ ஜாக் நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தினார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி, இயக்குநர்கள் கண்ணப்பன், நரேஷ் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு(டிட்டோ ஜாக்) 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவித்திருந்தது.
ஆசிரியப் பெருமக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க இன்று தலைமைச்… pic.twitter.com/03XXVnOMXv
— Anbil Mahesh (@Anbil_Mahesh) September 23, 2024
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிட்டோ ஜாக் சுழல்முறை தலைவர் காமராஜ் மற்றும் உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர், “அரசாணை 243 தொடர்பாக நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். நிதி சார்ந்த கோரிக்கையில் ரூ.5400 தர ஊதியம், பி.லிட் முடித்த ஆசிரியர்கள் விவகாரம், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்டவற்றை பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தோம். மத்திய அரசின் நிதியைப் பெற்று நிதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். எனவே கோட்டை முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பது என முடிவெடுத்துள்ளோம்.” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நிலையில், அன்று மாலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதியப் பிடித்தம், தர ஊதியம் போன்ற விவகாரத்தில், அமைச்சரின் நிலைப்பாட்டுக்கு நேர் எதிராக தொடக்கக் கல்வி இயக்குநரும், இணை இயக்குநரும்(நிர்வாகம்) நடந்துகொள்வது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry