உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி (இயற்பெயர் – தெய்வசிகாமணி, த/பெ கந்தசாமி), வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டிருக்கிறார். இந்த இலாகா மாற்றத்தின் பின்னணியில் ஆளுநர் ஆர்.என். ரவியின் கை ஓங்கி இருந்ததாக ராஜ்பவன் வட்டாரங்கள் உறுதியாகக் கூறுகின்றன.
தமிழக அமைச்சரவையிலிருந்து மூன்று பேர்(செஞ்சி மஸ்தான் – மனோ தங்கராஜ் – குன்னூர் ராமச்சந்திரன்) வெளியேற்றப்பட்ட நிலையில், நான்கு பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 6 அமைச்சர்களுக்கு இலாகா மாற்றப்பட்டுள்ளது. பனைமரத்துப்பட்டி இரா. ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, கோவி.செழியன், சா.மு. நாசர் ஆகியோர் இன்று அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இதில், இரா. ராஜேந்திரனுக்கு சுற்றுலாத் துறையும், செந்தில் பாலாஜிக்கு, அவர் வசம் ஏற்கெனவே இருந்த மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறையும், கோவி.செழியனுக்கு உயர் கல்வித்துறையும், சா.மு. நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நிதித்துறையுடன், சுற்றுச்சூழல் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் காதி மற்றும் பால்வளத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பட்டியலினத்தைச் சேர்ந்த கோவி. செழியன், அரசு தலைமைக் கொறடாவாக இருந்தார். தற்போது உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேறு இலாகா கூட கொடுத்திருக்கலாம். ஆனால், பொன்முடியை ஓரம்கட்ட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே உயர்கல்வித்துறையை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது.
சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த செந்தில்பாலாஜி கருணாநிதி, அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். அப்போது பூந்தட்டை கையிலேந்தி நின்றும், தனது காரில் முன் இறுக்கையில் அமருமாறு செந்தில் பாலாஜியிடம் கெஞ்சியும் பார்த்த திமுக மூத்த தலைவரும், திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடியால் உயர் கல்வித்துறை இலாகாவை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. 2019 எம்.பி. தேர்தலில் போட்டியிட்ட வாரிசுகளுக்கு 2024 தேர்தலிலும் ஸ்டாலின் வாய்ப்பளித்தார். ஆனால் 2019ல் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற பொன்முடியின் மகன் கவுதம சிகாமணிக்கு 2024 தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இந்நிலையில், ஆட்சிக்கு ஆளுநர் குடைச்சல் கொடுப்பது போலவும், திமுக ஆளுநரை வெளிப்படையாக விமர்சிப்பது போன்றும் வெளி உலகுக்கு நம்ப வைக்கப்படுகிறது. ஆனால் மூத்த தலைவரான பொன்முடி திமுகவில் ஓரங்கட்டப்படுவதற்கு ஆளுநர் ஆர்.என். ரவிதான் காரணம் என்று கூறப்படுகிறது. திமுகவின் முந்தைய ஆட்சிக் காலத்திலும் (2006 முதல் 2011) பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராகத்தான் இருந்தார். கூடுதலாக கனிமவளத்துறையும் அவர் வசம் இருந்தது.
விழுப்புரம் அரசு கல்லூரியில் பேராசிரியராக இருந்த பொன்முடி, சட்டசபைக்கு ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1989 முதல் 1991 வரையான திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராகவும், 1996 முதல் 2001 வரையிலான ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருந்தார்.
இப்படி நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட பொன்முடிக்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே முட்டல் மோதல் இருந்துகொண்டே வந்தது. தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டின் முதல் கூட்டம் 2023 ஜனவரி 9-ந் தேதி அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்தார்.
இதையடுத்து ஆளுநர் வாசித்த உரை அவைக்குறிப்பில் இடம் பெறாத வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்து பேசினார். இதைக் கேட்ட ஆளுநர் ரவி சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அப்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, ஆளுநரை நோக்கி ஆவேசமாக கையை அசைத்தபடி போய்யா… என்று சொல்வது போன்ற வீடியோ பதிவுகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதேபோல், துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள், துணைப் பேராசிரியர்கள் நியமனத்தில் பொன்முடியின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்தார். இதனால், பல்கலைக்கழக வேந்தர் – இணை வேந்தர் என்ற அடிப்படையில் இருவருக்கும் இடையே கருத்து மோதல் வலுத்தது. இந்த நிலையில்தான் ஆளுநரிடம் திராவிட மாடல் அரசு சில சலுகைகளைக் கேட்க, அதற்குப் பதிலாக பொன்முடியின் இலாகாவை மாற்றுமாறு ஆளுநர் நிர்ப்பந்தம் செய்தார் என தெரிகிறது. பாஜகவுடன் நெருக்கும் காட்டும் திமுக, அப்போதே பொன்முடியை காவுகொடுக்க தலையசைத்துவிட்டது.
5 நாட்களுக்கு முன் துணை வேந்தர் இல்லாமலேயே சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தான் காவுகொடுக்கப்பட உள்ளதை அறிந்த பொன்முடி, விழாவுக்கு வந்த ஆளுநரை, முகம் நிறைய சிரிப்புடன் மிகவும் பவ்யமாக வரவேற்றார். ஆனால் எதுவுமே எடுபடவில்லை.
கட்சியில் மிக முக்கியமான சீனியர், துணைப் பொதுச்செயலாளர், அமைச்சரவையிலும் பெரிய துறை என ஆதிக்கம் செலுத்திவந்த பொன்முடிக்கு ஏன் வனத்துறை கொடுக்கப்பட்டது என அவரது ஆதரவாளர்களிடம் கேட்டபோது, இலாகா மாற்றம் அவர் கேட்டதுதான். கருணாநிதிக்கு பேராசிரியர் அன்பழகன் எப்படி இருந்தாரோ அப்படித்தான் மு.க. ஸ்டாலினுக்கு பொன்முடி. மூத்த அமைச்சர்கள் பலர் உள்ளனர். அவர்களது இலாகாவை மாற்ற துணியாத முதலமைச்சர், பொன்முடியை மட்டும் மாற்றுகிறார்.
உதயநிதிக்கு மூத்த அமைச்சர்கள் தேவை இல்லை என்றால், அனைவரையும் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றிவிட்டு கட்சிப்பணிக்கு அனுப்பலாமே? அதைவிடுத்து பொன்முடியை மட்டும் இலாகா மாற்றம் செய்வது ஏன்? அமைச்சர் எ.வ. வேலு பின்னணியில் நடந்த சதிதான் இந்த அவமானத்திற்கு காரணம். ஈகோ மோதல் காரணமாக அமைச்சர் எ.வ. வேலுவும், பொன்முடிக்கு எதிராக காய் நகர்த்தி வந்தார்.
தனது மகனுக்கு எம்.பி. சீட் கிடைக்கவில்லை என்பதால், சிட்டிங் எம்.பி.யாக இருந்த பொன்முடி மகன் கவுதம சிகாமணிக்கு எ.வ. வேலு சீட் கொடுக்கவிடாமல் செய்தார். அதிமுக, பாக்யராஜ் கட்சி என பல கட்சி மாறி வந்தவர் எ.வ. வேலு. ஆனால், பொன்முடி, துவக்கம் முதல் திமுகவில் பயணிப்பவர். கருணாநிதி, மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு விசுவாசமாக இருப்பவர். தீவிர திராவிட இயக்க சிந்தனையாளர். இப்படிப்பட மூத்த தலைவரை அவமதிப்பது கட்சிக்கு நல்லதல்ல. ஆனால் கெட்டதிலும் நல்லது என்பது போல, எ.வ. வேலு ஆதரவாளரான செஞ்சி மஸ்தான் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால், 7 தொகுதிகளும் பொன்முடி வசம் வந்துவிட்டது” என்று கூறினார்கள்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry