(ஜுனியர் விகடன் இணையதளத்தில் மேகலாஸன் எழுதியுள்ள செய்திக்கட்டுரையை வேல்ஸ் மீடியா வாசர்களுக்காக பதிவிடுகிறோம்)
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக ‘சவுக்கு சங்கர்’ மீது அடுத்தடுத்து குண்டர் சட்டத்தில் வழக்குகள். நிமிடங்களில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரின் கை உடைக்கப்பட்டது! ‘பழநி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்’ என்று போகிற போக்கில் வாயைத்திறந்த திரைப்பட இயக்குநர் மோகன்ஜி… அடுத்த நொடியே கைது. சிறையில் மோகன்ஜிக்கு அடி, உதை.
இதெல்லாமே தமிழகக் காவல்துறையின் வீரப்பராக்கிரமங்கள்தான். ஆனால், இத்தகைய ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ கொண்ட இதே காவல்துறை, ‘தமிழகத்தின் தலைநகரிலிருக்கும் அண்ணா நகரில் பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்’ என்கிற குற்றச்சாட்டுக்கு கொடுத்த முக்கியத்துவம் என்ன தெரியுமா?
அந்தச் சிறுமியின் அப்பா மற்றும் அம்மாவை காவல் நிலையத்துக்கு வரவழைத்து, இரவெல்லாம் அடித்து உதைத்தது. அதுவும், குற்றம்சாட்டப்பட்ட சதீஷ் என்ற நபர் நாற்காலியில் அமர்ந்திருக்க, அவர் முன்பாகவே இந்தக் கொடுமையை அரங்கேற்றியிருக்கிறார், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் ராஜி. இப்படிப்பட்டவர், அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கே ஆய்வாளர், என்பதுதான் கொடுமையின் உச்சம். காக்கிச் சட்டையைப் போட்டுவிட்டாலே… ‘ஆணென்ன பெண்ணென்ன’தானோ?
இந்தக் கொடுமைகளுக்கு எதிராக, தாமாக முன்வந்து சாட்டையை சுழற்றியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், தற்போது வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. ஒரு வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்படுகிறது என்றால், அது மாநில காவல்துறைக்குத்தான் தலைகுனிவு. ஆக, காவல்துறையை தன் பாக்கெட்டுக்குள் வைத்திருக்கும் முதலமைச்சர் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
பாவம்… சிறையிலிருந்து வெளிவந்த ‘தியாகி’ செந்தில்பாலாஜுக்கு அடுத்த நொடிகளிலேயே மரியாதை செய்து, மீண்டும் மந்திரியாக்கி அழகு பார்க்க வேண்டும்; ஆருயிர் அன்புச்செல்வனுக்கு துணை முதல்வர் பதவி கிரீடத்தை வைத்து அழகு பார்க்க வேண்டும். அதற்கே நேரமில்லை… எனும்போது, இதற்கெல்லாம் எப்படி????
ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால், ஓடோடிகூட வரவேண்டாம். ஊடகமாடிக்கூட வரலாம். அப்படித்தான் ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’ நாளிதழில் முதலில் இந்தக் கொடுமை குறித்து வெளியான கட்டுரையைப் படித்துவிட்டு, தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தது உயர் நீதிமன்றம். ஓட்டுவாங்கி வெற்றிபெறாத நீதிபதிகள்தான் ஓடோடி வந்தனர், அந்த அப்பாவி சிறுமிக்காக!
சரி… முதலமைச்சரே தலையிடக்கூடிய அளவுக்கு அப்படி என்ன முக்கியமான வழக்கு? என்கிற கேள்வி எழலாம். அதே கேள்விதான் நமக்கும்…. உயர் நீதிமன்றமே தலையிட்டபிறகும்கூட, காவல்துறைக்கே அமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் கொஞ்சம்கூட கண்டுகொள்ளாத அளவுக்கு, குற்றம்சாட்டப்பட்ட நபர் அத்தனை செல்வாக்கானவரா?
‘உடல் நிலை சரியில்லை’ என்றுதான் கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி, அந்த பத்து வயது சிறுமி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அந்தப் பிஞ்சு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை அறிந்து கொதித்த நல்ல மனம் படைத்த மருத்துவர், உடனே சம்பந்தப்பட்ட அண்ணா நகர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
விரைந்து வந்த காவல் ஆய்வாளர் ராஜி, சிறுமியின் குடும்பத்தையே மிரட்டியதோடு, காவல் நிலையத்துக்கு வரவழைத்து அடித்து, உதைத்து மிரட்டியுள்ளார். சம்பந்தப்பட்ட சதீஷின் பெயரைச் சொல்லக்கூடாது என்றும் சிறுமியைக் கடுமையாக அச்சுறுத்தியுள்ளார்.
இந்தப் பிரச்னையை, ஆகஸ்ட் முதல் வாரத்தில் உயர் நீதிமன்றம் கையில் எடுத்தபோதே… காக்கிகளைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழித்திருக்க வேண்டும். அவருக்கு கீழே நின்று, ஒட்டுமொத்த தமிழகக் காக்கிகளுக்குத் தலைவராக இருக்கும் டிஜிபி-யான சங்கர் ஜுவாலுக்கு ஒரு போன் போட்டு கேட்டிருக்க வேண்டும்; சென்னை மாநகரையே சமீபகாலமாக ‘துப்பாக்கி’ முனையில் காப்பாற்றிக் கொண்டிருக்கும் மாநகர காவல்துறை ஆணையர் ‘என்கவுன்ட்டர் புகழ்’ அருணுக்கு ஒரு வாட்ஸப் செய்தியாவது அனுப்பிக் கேட்டிருக்க வேண்டும்.
சரி, அப்படித்தான் ஏதும் நடக்கவில்லை. ஆங்கில நாளிதழில் தொடர்ந்து இதுதொடர்பாகக் கட்டுரைகள், விகடன் ப்ளஸ் மின்னிதழில் தலையங்கம், விகடன் ப்ளஸ் மின்னிதழில் கட்டுரை, அவள் விகடன் இதழில் தலையங்கம் என்று தொடர்ந்து வெளியானவற்றை பார்த்துக்கூட மு.க.ஸ்டாலின் யோசித்திருக்கலாம்.
ஆனால், எதுவுமே நடக்கவில்லை. போக்சோ வழக்கு என்றாலே அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை. அதிலும் பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவழக்கு என்றால், பதறியிருக்க வேண்டும். ஆனால், ஒரு பெண்ணாக இருந்தும் காவல்துறை ஆய்வாளர் ராஜி பதறவே இல்லை. உடனடியாக வழக்குப் பதிந்திருக்க வேண்டும்; குழந்தையையும் பெற்றோரையும் உளவியல் ஆலோசனைக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், இது எதையுமே செய்யாமல், குழந்தையின் பெற்றோரை அடித்து உதைத்திருக்கிறார் கொடூர மனம் படைத்தவராக.
இதையெல்லாம் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பிறகும்கூட பெரிதாக நடவடிக்கை இல்லை. பெயருக்கு வழக்குப் போட்டனர். புகார் அளிக்கப்பட்டு பத்து நாள்களுக்கு பிறகு, சதீஷை கைது செய்தனர். இதற்கிடையே, சிறுமியை உளவியல் ஆலோசனைக்கு அனுப்பினார்கள்.
உளவியல் ஆலோசனை கொடுத்த பெண், அந்தச் சிறுமி மீது கூடுதல் அக்கறை காட்டிவிட்டாரோ என்னவோ… அவரையும் அந்தப் பணியிலிருந்து விரட்டிவிட்டதோடு, அவருக்கும் நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். நடப்பதையெல்லாம் பார்த்தால், கொலை வழக்கில் சிக்கிய கன்னட நடிகர் தர்ஷன் போல, சதீஷுக்கு சிறைச்சாலையில் சகல வசதிகளையும் செய்துகொடுத்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது.
முதலில் வழக்கை விசாரித்தபோது, ஆய்வாளர் ராஜி மீது நடவடிக்கை எடுத்திருப்பதாக நீதிமன்றத்தில் ஒரு தகவலை அரசுத் தரப்பில் சொன்னார்கள். அப்போது, நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. அடுத்தக் கட்டமாக, நேற்று (அக்டோபர் 1) நடந்த விசாரணையின்போது, ஆய்வாளர் ராஜி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைப் பற்றிக் கேள்விப்பட்ட நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் இருவரும், அதிர்ந்தே போனார்கள். ‘சிறுமி சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்கக்கூடாது’ என்பதுதான் ராஜி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை.
இதற்குப் பிறகுதான், ”இந்த வழக்கில் சிறுமிக்கும் அவருடைய குடும்பத்துக்கும் சட்டப்படியான உதவிகள் கிடைக்கவில்லை. போக்சோ சட்டத்தின் அத்தனை விதிகளும் காவல்துறையால் மீறப்பட்டுள்ளன. தமிழ்நாடு காவல் துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். அதனால், வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுகிறோம்” என்று மனம் நொந்து போய் கூறியுள்ளனர் நீதிபதிகள்.
சிறுமியின் வாக்குமூலத்தை, செல்போனில் பதிவு செய்தது ஆய்வாளர் ராஜி. அந்த வாக்குமூலம் மீடியாக்களில் கசிந்துவிட்டது. இதற்காக ஒரு பத்திரிகையாளர் மீதும், யூடியூபர் மீதும் வழக்குப்போட்டிருப்பதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில சொன்னார். அந்த வாக்குமூலம் அவர் மூலமாகத்தான் வெளியில் கசிந்திருக்க வேண்டும். இதையும் கேள்விக்குள்ளாக்கிய நீதிபதிகள், ‘ஆய்வாளர் ராஜி மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை?’ என்று சாட்டை வீசியிருக்கின்றனர். தலை கவிழ்ந்திருக்கிறார், அரசுத் தரப்பு வழக்கறிஞர்.
ஒரு வழக்கு உள்ளூர் காவல்துறையிடமிருந்து சி.பி.ஐ-க்கு மாற்றப்படுகிறது என்றாலே ஒட்டுமொத்த காக்கியும் தலைகுனிய வேண்டும். ஆனால், காலகாலமாக எங்களுக்கு இதெல்லாம் சாதாரணமப்பா… என்று கூடுதலாக கஞ்சியைப் போட்டு அயர்ன் செய்துகொண்டு விரைப்பாக மீண்டும் வீதிக்கு வந்து அடுத்த வசூலில் ஈடுபட ஆரம்பித்துவிடுவார்கள்.
ஆனால், பெண் இனத்தையே காக்க வந்த திராவிட மாடல்???? அ.தி.மு.க ஆட்சியில் பொள்ளாச்சியில் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக, பொங்கி மாய்ந்து மகளிர் அணி தலைவி கனிமொழியை பொள்ளாச்சிக்கே போய் போராடச் சொன்ன திராவிட மாடல் தலைமை வெட்கப்பட வேண்டாமா? சொல்லப்போனால்… சி.பி.ஐ அமைப்பின் லட்சணமும் நாடறிந்ததே. அவர்களின் கையில்தான் பொள்ளாச்சி வழக்கே இருக்கிறது. ஆனால், பத்து வயது சிறுமியின் வழக்கு, மாண்பமை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நேரடி அக்கறையின் பேரில், கை மாற்றப்பட்டிருக்கிறது. அதற்காகவாவது நீதியை சி.பி.ஐ நிலைநாட்டும் என்று நம்புவோம்!
Source : காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் ‘திராவிட மாடலே’… கொஞ்சம்கூட வெட்கமாக இல்லையா?
நன்றி : ஜுனியர் விகடன்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry