
தமிழ்நாட்டில், வரும் டிசம்பர் மாதத்தில் நடத்தி முடிக்கப்பட வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அக்டோபர் மாதம் முடிந்துவிட்ட நிலையில், தேர்தல் நடத்துவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
2016 அக்டோபர் முதல் 2019 இறுதி வரையிலான காலகட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாமல் தனி அலுவலர்களின் மூலமே நிர்வாகம் நடத்தப்பட்டு வந்தது. 2019 இறுதியில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டன. 2021 இறுதியில் மீதமுள்ள மாவட்டங்களுக்கான தேர்தலும், அனைத்து மாவட்டங்களுக்குமான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டன.
உள்ளாட்சி அமைப்புகள் தன்னாட்சி அதிகாரங்களைப் பெற்ற சுயாட்சி அரசுகளாக இயங்க வேண்டும் என்பதைத்தான் அரசியலமைப்புச் சட்டம் பரிந்துரைக்கிறது. ஜனநாயகம் என்பதும் மக்கள் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகத்தைத்தான் குறிப்பிடுகிறது. அலுவலர்கள் மூலம் நடத்தப்படும் நிர்வாகத்தினை ஜனநாயகத்துக்கு உள்பட்ட நிர்வாகம் என எடுத்துக்கொள்ள முடியாது.
கடந்த முறை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத காலகட்டத்தில், 14வது மத்திய நிதிக்குழு நிதியும் நிறுத்தி வைக்கப்பட்டது. ஊராட்சியின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்களிக்கக் கூடிய இந்த நிதி வராததால் பல கட்டுமானப் பணிகள் நின்று போயின. உள்ளூர் தேவைகளை, பராமரிப்புப் பணிகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இந்த நிதி மிக முக்கியமாகத் தேவைப்பட்டது. ஆனால், மத்திய நிதிக்குழு ஆணையம் மிகத் தெளிவாக ஒன்றைச் சொல்லியது. அதாவது, ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். அவர்கள் மூலம் இயங்கும் ஊராட்சி மன்றம் இயற்றும் வளர்ச்சித் திட்டத்தின் அடிப்படையிலேயே நிதிகள் பகிரப்படும்’ என்பதைச் சொல்லிவிட்டார்கள்.
Also Read : ஜீன்ஸ் பேன்ட் வரலாறு! தொழிலாளர்களின் ஆடை பணக்காரர்களின் உடை ஆனது எப்படி? சின்னஞ்சிறிய பாக்கெட்டின் பின்னணி!
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குப் பதிலாகத்தான் வட்டார வளர்ச்சி அலுவலரை வைத்து நிர்வாகம் நடத்துகிறோம் எனத் தமிழ்நாடு அரசு எவ்வளவு சொல்லியும், இந்த குறுக்கு வழிகளைக் காரணமாக எடுத்துக்கொண்டு நிதியினை வழங்க முடியாது என்பதனை 14வது நிதிக் குழு நிதி ஆணையம் தெளிவாகச் சொல்லிவிட்டது. தற்போது 2020 முதல் 15வது நிதி ஆணையப் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இப்போதும் தேர்தல் நடத்தப்படாமல் போனால், மீண்டும் அந்த நிலைக்கு பஞ்சாயத்துகள் தள்ளப்படுமோ என்ற அச்சம் பலரிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது பல பணிகள் துவங்கி இருக்கும் நிலையில், இந்த நிதிகள் வராமல் இருந்தால் என்ன சூழல் ஏற்படும்? தேர்தல் நடக்காத காலகட்டத்தில் பணிகள் முடங்கியதால் பல ஆண்டுகள் முன்னேறிச் செல்ல வேண்டிய பஞ்சாயத்துகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன.
தற்போது தமிழ்நாட்டில் சுமார் 600க்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளை பேரூராட்சி, நகராட்சி அல்லது மாநகராட்சிகளோடு இணைக்கும் முயற்சியிலும், சில கிராமப் பஞ்சாயத்துகளை நேரடியாக பேரூராட்சியாக வகை மாற்றம் செய்யும் முயற்சியிலும் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி நிர்வாக ரீதியாக முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனைக் கண்டித்து கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுவதோடு, மக்கள் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்கள். ஜனநாயகத்தின் குரலைக் கேட்காமல் இருப்பது அல்லது அதனை முழுவதும் புறக்கணிப்பதுவிடலாம் என அரசு நினைப்பது ஆபத்தானது.
தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் தற்போது முறையாக, உரிய காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும்போது, சுமார் 9600க்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களில் சரிபாதி பெண்களாகவும், சுமார் 18% பேர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களாகவும், ஒரு சதவிகிதம் பேர் பட்டியல் பழங்குடியினராகவும் இருப்பார்கள். தோல்வி பயத்துக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அரசு காலம்தாழ்த்தினால், அது சமூக நீதியை கேள்விக்குறியாகிவிடும். சமூக நீதி மரபில் வந்த தமிழ்நாட்டின் நிர்வாக முறைக்கு இது நல்லதல்ல.
சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் வைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசு நிர்வாகத்தினை நடத்தலாம். ஆனால் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை எட்ட வேண்டும் என்றால், அது உள்ளாட்சிகள் மூலம் நடைபெறும் நிர்வாகத்தின் மூலமாகத்தான் சாத்தியமாகும். உள்ளாட்சித் தேர்தல் என்பது ஏதோ ஒரு சில பஞ்சாயத்துத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது மட்டும்தான் என்ற குறுகிய நோக்கத்தில் பார்த்துவிடக் கூடாது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டமைப்பில் மிக முக்கியமான அலகு உள்ளாட்சிகள். ஜனநாயகம் காத்திட உரிய காலத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி முடித்திட வேண்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry