வாய் சுகாதாரம் மிகவும் முக்கியமானது. யாராவது உங்களின் வாய் துர்நாற்றம் குறித்து கூறினால், எவ்வளவு சங்கடமான உணர்வை பெறுவீர்கள் என்பது புரிகிறது. அதற்குத் தான் வாய்வழி சுகாதாரத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். ஆனால், பெரும்பாலான மக்கள் பற்களை பராமரிப்பது மட்டுமே வாய் சுகாதாரம் என்று எண்ணுகின்றனர். நாக்கினை பற்றி யோசிக்க மறந்து விடுகின்றனர். ஆனால், நாக்கின் மூலமும் துர்நாற்றம் மற்றும் சில ஆரோக்கிய குறைப்பாடுகள் ஏற்படும்.
எப்போதும் மருத்துவர்கள் நாக்கை நீட்டச் சொல்லி பார்ப்பார்கள், ஏன் தெரியுமா? தொண்டை மற்றும் நாக்கை பார்க்கும்போது உடல் ஆரோக்கியத்தை கண்டுபிடித்துவிடலாம். நாக்கின் மேற்பரப்பில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா? அல்லது அது எவ்வாறு நகர்கிறது? என்பதை மருத்துவர் பார்ப்பார்.
Also Read : கலப்பட நெய்யும், ஊழியர்களுக்கு தண்டனையும்: திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து விளக்கும் கோவில் கல்வெட்டு!
இது வாயில் உள்ள பிரச்சனைகளையும், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் நிலையையும் குறிக்கலாம். அதற்கு மருத்துவரிடம்தான் செல்ல வேண்டும் என்று இல்லை. உங்கள் வாயில் உள்ள மோசமான பாக்டீரியாக்கள், உணவின் குப்பைகள் மற்றும் இறந்த செல்களை நீக்க நீங்கள் தினமும் நாக்கை சுத்தம் செய்வது முக்கியம். பாக்டீரியா, பூஞ்சை, இறந்த செல்கள் கூட உங்களின் வாய் துர்நாற்றத்துக்கு காரணமாக இருக்கும். உங்கள் நாக்கை ஒரு நாளைக்கு இரண்டு முறை சுத்தம் செய்வதன் மூலம், உங்கள் நாக்கு எவ்வாறு தோற்றமளிக்கிறது மற்றும் உணர்கிறது என்பதை நீங்களே சரிபார்க்கலாம்.
ஆரோக்கியமான நாக்கு எப்படி இருக்கும்?
சாப்பிடுவது, பேசுவது மற்றும் பிற முக்கிய செயல்பாடுகளில் நாக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஒரு தசை அல்ல, மாறாக ஒரு தசை உறுப்பு. அது நகர்வதற்கு உதவும் எட்டு தசை ஜோடிகளால் ஆனது. நாவின் மேற்பரப்பு சிறிய புடைப்புகளால் மூடப்பட்டிருக்கும். அவை பாப்பிலா என்று அழைக்கப்படுகின்றன, இது ஒரு கடினமான மேற்பரப்பைக் கொடுக்கும்.
இவை சில நேரங்களில் சுவை மொட்டுகள் என்று தவறாகக் கருதப்படுகின்றன. சுமார் இரண்டு முதல் மூன்று லட்சம் பாப்பிலாக்களில், ஒரு சிறிய பகுதியே சுவை மொட்டுகளைக் கொண்டுள்ளது. பெரியவர்களுக்கு 10,000 சுவை மொட்டுகள் உள்ளன, அவை சாதாரண கண்ணுக்குத் தெரியாது, முக்கியமாக அவை நாக்கின் முனை, பக்கங்கள் மற்றும் பின்புறத்தில் குவிந்துள்ளன.
ஆரோக்கியமான நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும், இருப்பினும் இருண்ட முதல் வெளிர் இளஞ்சிவப்பு வரை நபருக்கு நபர் நிறம் மாறுபடும். நாக்கில் ஒரு சிறிய அளவு வெள்ளை பூச்சு சாதாரணமாக இருக்கலாம். ஆனால் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அல்லது நிறமாற்றம் ஒரு நோய் அல்லது பிற சிக்கல்களுக்கான குறியீடாக இருக்கும்.
நாக்கை ஏன் சுத்தம் செய்ய வேண்டும்?
நாக்கை சுத்தம் செய்ய அதிகபட்சம் 10-15 வினாடிகள்தான் ஆகும், ஆனால் இது உங்கள் ஆரோக்கியத்தை சரிபார்க்க ஒரு சிறந்த வழியாகும். வழக்கமாக பல் துலக்கும்போது உங்கள் நாக்கை மெதுவாக ஸ்க்ரப் செய்வதன் மூலம் சுத்தம் செய்யலாம். இது உணவுக் கழிவுகளையும் அகற்றி, அதன் கரடுமுரடான கடினமான மேற்பரப்பில் நுண்ணுயிரிகள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது.
நாக்கை சுத்தம் செய்வது துர்நாற்றத்தை தடுக்கும்
உங்கள் நாக்கை சுத்தம் செய்வது துர்நாற்றம் வீசும் சுவாசத்தை எதிர்த்துப் போராட உதவும். பொதுவாக நாக்கின் மேற்பரப்பில் மறைந்திருக்கும் வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அகற்றுவதில் நாக்கு ஸ்கிராப்பர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சுவையை மேம்படுத்துதல்: மேற்பூச்சுள்ள நாக்கு, உணவை ருசித்து ரசிக்கும் திறனை பாதிக்கும். உங்கள் நாக்கில் உள்ள படிவுகளை அகற்றுவதன் மூலம், உங்கள் சுவை உணர்வை மேம்படுத்தலாம் மற்றும் உங்கள் உணவின் சுவைகளை முழுமையாக அனுபவிக்கலாம்.
ஒவ்வொரு நாளும் இரண்டு முறை நாக்கினை சுத்தம் செய்வதன் மூலம் உங்களின் சுவை உணர்வை மேம்படுத்தலாம். நாக்கை சுத்தம் செய்வதால் நாக்கில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பிற தேவையற்ற பொருட்கள் நீக்கப்படும். இதனால் நாக்கில் உள்ள சுவை மொட்டுகள், நீங்கள் உண்ணும் உணவின் சுவையை சிறந்ததாகக் காட்டும். அதேபோல், கசப்பு, இனிப்பு, உப்பு மற்றும் புளிப்பு உணர்வுகளை சிறப்பாக வேறுபடுத்திக் காட்டும்.
உணவை உடைத்து உமிழ்நீருடன் கலக்க உதவுவதன் மூலம் செரிமானத்தின் ஆரம்ப கட்டத்தில் நாக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. சுத்தமான நாக்கு இந்த செயல்முறையின் செயல்திறனை மேம்படுத்துகிறது மற்றும் சிறந்த செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு பங்களிக்கிறது. பல் சிதைவு மற்றும் வாய் துர்நாற்றத்துக்கு வழி செய்யும் கெட்ட பாக்டீரியாக்களை நாக்கை சுத்தப்படுத்துவதன் மூலம் நீக்க முடியும். அதேபோல் தினமும் நாக்கை சுத்தம் செய்வதால் உங்கள் வாயில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரிக்க முடியும்.
உணவு செரிமானம் என்பது உங்கள் வாயிலிருந்து தான் தொடங்குகிறது. நம் உமிழ்நீரில் உள்ள நொதிகள் மூலம் குடல் உணவை எளிதில் செரிமானம் செய்யும். தினமும் நாக்கை சுத்தம் செய்யும் போது, உமிழ்நீரில் உள்ள நொதிகள் சிறப்பாக செயல்படும். இதனால் செரிமானமும் சிறந்ததாக இருக்கும்.
காலையில் பல் துலக்கும் போது, நாக்கினையும் சுத்தம் செய்வதால், இரவு முழுவதும் உங்கள் வாயில் சேர்ந்து இருக்கும் நச்சுக்களை நீக்க முடியும். அதேபோல் நாக்கை சுத்தம் செய்யும் போது உள்புற உறுப்புகள் மெதுவாக செயல்படத் துவங்கும். அதுமட்டுமின்றி, இது உங்கள் நாளை புதியதாகவும், சுத்தமாகவும் உணரச் செய்யும்.
வாயில் உள்ள இறந்த செல்கள், பாக்டீரியா அல்லது உணவுத் துகள்கள் தான் வாய் துர்நாற்றத்திற்கு வழி வகுக்கும். இதுகுறித்து 2005-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தொடர்ந்து ஏழு நாட்களுக்கு, ஒரு நாளைக்கு இரண்டு முறை என்ற வீதம் நாக்கினை சுத்தம் செய்யும் போது, வாயில் உள்ள மியூட்டன்ஸ் ஸ்ட்ரெப்டோகாக்கி மற்றும் லாக்டோபாகிலி பாக்டீரியாக்களின் நிகழ்வுகள் குறையும் என்று கண்டறியப்பட்டது. இந்த வகை பாக்டீரியாக்கள் தான் வாய் துர்நாற்றம் மற்றும் பல் சிதைவுக்கு காரணம் என்று அறியப்படுகிறது.
Also Read : வெண்டைக்காயின் வியப்பூட்டும் மருத்துவ குணங்கள்! Crispy Lady Finger Roast Recipe: Easy and Delicious!
நாக்கை சுத்தம் செய்வது என்பது வாய் வழி சுகாதாரத்தை மேம்படுத்தும் ஒரு முறை தான் என்றாலும், இதன் மூலம் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். ஆம், இது உண்மை தான். உங்கள் வாயில் நச்சுகள் மற்றும் கெட்ட பாக்டீரியாக்கள் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கும். அதனைத் தடுக்க நாம் தினமும் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில், நாக்கை சுத்தம் செய்வதால் கெட்ட பாக்டீரியாக்கள் அழியும். இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைவது குறைந்து வலுப்பெறும்.
வாய் வழி சுகாதாரத்தை பராமரிக்க மூன்று நிலைகள் உள்ளன. அதில் முதலாவது பல் துலக்குவது தான். இரண்டாவது நிலை பற்களின் இடுக்குகளின் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வது. பின் மூன்றாவது நிலை தான் நாக்கினை சுத்தம் செய்வது. கண்ணாடியின் முன் நின்று, வாயை அகலமாகத் திறந்து நாக்கை வெளியே நீட்டிக் கொள்ளுங்கள். நாக்கை சுத்தப்படுத்தும் பொருளை நாக்கின் இரு முனைகளிலும் பிடித்து, நாக்கின் உட்பகுதியில் இருந்து வெளிப்பகுதி நோக்கி இழுத்து சுத்தம் செய்யுங்கள். அவ்வளவு தான். இது போல் மூன்றில் இருந்து ஐந்து முறை செய்து கொள்ளுங்கள். இதில், நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது, ஒவ்வொரு முறை சுத்தம் செய்த பின்னும் அதனை கழுவிவிட்டு மீண்டும் அடுத்த முறை பயன்படுத்த வேண்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry