ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை புலனப் பதிவாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “முந்தைய ஆட்சியாளர்களால் தையல் ஓவியம் உடற்கல்வி கணினி இசை என 16 ஆயிரம் பேர் சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். அந்த எண்ணிக்கையில் இறந்தவர்கள், ஊதிய பற்றாக்குறையால் பணியை விட்டு விலகியவர்கள் என 4000 பேர் இப்போது பணியில் இல்லை. எஞ்சியுள்ள 12000 பேர் தான் இப்போது பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தான் போராடி வருகிறார்கள்.
முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொகுப்பூதியத்தில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் என 52,000 பேர் பணியமனம் செய்யப்பட்டார்கள். கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அனைவருடைய வேண்டுகோளினையும் ஏற்று கொண்டதோடு அவர்களின் ஊதியப் பாதிப்பினையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒரே கையெழுத்தில் அவர்கள் அனைவரையும் காலமுறை ஊதியத்திற்கு கொண்டுவந்து பணிவரன் முறை செய்து ஆணை வழங்கினார். நெஞ்சிருக்கும் வரை எவராலும் இதை மறக்கத்தான் முடியுமா?
கருணாநிதியின் மகனாக, தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வரும் இந்த 12 ஆயிரம் பேரையும் பணி நிரந்தரம் செய்து, அவர்களை முழு நேர சிறப்பாசிரியர்களாக ஆணை வழங்கி உதவிடுமாறு பாதிக்கப்பட்டவர்களின் சார்பாகவும், ஆட்சியின் மீது அக்கறை கொண்டுள்ள தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பெரிதும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
மறைந்த முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நாங்கள் போராடுகிற பொழுது, என் பெயருக்கு முன்னால் உள்ள கருணை என்னிடம் நிறைய இருக்கிறது, ஆனால் பின்னால் உள்ள அந்த இரண்டு எழுத்து (நிதி) என்னிடம் இல்லையே என்று நகைச்சுவையாக பேசுவார். ஆனால் அவரது காலத்தில்தான் நான்கு ஊதிய குழுக்களை அமல்படுத்தினார். மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொண்டு வந்தார்.
தங்கள் ஆட்சிக் காலத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டுள்ள பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட ஏதாவது சிலவற்றையாவது செய்து கருணாநிதி அரசின் சரித்திரத்தினை தொடர வேண்டுமாய் மீண்டும் மீண்டும் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒரு முதலமைச்சர்… ‘தமிழ்நாடு முதலமைச்சர்’ என்ற வரலாற்று பதிவு ஏற்படாதவாறு பாதுகாத்திட வேண்டுகிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Also Read : பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா? பூனை சகுனத்தில் மறைந்திருக்கும் அறிவியல் ரகசியம்!
முன்னதாக, தமிழகத்தில் அரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஆட்சியின்போதே பல்வேறு போராட்டங்களை தீவிரமாக நடத்தி வந்தனர். அப்போதைய போராட்டங்களில் தற்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நேரடியாக கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஆட்சி அமைந்த உடன் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
மேலும், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக தேர்தல் அறிக்கையிலும் தெரிவித்திருந்தனர். திமுகவின் தேர்தல் வாக்குறுதியின் 181 நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டு அனைத்து பகுதிநேர ஆசிரியர்களும் ஒன்றாக இணைந்து இன்று கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இதற்காக திரண்ட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீஸார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்துள்ளனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry