கார்த்திகை தீபம் தமிழர்களின் பழைமையான பண்டிகையாகும். அகநானூறு போன்ற நூல்களில் இதைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பண்டிகையை கொண்டாடுவதற்கான முக்கியமான காரணம், சிவபெருமானை ஆராதிப்பதற்காகவும், அவரிடமிருந்து ஆசிகள் பெறுவதற்காகவுமேயாகும்.
கார்த்திகை தீபத்திருநாள் திருவண்ணாமலையில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீஅண்ணாமலையார் அருள்புரியும் திருவண்ணாமலையில் மாலை ஆறு மணிக்கு, ஏழு அடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தீபம் ஏற்றப்படுகிறது. இது சிவபெருமானின் அருளை பிரதிபலிக்கிறது.
ஒரு சமயம் மகாவிஷ்ணு, பிரம்மா இருவரும் சிவபெருமானின் அடி, முடியைத் தேடிச்சென்று அதைக் காண முடியாமல் தங்கள் தோல்வியை ஏற்றுக்கொள்கின்றனர். அப்போது மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் சிவபெருமான் ஒளிப்பிழம்பாய் காட்சியளித்தார். தாங்கள் கண்ட காட்சியை உலக மக்களுக்கும் காட்டி அருள வேண்டும் என்று இருவரும் கேட்டுக்கொள்ள, திருக்கார்த்திகை நாளன்று சிவபெருமான் பக்தர்களுக்கு ஒளிப்பிழம்பாய் ஜோதி வடிவில் காட்சியளிப்பதாக ஐதீகம். அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பெயர். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள் தரும். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.
அத்துடன் மற்றொரு வரலாறும் இத்தலத்திற்கு உண்டு. பிருங்கி முனிவர், சக்தியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையை பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார். அவள் இத்தலத்தில் அவருடன் மீண்டும் இணைய தவமிருந்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று, அர்த்தநாரீஸ்வரராக காட்சிகொடுத்தார். பிருங்கி உண்மையை உணர்ந்தார்.
இந்நிகழ்வு ஒரு சிவராத்திரி நாளில் நிகழ்ந்தது. இவ்வாறு சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் இது. கயிலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால் லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. கார்த்திகை மாதத்தில், கிருத்திகை நட்சத்திரமும், பௌர்ணமியும் இணைந்து வரும் நாளில் மகா தீபம் ஏற்றுவது வழக்கமாகும்.
தீபத்திருநாள் அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, “ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்” தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்றுவிடுவர்.
ஏழு அடி உயரமுள்ள செப்புக் கொப்பரை, 3000 கிலோ பசுநெய், 1000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். தீப விழாவன்று இவர்கள் கோவிலில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கவுரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். 3 மணி நேரத்தில் இவர்கள் மலை உச்சியையடைந்து விடுவார்கள்.
Also Read : குலதெய்வத்தை வீட்டிற்குள் வரவழைக்கும் சக்தி வாய்ந்த முறை! குலதெய்வம் வீட்டில் தங்க சிம்ப்பிள் பரிகாரம்!
பின்னர் மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். 6.00 மணிக்கு பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக்கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்று சேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான்.
அர்த்தநாரீஸ்வரர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும், வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். மலைமீது உடனடியாக மகாதீபம் ஏற்றப்படும். இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும்.
இந்த மாதம் 13ம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் வருகிறது. இந்த நாளில் சரியாக மாலை 6 மணிக்கு வீடுகளில் தீபம் ஏற்றுவது சிறப்பு. வீட்டில் பயன்படுத்தும் காமாட்சி விளக்கு உள்பட மற்ற விளக்குகள், அகல்களை முதல் நாளே நன்கு சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தீபத்திருநாள் அன்று விளக்குகளை கழுவி சுத்தம் செய்வது சரியான முறையல்ல.
வாசலின் இருமுனைகளில் வைக்கப்படும் இரு விளக்குகள் மட்டும் புதிதாக இருக்க வேண்டியது அவசியமாகும். மற்ற இடங்களில் பழைய விளக்கைப் பயன்படுத்தலாம் தவறில்லை. சிலர் வாசலில் குத்துவிளக்கு ஏற்றுவார்கள். அவ்வாறு குத்துவிளக்கைப் பயன்படுத்தும்போது அழகாக கோலமிட்டு அதன் நடுவில் வைப்பதே சிறந்ததாகும்.
விளக்கில் நெய், நல்லெண்ணெய், பஞ்சதீப எண்ணெய் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். வீட்டில் மொத்தம் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். முதலில் வாசல் படியில் தீபமேற்றிய பிறகே வீட்டினுள் தீபத்தை எடுத்து வந்து வைக்க வேண்டும். பூஜையறையில் தீபமேற்றி எடுத்துச் செல்லக்கூடாது. அந்த தீபம் குறைந்தது 30 நிமிடங்களாவது எரிய வேண்டியது அவசியமாகும்.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம். திருஅண்ணாமலையார் கோவிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோவிலுக்கு உள்ளே பே கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம். அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry